பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாரை சீனா பாதுகாப்பது இப்படிதான்…!

Read Time:4 Minute, 17 Second

பயங்கரவாதத்திற்கு புகலிடம் கொடுத்து வளர்த்துவரும் பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டும் சீனா, இந்தியாவின் நடவடிக்கை ஒவ்வொன்றுக்கும் முட்டுக்கட்டையிட்டு வருகிறது.

இந்தியாவில் நடத்தப்படும் பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடைய ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2001-ல் இந்திய பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியதில் இருந்து இப்போது வரையில் பல்வேறு கொடூரமான தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளது. பதான்கோட், உரி, புல்வாமா தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது. பயங்கரவாத நிலைப்பாட்டில் பாகிஸ்தானுக்கு எதிரானவர்கள், இந்தியாவிற்கு எதிரானவர்கள் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ள பாகிஸ்தான், சர்வதேச அரங்கில் பல்வேறு தாக்குதலில் இருந்து சீனாவால் தப்பித்துக்கொள்கிறது.

2016-ம் ஆண்டு ஜனவரில் பஞ்சாப் மாநிலம் பதான் கோட்டில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்த உடனேயே, அந்த அமைப்பின் தலைவரான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரி ஐ.நா.வுக்கு இந்தியா கடிதம் அனுப்பி இருந்தது. மேலும் தாக்குதல் தொடர்பான வலுவான ஆதாரங்களையும் இணைத்திருந்தது. இந்தியா அளித்திருந்த அந்த ஆதாரங்களில் உள்ள தொழில்நுட்ப சாதகங்களை ஆராய்ந்த ஐ.நா. குழு இது பற்றி உறுப்பு நாடுகளின் கருத்துகளை கேட்டிருந்தது. தடை விதிப்பது குறித்து எந்த நாடும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதையடுத்து, அவர் மீது தடை விதிக்க ஐ.நா ஆயத்தமானது.

இந்த சூழலில் கெடு முடிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, இந்த விவகாரத்தை நிறுத்தி வைக்கும்படி ஐ.நா குழுவிடம் வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா கேட்டுக் கொண்டது. இதையடுத்து மசூத் அசார் மீதான தடையை ஐ.நா நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், இந்தியாவின் முயற்சிக்கு அப்போது பலன் கிடைக்கவில்லை. இப்போது புல்வாமாவில் 45 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்ட விவகாரத்திலும் சீனாவின் நிலைபாடு பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே உள்ளது.

வீட்டோ அதிகாரம்

பாகிஸ்தான் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மவுலானா மசூத் அசார் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ‘1267 குழு’ கூடியது. அப்போது 14 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் சீனா இதை ஏற்கவில்லை. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 5 நாடுகளுக்கு மட்டும் இந்த மறுப்புரிமை அதிகாரம் (வீட்டோ) உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ள அனைத்து உறுப்பு நாடுகளும் ஒரு தீர்மானத்தை அங்கீகரித்தாலும் ‘வீட்டோ’ அதிகாரம் படைத்த ஏதாவது ஒரு நாடு ‘எதிர்ப்பு தெரிவித்தால் அந்த தீர்மானம் ரத்தாகிவிடும். ஆரம்பத்தில் இந்த அமைப்புக்கு அஸ்திவாரமிட்ட 1. சீனா, 2. பிரான்ஸ், 3. ரஷியா, 4. இங்கிலாந்து, 5. அமெரிக்கா ஆகிய நாடுகள் ஐ.நா.சபையின் வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகளாக உள்ளன. மசூத் அசார் விவகாரத்தில் தனித்து நிற்கும் சீனா வீட்டோ அதிகாரத்தை பாகிஸ்தானுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது.