புல்வாமா தாக்குதல் எதிரொலி; எல்லையில் போர் பதற்றம்; பழிதீர்ப்போம் – சிஆர்பிஎப் படை உறுதி

Read Time:2 Minute, 22 Second

புல்வாமா தாக்குதல் எதிரொலியாக எல்லையில் போர் பதற்றம் காணப்படுகிறது.

புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு பாகிஸ்தான் என்ற அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரிச்சலுகை இனி ரத்தாகும் என்று தெரிகிறது. ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு நகரின் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

பாகிஸ்தான் தூதரை அழைத்துக் கண்டித்தது, பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர் டெல்லி திரும்ப அழைப்பு, ஜம்முவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு போன்ற நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளதால் இரு நாட்டு எல்லையில் போர் பதற்றம் காணப்படுகிறது. புல்வாமா சம்பவத்துக்கு அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, ஆப் கானிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் தங்கள் படை வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு கட்டாயம் பழிதீர்ப்போம் என மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) தெரிவித்திருக்கிறது.

புல்வாமா தாக்குதல் தொடர்பாக சிஆர்பிஎப் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிர் தியாகம் செய்த எங்கள் சகோதரர்களுக்கு தலைவணங்குகிறோம். இந்த கோழைத்தனமான தாக்குதலை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம். இதற்கு விரைவில் பழிதீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க பாதுகாப்புப் படையினருக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடியும் தெரிவித்துள்ளார்.