இதுதான் உங்கள் தேசப்பற்றா? புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் சடலத்துடன் மத்திய அமைச்சர் செல்பி! 

Read Time:2 Minute, 15 Second

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் சடலத்துடன் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் செல்பி எடுத்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பா.ஜனதாவை சேர்ந்த மத்திய அமைச்சர் செய்த காரியம் மேலும் கோபத்தை அதிகரிக்க செய்வதாக அமைந்துள்ளது. பயங்கரவாத தாக்குதலில் கேரள மாநிலம் வயநாடை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் வசந்த குமார் வி.வி.யும் உயிரிழந்தார். அவருடைய உடல் தேசியக்கொடி போர்த்தப்பட்ட சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. 

த்ரிக்கைப்பேட்டயில் உள்ள அவரது வீட்டில் பொது மக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது அங்கு மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானமும் சென்று மரியாதை செலுத்தினார். பின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ராணுவ வீரருக்கு அஞ்சலி செய்தியுடன் அங்கு எடுத்த புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். இதனை சமூக வலைதள பயனாளர்கள் இதுதான் உங்கள் தேசப்பற்றா? என்ற கேள்வியுடன் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். 

இதுதான் நாசிசம் என்றும் அவருடைய புகைப்படத்தை விமர்சனங்களுடன் பகிர்ந்து வருகிறார்கள். உயிரிழந்த இந்திய ராணுவ வீரருடன் செல்பி என்பது மிகவும் அவமானக்கரமானது எனவும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே என்னுடைய தந்தையும் ராணுவ வீரர்தான் ராணுவ வீரர்களின் தியாகங்கள் எனக்கு புரியும், நான் செல்பி எடுக்கவில்லை என கண்ணன்தானம் மறுப்பு தெரிவித்துள்ளார்.