கடந்த 5 ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல்களில் வீரர்கள் உயிரிழப்பு 93% உயர்வு

Read Time:5 Minute, 6 Second

கடந்த 5 ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல்களில் பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு 93% உயர்ந்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் மிகப்பெரியது, ஆனால் 2014 மற்றும் 2018 க்கு இடைப்பட்ட காலங்களில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின் எண்ணிக்கை 176 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக பிப்ரவரி 5, 2019-ம் ஆண்டு மோடி அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தகவல்கள், 2014 மற்றும் 2018-க்கு இடைப்பட்ட காலங்களில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்களில் கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை 93 சதவிதமாக உயர்ந்துள்ளது. இதுதவிர, ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் பயங்கரவாத சம்பவங்களின் எண்ணிக்கை 176 சதவீதம் அதிகரித்தது. இந்த காலகட்டத்தில் 1,708 பயங்கரவாத சம்பவங்களால் (சராசரியாக, ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு மாதமும் 28 பயங்கரவாத சம்பவங்கள்) பாதிப்பு நேரிட்டுள்ளது என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்துறை மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் மக்களவையில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான பதிலில், 2014-ல் காஷ்மீரில் 222 பயங்கரவாத சம்பவங்கள் இருந்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த வருடம் (2015) 208 சம்பவங்கள் என குறைந்தது. இருப்பினும், 2016 ல் இருந்து பயங்கரவாத சம்பவங்களின் எண்ணிக்கை ஒரு உயர்ந்த போக்கு கண்டிருக்கிறது. உதாரணமாக, ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்களின் எண்ணிக்கை 2016-ல் 54.8%, 2017-ல் 6% (342 சம்பவங்கள்) மற்றும் 2018-ல் 79.53% (614 சம்பவங்கள்) என அதிகரித்துள்ளது.

உண்மையில், 2018-ம் ஆண்டில் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் 51 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளது.

இந்த ஐந்து ஆண்டுகளில் ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத தொடர்புடைய நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையிலும் உயர்வான போக்கு காணப்பட்டது. 2014 மற்றும் 2018-க்கு இடையில், பயங்கரவாதத்தால் 1,315 பேர் மாநிலத்தில் கொல்லப்பட்டனர். இதில் 138 (10.49%) பொதுமக்கள், 339 (25%) பாதுகாப்புபடையினர், மற்றும் 838 (63.72%) பயங்கரவாதிகள். மூன்று பிரிவுகளிலும் (பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பயங்கரவாதிகள்) இறப்புக்கள் அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் பதில் வெளிப்படுகிறது.

2014 மற்றும் 2018-க்கு இடையில், ஜம்மு காஷ்மீரில் கொல்லப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கை 35.71% உயர்ந்துள்ளது; கொல்லப்பட்ட பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை 93% அதிகரித்துள்ளது; கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 133.63 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் 11 பயங்கரவாதிகள் ஊடுருவல்

ஒவ்வொரு மாதமும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் 11 பயங்கரவாதிகள் ஊடுருவி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் பிப்ரவரி 13-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்தின் மற்றொரு எழுத்துமூலமான பதிலில், ஜம்மு-காஷ்மீரில் 2016 மற்றும் 2018 க்கு இடையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் எண்ணிக்கை 400ஐ தொட்டுள்ளது. சராசரியாக, கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு மாதமும் மாநிலத்தில் 11 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர் என காட்டுகிறது. ஜம்மு-காஷ்மீரில் அதிகபட்ச ஊடுருவல்கள் ஜூன் 2018-ல் நடந்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது 38 பயங்கரவாதிகள் மாநிலத்திற்குள் நுழைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2016 மற்றும் மே 2017 ஆகிய இரண்டு மாதங்களில் 25 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர். 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 2018 வரையான காலப்பகுதியில் மூன்று மாதங்கள் மட்டுமே மாநிலத்தில் ஊடுருவல்கள் இடம்பெறவில்லை. அதே பதிலில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் 56 பயங்கரவாதிகளை கைது செய்யப்பட்டனர் என்று அரசாங்கம் கூறியுள்ளது.