“போர் வந்தால் மீண்டும் பணியில் சேர நாங்கள் தயார்…” ஓய்வுபெற்ற ராணுவத்தினர் அறிவிப்பு

Read Time:2 Minute, 28 Second

சிஆர்பிஎப் மீதான தாக்குதல் எதிரொலியாக போர் வந்தால் மீண்டும் பணியில் சேர நாங்கள் தயார் என ஓய்வுபெற்ற ராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் பலியாகி உள்ளனர். மிக அதிகமான எண்ணிக்கையிலான இந்த பலியால் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் இடையே பாகிஸ்தானுக்கு எதிரான ஆக்ரோஷம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் வாழ்நாள் முழுவதும் மறக்காத வகையில் அடியை கொடுக்க வேண்டும் என்ற கோஷம் ஒருமனதாக எழுப்பப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் ராணுவ வீரர்களும் தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை அடக்க தாம் மீண்டும் பணியில் சேரத் தயராக இருப்பதாக ஓய்வுபெற்ற ராணுவத்தினர் அறிவித்து உள்ளனர்.

இதன் மீது அதன் சங்கங்களில் ஒன்றான ‘வாய்ஸ் ஆப் எக்ஸ்-சர்வீஸ்மென் சொசைட்டி’ சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”சிஆர்பிஎப் வீரர்கள் மீதான புல்வாமா தாக்குதலால் ‘வாய்ஸ் ஆப் எக்ஸ்-சர்வீஸ்மென் சொசைட்டி’ மிகுந்த துயரம் அடைந்துள்ளது. இந்தத் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம். மேலும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் தலைவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.

முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் மத்திய அரசுக்கு எங்கள் முழு ஆதரவை தெரிவிக்கிறோம். தேவைப்பட்டால் ராணுவத்தில் மீண்டும் சேர எங்கள் விருப்பத்தை தெரிவிக்கிறோம். மத்திய அரசு அனுமதித்தால் நாங்கள் ஜம்மு காஷ்மீர் செல்லவும் அங்கு போரிடவும் தயாராக உள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.