‘என்னால் முடிந்தது இதுதான்…’! 40 சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றார் வீரேந்தர் சேவாக் !

Read Time:2 Minute, 18 Second

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக வீரேந்தர் சேவாக் அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாத தற்கொலைப்படை தாக்குதலால் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த விவகாரம் தேசத்தையே சோகத்தில் மூழ்கச்செய்துள்ளது. வீர மரணம் அடைந்த 40 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்திற்கு ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ” வீரமரணம் அடைந்த இந்த வீரர்களுக்கு நாம் எது செய்தாலும் அது போதுமானதாக இருக்காது. ஆனால், என்னால் முடிந்தவரைக் குறைந்தபட்சமாக வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளின் முழுமையான கல்விச் செலவு அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன்.

என்னுடைய சேவாக் சர்வதேச பள்ளியில் படிக்க வைக்கிறேன் ” எனத் தெரிவித்துள்ளார். வீரேந்திர சேவாக் ஹரியானாவில் உள்ள ஹஜ்ஜாரில் சர்வதேச பள்ளிக்கூடம், பயிற்சிப்பள்ளி உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சேவாக்கின் பெருந்தன்மையான அறிவிப்பை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். அவருடைய பதிவை பகிர்ந்து வருகிறார்கள். சேவாக் போன்று பிற விளையாட்டு வீரர்களும் உதவிகளை அறிவித்து வருகிறார்கள்.