மதுரையில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பிசியோதெரபி பயிற்சி அளித்து நடக்கவைக்கும் திருநங்கை

Read Time:4 Minute, 15 Second

மதுரையில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உடலியக்க நிபுணரான (பிசியோதெரபி) திருநங்கை ஒருவர் பிசியோதெரபி பயிற்சி அளித்து அவர்கள் குறைபாட்டை நீக்கி வருகிறார்.

மதுரை முனிச்சாலையைச் சேர்ந்த உடலியக்க நிபுணரான (பிசியோ தெரபிஸ்ட்) ஷோலு என்ற திருநங்கை, மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் மூலம் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ‘பிசியோ தெரபி’ பயிற்சி அளித்து வருகிறார்.

செல்லம்பட்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் ஆயத்த மையத்தில் ஷோலு பணிபுரிகிறார். இங்கு 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு வாரத்தில் 3 நாட்கள் பயிற்சி அளிக்கிறார். மேலும், விடுமுறை நாட்களில் அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, பிசியோதெரபி பயிற்சி அளித்து வருகிறார். அவருக்கு குறிப்பிட்ட தொகை மாவட்ட நிர்வாகம் மூலம் ஊதியமாக வழங்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட செல்லம்பட்டி ஆயத்த மைய மேற்பார்வையாளர் லதா கூறி யது: செல்லம்பட்டி மையத்துக்கு 21 மாற்றுத்திறன் குழந்தைகள் வருகி ன்றனர். இவர்களுக்கு 3 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, பாதிப்பின் தன்மையை பொறுத்து, தேவையான ‘ பிசியோ தெரபி’ பயிற்சியை உடலியக்க நிபுணரான திருநங்கை ஷோலு அளிக்கிறார். தமிழகத்திலேயே மதுரை மாவட்டத்தில் செல்லம்பட்டி ஆயத்த மையத்தில் மட்டுமே திருநங்கை நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

திருநங்கை ஷோலு கூறியதாவது: நான் பிபிடி முடித்துவிட்டு, தற்போது மாற்றுத்திறன் குழந்தைகள் பிறப்பதற்கான காரணம் குறித்து பி.எச்டி (ஆய்வு) செய்து வருகிறேன். நான் திருநங்கையானதால் மன வருத்தத்தில் இருந்த எனது தாயார் உயிரை மாய்த்துக் கொண்டார். இதனால் மாற்றுத்திறன் குழந்தைகள் பக்கம் எனது பார்வை திரும்பியது. அவர்களை அந்த கடினமான சூழலில் இருந்து மீட்க வேண்டும் என உறுதியெடுத்தேன்.

செல்லம்பட்டி மாற்றுத்திறன் பயிற்சி மையத்தில் நான் பணியில் சேர்ந்தபோது, 15 குழந்தைகள் மட்டுமே இருந்தனர். செல்லம்பட்டி ஒன்றியம் முழுவதும் 127 கிராமங்களில் சென்று ஆய்வு நடத்தினோம். அப்போது பாதிக்கப்பட்ட பல மாற்றுத் திறன் குழந்தைகள் மையத்துக்கு வரக் கூட துணைக்கு ஆள் இல்லாமல் தவித்து வந்தனர். இதையடுத்து, தற்போது, அக் குழந்தைகளை அழைத்து வர மாதம் ரூ.2 ஆயிரம் பெற்றோருக்கு வழங்கப்படுகிறது. தற்போது, 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினமும் வருகின்றனர். நடக்கவே முடியாத நிலையில் இருந்த 6 குழந்தைகள், தற்போது பயிற்சியால் எழுந்து நடக்கின்றனர்.

பிறந்தது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு நாங்கள் பயிற்சி அளிக்கிறோம். பெற்றோருக்கும் மாற்றுத்திறன் குழந்தைகளை பராமரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மாற்றுத்திறன் குழந்தைகள் பிறப்பதற்கு, தற்போது இளைஞர்கள் உடல் அளவில் வலுவில்லாமல் இருப்பதும் ஒரு காரணம். ஆகையால் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்கள் உடலை வலுவாக வைத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். நன்றி:- இந்து தமிழ்திசை