விவசாயம் மனித குலத்தை அழிவு பாதைக்கு அழைத்து செல்கிறதா?

Read Time:6 Minute, 18 Second

மனித குலத்தை விவசாயம் அழிவு பாதைக்கு அழைத்து செல்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் என்கிறது ஓர் ஆய்வு. ஆனால், நேரடியாக அல்ல. இயற்கையின் கண்ணியில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதுதானே? அந்த தொடர்புதான் மனித இருப்பை கேள்விக்குள்ளாக்கப் போகிறது.

அழியும் பூச்சி இனம்

உலகெங்கும் பூச்சி இனம் மெல்ல அழிந்து கொண்டிருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு. குறிப்பாக சொல்லவேண்டுமானால் உலகில் உள்ள பூச்சி இனங்களில் 40 சதவீதம் வியத்தகு வழியில் குறைந்து வருவதாக எச்சரிக்கிறது இந்த ஆய்வு.

இந்த ஆய்வு முடிவானது பயாலஜிக்கல் கன்சர்வேஷன் என்ற சஞ்சிகையில் பிரசுரமாகி உள்ளது. நம் வாழ்வில் அன்றாடம் கண்ட தேனீக்கள், எறும்புகள், மற்றும் வண்டுகள் பாலூட்டிகளைவிட 8 மடங்கு வேகத்தில் அழிந்து வருவதாக கூறுகிறது அந்த ஆய்வு. ஆனால் அதே நேரம், ஈ மற்றும் கரப்பான் பூச்சிக்கள் பெருகி வருவதாக கூறுகிறது அந்த ஆய்வு.

இந்த பூச்சிகளின் அழிவுக்கு விவசாயமும் காரணம் என்றால் நம்பமுடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறது அந்த ஆய்வு.

விவசாயம்

தீவிரமாக விவசாயம் செய்வது. அதற்காக அதிகளவில் பூச்சி மருந்துகள் பயன்படுத்துவது மற்றும் பருவ நிலை மாற்றம் ஆகியவை இந்த அழிவுக்கு காரணமென சுட்டிக் காட்டுகிறது ஆய்வு. பூச்சிகள் தானே? அவை அழிந்தால் என்ன? என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள். மனித இனம் இந்த பூமியில் இருக்க வேண்டுமானால், பூச்சிகள் இருக்க வேண்டும். மனித இன உள்ளிட்ட பிற உயிரிகளின் வாழ்வுக்கு பூச்சிகள் இருப்பது மிக முக்கியம்.

வெறும் பூச்சிகளா? அவை

உணவு சங்கிலியிலும், மகரந்த சேர்க்கையிலும் பூச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றான. பறவைகள், வவ்வால் மற்றும் சில பாலூட்டிகளுக்கு பூச்சிகள்தான் உணவு. உலகெங்கும் உள்ள 75 பயிர் வகைகளின் மகரந்த சேர்க்கைக்கு பூச்சி இனம் இன்றியமையாதது. மண்ணை வளமாக்க, பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் உயிரிகளை கட்டுப்படுத்த பூச்சி இனங்கள் தேவை.

இந்த ஆய்வு மட்டுமல்ல, இதற்கு முன்னால் செய்யப்பட்ட ஆய்வுகளும், பூச்சி இனங்கள் மெல்ல அழிந்து வருவதை சுட்டிக்காட்டி உள்ளன, குறிப்பாக பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடுகளில்.

பயாலஜிக்கல் கன்சர்வேஷனில் பிரசுரமாகி உள்ள இந்த ஆய்வானது, கடந்த 13 ஆண்டுகளில் உலகெங்கும் செய்யப்பட்ட 73 ஆய்வு முடிவுகளை பரிசீலித்துள்ளது.

உலகெங்கும் அனைத்து பகுதிகளிலும் 40 சதவீத பூச்சிகள் அழியும் தருவாயில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளார் ஃப்ரான்சிஸ்கோ, “தீவிரமாக விவசாயம் மேற்கொள்வதால், நகர்மயமாக்கலால், காடுகள் அழிக்கப்படுவதால், பூச்சிகளின் வசிப்பிடங்கள் அழிந்துவிட்டன. இவைதான் பூச்சிகளின் அழிவுக்கு முக்கிய காரணம்” என்கிறார்.

இரண்டாவது காரணம் பூச்சிக் கொல்லிகள்; மூன்றாவது காரணம் நோய்கிருமிகள்; நான்காவது காரணம் பரிவநிலை மாற்றம் என்கிறார் அவர்.

பூச்சிகள் அழிந்தால் வேறென்ன நடக்கும்?

மனித இனம் அழியும் என்பதுதான் சுருக்கமான பதில். இது குறித்து பிபிசி தமிழின் செய்தியாளர் மு.நியாஸ் அகமதுவிடம் பேசிய பூச்சியியல் வல்லுநர் பூச்சி செல்வம், “சுற்றுசூழல் சமநிலைக்கும், உணவு வளையத்திற்கும் பூச்சிகள் மிகவும் இன்றியமையாதது. பூச்சி இனத்தின் அழிவானது நேரடியாக மனித இருப்பை கேள்விக்குள்ளாக்கும்.” என்கிறார்.

தீவிரமான விவசயாமும் பூச்சி இன அழிவுக்கு ஒரு காறனம் என்று சுட்டிக்காட்டுகிறது இந்த ஆய்வு.

இது குறித்த கேள்விக்கு, பூச்சி செல்வம், “ஆம் நாம் விவசாயம் செய்யும் முறையில் நிச்சயம் மாற்றம் தேவை. பல விதமான செடி கொடிகள் இருக்கும் காடுகளில் எந்த பூச்சி தொந்தரவும் இல்லையே… ஒற்றை பயிர் சாகுபடி செய்யும் இங்குதான் பூச்சி பிரச்சனை” என்றார்.

“முதல்முதலாக பி.டி பருத்தி அறிமுகப்படுத்தப்பட்ட போது என்ன சொன்னார்கள்? பூச்சிக் கொல்லி தேவை இல்லை என்றார்கள். உண்மையில் நடந்ததென்ன? அதிகளவில் பூச்சிக் கொல்லிகள் தேவைப்பட்டது. பூச்சிக் கொல்லிகளை அதிகளவில் பயன்படுத்திய போது, தீமை செய்யும் பூச்சிகளுடன் இணைந்து அதிகளவில் நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்தன”

“ஏதாவது ஒரே ஒரு பூச்சி இனத்திற்கு எதிர்ப்பு சக்தி அதிகளவில் உண்டாகி பயிர்களையும் நாசம் செய்தன. பிற பூச்சி இனங்களுக்கும் ஊறு விளைவித்தன. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு விவசாயம் செய்யும் முறையிலும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். ஏனெனில், பூச்சிகளின் அழிவென்பது, மனித குலத்தின் அழிவுக்கு இட்டு செல்லும்.” என்று அவர் தெரிவித்தார். நன்றி – பிபிசி தமிழ்