‘யாருக்கும் ஆதரவு கிடையாது, தேர்தலில் போட்டியும் கிடையாது!’ ரஜினி அறிவிப்பு

Read Time:2 Minute, 40 Second

பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் என்னுடைய ஆதரவு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி, ரசிகர்களின் முன்னிலையில், ‘நான் அரசியலுக்கு வருகிறேன்’ என்று அறிவித்தார். ரசிகர்களை திரட்டி அரசியலில் ஈடுபட முடிவு எடுத்துள்ளதாக அறிவித்ததும் உடனடியாக கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை ஆரம்பித்து அதற்கு தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்து உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறார்.

விரைவில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வருகிறது. அதற்கு முன்பு கட்சி ஆரம்பித்தால் தேர்தலில் நிற்க வேண்டிய அவசியமும், ஏதேனும் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டு சேர வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். அதை தவிர்க்க நாடாளுமன்ற தேர்தல் முடிந்து மத்தியில் புதிய ஆட்சி உருவான பிறகு கட்சி ஆரம்பிப்பது ரஜினியின் திட்டமாக இருக்கிறது. ‘பாராளுமன்றத் தேர்தலில் நிற்கப்போவதில்லை. சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் நிற்கப் போகிறேன்’ என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தன்னுடைய ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டத்தை நடத்தினார்.

இதையடுத்து ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. சட்டமன்றத் தேர்தலே எங்களின் இலக்கு. அப்போது தேர்தலைச் சந்திப்பது என முடிவு செய்துள்ளோம். இந்தப் பாராளுமன்றத் தேர்தலில், என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் இல்லை. தமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான திட்டங்களை யார் வகுத்துச் செயல்படுவார்கள் என நினைக்கிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள். மேலும் இந்தத் தேர்தலில், என்னுடைய பெயரையோ, என்னுடைய புகைப்படத்தையோ, எங்களின் கொடியையோ யாரும் பயன்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.