காஷ்மீரில் பயங்கரம் பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

Read Time:4 Minute, 45 Second

காஷ்மீரில் துணை ராணுவ வீரர்களின் (சிஆர்பிஎப்) வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 45 வீரர்கள் பலியானது நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது.

இந்த தாக்குதலை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்தி உள்ளனர்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதி புலவாமா மாவட்டம், காக்கபோரா பகுதியை சேர்ந்த அதில் அகமது எனவும், அவன் கடந்த ஆண்டுதான் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளான்.

தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட காரில் நிரப்பப்பட்டிருந்தவை, ஐ.இ.டி. வகையை சேர்ந்த பயங்கர வெடிகுண்டுகள் என தெரிய வந்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி காஷ்மீரில் உரி ராணுவ தளத்திலும் இதே ஜெய்ஷ் இ பயங்கரவாத அமைப்பினர்தான் கொடூரமான தாக்குதல் நடத்தி 18 வீரர்களை கொன்று குவித்தது நினைவுகூரத்தக்கது.

அந்த தாக்குதலுக்கு பின்னர் இந்த கார் குண்டு தாக்குதல்தான் மிக மோசமான தாக்குதலாக அமைந்துள்ளது.

சிஆர்பிஎப் பணி என்ன?

ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ள சிஆர்பிஎப் பாதுகாப்பு படை படையின் முதல் கட்ட பணியானது சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பது. உளவுத்துறையின் தகவல்கள் அடிப்படையில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை மேற்கொள்வது, ராணுவ ஆப்ரேஷன்களுக்கும் உதவியாக செயல்படுவது, மோதலுக்கு அடுத்து கோபமாக இருக்கும் மக்கள் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தும் போது அவர்களை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இப்போது 60000
சிஆர்பிஎப் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அனைத்து மாவட்டங்களிலும் கணிசமான அளவு நிலை நிறுத்தப்பட்டு உள்ளனர்.

2005-ம் ஆண்டுக்கு முன்னர் சட்டம் மற்றும் ஒழுங்கு பணியை மேற்கொள்வது எல்லை பாதுகாப்பு படை வசம் இருந்தது. இப்போது எல்லை பாதுகாப்பு படை எல்லையில் மட்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இப்போது சட்டம் மற்றும் ஒழுங்கு பணியில் அவற்றுக்கு தொடர்பில்லை. கடைசியாக சிஆர்பிஎப் பாதுகாப்பு படையினர் மீது கடந்த ஜூலையில் தாக்குதல் நடத்தப்பட்டது இழப்பை ஏற்படுத்தியது.

அப்போது இரண்டு பாதுகாப்பு படைவீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். 2018 ஸ்ரீநகரில் பாதுகாப்புப்படை முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அரை மணி நேரத்துக்கு மேல் நீடித்த சண்டையில் பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

சமீப காலங்களில் பள்ளத்தாக்கு பகுதியில் கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்படவில்லை. 1990-களில் இவை வழக்கமான தாக்குதலாக இருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு ஒரே ஒரு கண்ணி வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. 2018-ம் ஆண்டு பத்துக்கும் குறைவான தாக்குதல் நடத்தப்பட்டது.

மீண்டும் துல்லியத் தாக்குதல்?

கடந்த 2016 செப்டம்பரில் காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது ஜெய்ஷ்-இ-முகமது தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக செப்டம்பர் 28-ம் தேதி காஷ்மீரை ஒட்டிய பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவ வீரர்கள் நுழைந்து ஏராளமான தீவிரவாத முகாம்களை அழித்தனர். தற்போதும் அதேபோல பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மீண்டும் துல்லியத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. தீவிரவாதிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மீண்டும் ஒரு துல்லியத் தாக்குதல் நடத்துவது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கும் என பார்க்கப்படுகிறது.