பிரதமர் மோடி தொடங்கி வைத்த அதிவேக ‘வந்தே பாரத் ரெயில்’ பாதி வழியில் நின்றது

Read Time:2 Minute, 55 Second

பிரதமர் மோடி தொடங்கி வைத்த டெல்லி- வாராணசி இடையிலான அதிவேக ‘வந்தே பாரத் ரெயில்’ பாதி வழியில் நின்றது.

மணிக்கு 160 கிமீ பயணிக்கக் கூடிய வந்தே பாரத் அதிவிரைவு ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

முழுவதும் குளிரூட்டப்பட்ட 16 பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரெயிலில் 1,128 பயணிகள் பயணிக்கலாம். ரெயில் பெட்டிகள் அனைத்திலும் தானியங்கிக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. ரெயில் நிலையங்களின் வருகை குறித்து தகவல் தெரிவிக்கும் வசதியும், வை-ஃபை வசதியும் இந்த ரெயிலில் உள்ளன. நவீன தொழில்நுட்பத்திலான கழிவறை, ஒவ்வொரு இருக்கைக்குக்கும் தனித்தனி மின்விளக்கு வசதி, ஒவ்வொரு பெட்டியிலும் குளிர்பான வசதிகள் என ரெயில் முழுவதும் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன. டெல்லியிலிருந்து வாராணசி வரை வாரம் 5 முறை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.

பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில், மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய வந்தே பாரத் என்ற ரெயிலை சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில்பெட்டித் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) தயாரித்தது.

டெல்லியில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரெயில் வெற்றிகரமாக வாரணாசி சென்றடைந்த நிலையில், வாரணாசியில் இருந்து புறப்பட்டு டெல்லிக்கு வந்தது. அப்போது, டெல்லிக்கு முன்பாக 200 கி.மீ. தொலைவில் டுன்ட்லா எனும் இடத்தில் ரெயில் பழுதடைந்து நின்றது. இந்தப் பழுதுக்கான காரணம் என்ன என்று உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. ரெயிலை 40 கி.மீ. வேகத்துக்கு மேல் இயக்க முடியாமல் நின்றது. மேலும், பெட்டிகளில் மின்சாரம் செல்வதிலும் தடை ஏற்பட்டது. இதனையடுத்து பயணிகள் இறக்கி விடப்பட்டு வேறு ரெயிலில் அனுப்பப்பட்டனர்.

இதற்கிடையே வர்த்தக ரீதியான தனது முதல் பயணத்தை வந்தே பாரத் ரெயில் நாளை முதல் தொடங்குகிறது.

இதற்கான அனைத்து டிக்கெட்டுகளின் முன்பதிவு முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தக் கோளாறால், நாளை ரெயில் இயக்குவதில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.