எப்போதும் பாக்கெட்டில் ஸ்மார்ட்போன் வைப்பது ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா?

Read Time:7 Minute, 8 Second

ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுகளால் விந்தணுக்களில் சேதம் மற்றும் கருவுறாமையை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆய்வுகளில் உறுதிசெய்து உள்ளனர்.

செல்போன் அளவு எதுவாக இருந்தாலும் பொருட்படுத்தாமல் உங்கள் பாக்கெட்களில் வைக்கும் போது, அதிலிருந்து வெளியேரும் கதிர்வீச்சு மலட்டுத்தன்மையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. செல்போன், செல்போன் டவர், வைஃபை, டி.வி. மற்றும் எப்.எம். டவர், மைக்ரோவேவ் போன்றவற்றில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சை எலக்ட்ரோமேக்னடிக் ரேடியேஷன் (ஈஎம்ஆர்) என்று சொல்கிறோம். செல்போன் பயன்படுத்தும்போது வெளியாகும் கதிர்வீச்சு விஷயத்தில் மனித உடலில் ஊருடுவும் ரேடியோ அலைகளின் அளவுக்கு (ஸ்பெசிபிக் அப்சார்ப்ஷன் ரேட் & எஸ்ஏஆர்) கட்டுப்பாடு உள்ளது.

செல்போனை காதில் வைத்து பேசும் போது அதிலிருந்து வெளியேறும் எஸ்ஏஆர் கதிர்வீச்சுகளால் உடல் செல்களில் பாதிப்பு நேரிடும் என்ற பேச்சு உள்ளது. இந்நிலையில் செல்போன் கதிரியக்கத்தால் விந்தணுக்களுக்கு பாதிப்பு நேரிடலாம் என்பதில் ஸ்மார்ட்போன் பயனர்கள் கவனம் செலுத்துவது கிடையாது.

ஸ்மார்ட்போன்களால் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா? இல்லையா? என்பது பற்றி எந்த கருத்தையும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கவில்லை, இதுதொடர்பாக ஸ்திரமான ஆதாரமும் கிடையாது. ஆனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள், ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுக்கள் விந்துவை வெகுவாக சேதப்படுத்தும் என்று உறுதியாக கூறுகிறார்கள். ஸ்மார்ட்போன் கதிர்வீச்சு விந்தணுக்களின் எண்ணிக்கையில் விளைவுகளை ஏற்படுத்துவதை தீர்மானிக்க பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது.

சிறுநீரகவியல் தொடர்பான மத்திய ஐரோப்பிய ஜர்னல் பத்திரிகையின் 2014 ஆய்வில், நீண்ட நேரமாக ஸ்மார்ட்போனை பாக்கெட்டில் வைத்திருந்த ஆண்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான விந்தணுக்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான விந்தணுக்களில் டி.என்.ஏ சிதைவு நேரிட்டு இருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. “தந்தையாக தங்களை தயார்படுத்திக் கொள்ளும் ஆண்கள், குறிப்பாக கருவுறுதல் பிரச்சினைகள் இருப்பின், நீண்ட காலத்திற்கு பேண்ட் பாக்கெட்டில் ஸ்மார்ட்போனை வைத்திருப்பதை தவிர்ப்பது நல்லது.” என்று ஆய்வில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டு சர்வதேச கருவுறுதல் மற்றும் மலட்டுத்தன்மை தொடர்பான பத்திரிக்கை மேற்கொண்ட ஆய்வில், ஒரு மணி நேரத்திற்கு வெளியான கதிர்வீச்சினால் விந்தணுக்களில் இதே போன்ற விளைவுகள் காணப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

வோக்ஸ்.காம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கருவுறுதல் விவகாரத்தில் பெண்களை விட கதிர்வீச்சுக்கு ஆண்கள் மிகவும் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பைகள் வயிற்றுக்கு உள்ளே இருக்கிறது எனவே இயற்கையாகவே கதிர்வீச்சில் இருந்து பாதுகாப்பை பெற்றிருப்பதாக உள்ளது. ஆனால் விந்தணுக்களை பொறுத்தவரையில் விதைப்பைகள் வயிற்றுக்கு அடியில் வெளியே உள்ளது. கதிர்வீச்சுக்கு எதிரான பாதுகாப்பு விவகாரத்தில் ஒப்பீட்டளவில் பலவீனமாக உள்ளது. ஆணின் கருத்தரித்தலில் விளைவை ஏற்படுத்துவதில் கதிர்வீச்சு எளிதான இலக்கை கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் வெளியிடும் கதிர்வீச்சுக்கள் விந்தணுக்களுக்கு நன்மை பயப்பது கிடையாது.

ஆண்களின் கருத்தரிப்பில் போன்களின் இருண்ட விளைவுகள் முறையாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், முக்கிய சொற்கள் தொலைபேசிகள் விந்தணுக்களுக்கு நல்லதல்ல, கதிரியக்கத்தை வெளியிடுகின்றன என்பதுதான்.

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 18 முதல் 24 நிமிடங்கள் மட்டுமே செல்போனைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறான். ஆனால், இந்தத் தகவல் பெரும்பாலான இந்தியர்களுக்குத் தெரிவதில்லை. எனவே, ‘உங்கள் மொபைலின் எஸ்ஏஆர் மதிப்பு என்ன?’ என்று தெரிந்துகொண்டு பயன்படுத்துவது அவசியமாகும். ‘அமெரிக்காவில் செல்போன் வெளியிடும் கதிர்வீச்சு அளவானது (எஸ்ஏஆர் வேல்யூ) 1.6 வாட்/கிலோகிராம் என்ற அளவில் இருக்கவேண்டும்’ என்று கட்டுப்பாடுகள் உள்ளன. இந்தியாவிலும் செல்போன் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்தக் கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

கதிர்வீச்சின் பாதிப்பில் இருந்து தப்பிக்க மாற்றுவழிகள் பற்றி யோசிக்க வேண்டும். காதில் வைத்து நீண்ட நேரம் செல்போனைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 30 செ.மீட்டர் தொலைவிற்கு அப்பால் வைத்து பேசுவதையே வழக்கமாக கொண்டிருக்க வேண்டும். Statista என்ற தரவுத்தளம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி அறிக்கையில் 16 ஸ்மார்ட்போன்கள் எஸ்ஏஆர் அடிப்படையில் அதிகமான அளவு கதிர்வீச்சை வெளியிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் Xiaomi, OnePlus மற்றும் HTC போன்ற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் SAR மதிப்பு 1.6 W/kg என்ற அளவுக்குக் குறைவாகவே இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஸ்மார்ட்போனில் SAR மதிப்பைத் தெரிந்து கொள்ள *#07# என்ற டயல் செய்யுங்கள், தகவல் அளிக்கப்படும்.