இந்தியாவின் நடவடிக்கைக்கு நாங்கள் முழுஆதரவு அமெரிக்கா அறிவிப்பு

Read Time:2 Minute, 10 Second

இந்தியா தற்காப்புக்கு எடுக்கும் நடவடிக்கைக்கு நாங்கள் முழு ஆதரவு அளிப்போம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

புல்வாமாவில் தற்கொலைப் படை பயங்கரவாதி கடந்த 14-ம் தேதி நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ- முகமது தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா வெளிப்படையாகவே பாகிஸ்தான் பெயரை குறிப்பிட்டு எதிர்ப்பை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்தியா தற்காப்புக்கு எடுக்கும் நடவடிக்கைக்கு நாங்கள் முழு ஆதரவு அளிப்போம் என தெரிவித்துள்ளது.

“பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை அந்த நாடு நிறுத்த வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்தது.

ஜான் போல்டன்

இந்நிலையில் தாக்குதல் தொடர்பாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தி உள்ளனர். அப்போது பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுவது குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

இதனையடுத்து உரையாடல் தொடர்பாக தகவலை வெளிப்படுத்திய ஜான் போல்டன், இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கிறது. பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசிடம் வலியுறுத்தப்படும் என்றார்.