புல்வாமா தாக்குதல்: ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து எங்கிருந்து வந்தது?

Read Time:3 Minute, 43 Second

புல்வாமாவில் தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் உயிரிழந்த வீர்ரகளின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடந்து வருகின்றன. பயங்கரவாதத்திற்கு உதவி செய்யும் பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடியை கொடுக்க வேண்டும் என்ற முழக்கம் இந்தியா முழுவதும் எழுந்துள்ளது.

இதற்கிடையே பாதுகாப்பு நிறைந்த ஸ்ரீநகர் – ஜம்மு நெடுஞ்சாலையில் இவ்வளவு அதிகமான வெடிப்பொருட்களுடன் பயங்கரவாதி நுழைந்தது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது. தடுக்கி விழுந்தால் ஒரு சோதனைச் சாவடி என்பது போன்றுதான் அங்கு சோதனைச் சாவடிகள் இடம்பெற்றிருக்கும். இத்தகைய சாலையில் இதுபோன்ற தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதி 350 கிலோ எடையிலான ஆர்டிஎக்ஸ் வெடிப்பொருட்களை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பயங்கரவாதி பயன்படுத்திய ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து எங்கிருந்து வந்தது? என்பது குறித்து ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநரின் ஆலோசகர் கே.விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.அனைத்து பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி ஆர்டிஎக்ஸ் மருந்து எவ்வாறு கொண்டு வரப்பட்டது? என்று தி இந்து பத்திரிக்கை எழுப்பிய கேள்விக்கு, ஸ்ரீநகர் நெடுஞ்சாலையை எப்போதும் போக்குவரத்து இல்லாமல் சுத்தமாக வைத்திருப்பது சாத்தியமில்லை.

நெடுஞ்சாலை பகுதியில் இணையும் வகையில் ஏறத்தாழ 70 இடங்களில் சிறுசாலைகள் குறுக்கிடுகின்றன. இருபுறமும் 35 சாலைகள் இருக்கின்றன. இந்த இணைப்புச் சாலைகள் வழியே எந்த வாகனமும் தேசிய நெடுஞ்சாலையை அடைந்துவிட முடியும். அதேபோல வாகனங்களின் பெருக்கமும் அதிகமாக இருக்கிறது. ஆதலால், வாகனச் சோதனை என்பது, இன்னும் மக்களுக்குக் கூடுதல் சிரமத்தையும், போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தும். ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகள் எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குக் குறிப்பிட்ட காலத்தில் கடத்தப்பட்டு ஒன்றுசேர்க்கப்பட்டு, இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்

இந்தத் தாக்குதலை தனியாக ஒரே ஒரு தீவிரவாதி மட்டுமே நடத்தி இருக்கிறார். இந்தத் தாக்குதல் நடந்து முடிந்த பின் எந்தவிதமான துப்பாக்கிச் சூடும் நடைபெறவில்லை. துப்பாக்கிச் சூடு நடந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்தத் தாக்குதலுக்கு யார் மூளையாக இருந்தது என்பது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். யாரேனும் துணை ராணுவப்படையினர் வாகனத்தைக் கண்காணித்தார்களா என்பதையும் விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளார்.