பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்ட ராணுவத்துக்கு முழு அதிகாரம்…

Read Time:4 Minute, 14 Second

பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க பாதுகாப்புப் படையினருக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி ஆவேசமாகக் கூறினார்.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்று கொண்டிருந்த பேருந்து மீது, தற்கொலைப் படை பயங்கரவாதி ஒருவன் கடந்த வியாழக்கிழமை காரை மோதி தாக்குதல் நடத்தியதில் வீரர்கள் 40 பேர் பலியாயினர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கார் குண்டு தாக்குதலில் 40 வீரர்கள் பலியானது நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது.

புல்வாமா தாக்குதலை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று காலை நடைபெற்றது. இதில் அமைச்சர் அருண்ஜெட்லி உட்பட பலர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் தீவிரமாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் டெல்லி – வாரணாசி வந்தே பாரத் புதிய ரயில் தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி,
பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க பாதுகாப்புப் படையினருக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி ஆவேசமாகக் கூறினார்.

பிரதமர் மோடி பேசுகையில், பயங்கரவாத தாக்குதலால் இந்தியாவை வலுவிழக்கச் செய்ய முடியாது. புல்வாமா தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். பயங்கரவாதிகள் மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேரிடும். அவர்கள் கடும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதிகளுக்கு எதிராக எப்போது, எங்கு, எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பது போன்ற விஷயங்களில் முடிவெடுக்க நமது பாதுகாப்புப் படையினருக்கு முழு சுதந்திரமும் அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலால் நாட்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர். எனவே, இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். நமது அண்டை நாடு (பாகிஸ் தான்) சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், தீவிரவாத தாக்குதல் மூலம் நம்மை தொந்தரவு செய்ய நினைக்கிறது. ஆனால், அவர்களது திட்டம் நிறைவேறாது. புல்வாமா தாக்கு தலில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இந்த துயரமான நிலையில், புல்வாமா தாக்குதலை அரசியலாக்க வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன். மத்திய அரசை விமர்சிப்பவர்களின் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், இந்தத் தாக்குதலால் நாடு கொந்தளிப்பில் உள்ளது. இந்த நேரத்தில் அரசியல் கட்சியினர் ஒருமித்த கருத்துடன் இருக்க வேண்டுகிறேன் என்றார்.