புலவாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த ஆசிரியை தேசத்துரோக வழக்கில் கைது

Read Time:3 Minute, 2 Second

புலவாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த ஆசிரியை தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தால் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே புல்வாமா தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், வீரர்களை கிண்டல் செய்தும் சிலர் சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்திலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

பெலகாவி மாவட்டம் கடபி சிவாபுரா கிராமத்தை சேர்ந்த ஜீலிகாபீ மமதாபூர்(வயது 25) தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். புலவாமா தாக்குதலை தொடர்ந்து அவர் தனது ‘வாட்ஸ்-அப்பில்’ ‘பாகிஸ்தான் கி ஜெய்ஹோ’ என்று பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அவருடைய வீட்டு முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் ஆசிரியை ஜீலிகாபீ மமதாபூருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், அவருடைய வீட்டு மீது கல்வீசிய அவர்கள் வீட்டு வாசலில் தீவைத்தனர். இதனால் வாசலின் முன்பகுதி தீப்பற்றி எரிந்தது. இதற்கிடையே, சம்பவம் குறித்து அறிந்த முருகோடு போலீசார் தீயை அணைத்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தனர். அப்போது, அவர்கள் ஆசிரியை ஜீலிகாபீ மமதாபூரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து சென்று விசாரித்தனர். இந்த விசாரணையின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக அவர் தனது ‘வாட்ஸ்-அப்பில்’ பதிவு செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்த புகாரின் பேரில் முருகோடு போலீசார் ஆசிரியை ஜீலிகாபீ மமதாபூரை கைது செய்தனர். அவர் மீது தேசத்துரோகம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதான ஜீலிகாபீ மமதாபூரை நேற்று கோர்ட்டு நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்திய போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். அத்துடன், ஜீலிகாபீ மமதாபூர் வீட்டுக்கு தீவைத்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.