புல்வாமா: வீரர்களை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும்… சிஆர்பிஎப் கோரிக்கை நிராகரிப்பு!

Read Time:6 Minute, 23 Second

சிஆர்பிஎப் வீரர்களை விமானம் மூலம் அழைத்துச் செல்ல விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 14-ம் தேதி தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். 2,500 வீரர்கள் 78 வாகனங்களில் சென்ற போது இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்விவகாரத்தில் உளவுத்துறையின் முன்னெச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் சிஆர்பிஎப் வீரர்களை விமானம் மூலம் அழைத்துச் செல்ல விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

“பள்ளத்தாக்கில் எங்கள் பாதுகாப்பு பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம். ஜம்மு மற்றும் காஷ்மீர் இடையே பயணம் என்பது மிக அதிக அபாயத்தை உள்ளடக்கியது, சிஆர்பிஎப் வீரர்களை ஆகாயம் மார்க்கமாகவோ, குண்டு துளைக்காத வாகனங்களிலோ அனுப்ப முடியவில்லை? ” என வருத்தமடைந்த சிஆர்பிஎப் வீரர் தி குயண்ட் இணையதளத்திடம் கூறியுள்ளார்.

சிஆர்பிஎப் உள்துறை அமைச்சகத்திடம் (எம்.எச்.ஏ) பாதுகாப்பு படையினருக்கு வான்வழி போக்குவரத்து கோரியது. எனினும், கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பனிப்பொழிவு காரணமாக பிப்ரவரி 4-ம் தேதி கடைசியாக பாதுகாப்பு படை வாகன நகர்வு காணப்பட்டது. சாலைப் போக்குவரத்து தடைபட்ட நிலையில் ஜம்முவில் நிறைய வீரர்கள் சிக்கியிருந்தனர். எனவே சிஆர்பி.எப். தலைமையகத்திடம் வான்வழியாக படைவீரர்களை அனுப்பும் வசதிகளை வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் எங்களுக்கு பதில் சொல்ல வேண்டும் யாரும் கவலைப்படவில்லை,” என மூத்த அதிகாரி கூறியதாக இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிஆர்பிஎப் தலைமையகத்திற்கு கடிதம் கிடைத்ததும் உள்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை அனுப்பப்பட்டது. முன்னதாகவும் வீரர்களை வான்வழியாக அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது, ஆனால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் அதிகாரி கூறுகிறார்.

பிப்ரவரி 8-ம் தேதி சிஆர்பிஎப் உயர் அதிகாரிகளுக்கு மத்திய உளவுத்துறை கடிதம் எழுதியுள்ளது. “பள்ளத்தாக்கு பகுதிகளில் IEDகளைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது, கவனமாக நகருங்கள்.” என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் என்ன வகையான தாக்குதல் நடத்தப்படலாம், இடம் மற்றும் தேதி குறித்த குறிப்பிட்ட விவரங்களை வழங்கவில்லை. சிஆர்பிஎப் முன்னாள் ஐஜிபி விபிஎஸ் பன்வார் பேசுகையில், “இதில் முற்றிலும் பாதுகாப்பு குறைபாடு உள்ளது, மூத்த அதிகாரிகள் உளவுத்துறை உள்ளீடுகளை புறக்கணித்து உள்ளார்கள் என தெரிகிறது,” என கூறியுள்ளார்.

சிஆர்பிஎப் வீரர்களை குண்டு துளைக்காத வாகனங்கள் மூலம் அல்லது வான்வழியாக போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும், குறிப்பாக பனிகாலங்களில் அதிகமான வீரர்கள் சிக்கிக்கொள்கிறார்கள், அப்போது இதுபோன்ற வசதிகளை செய்ய வேண்டும். இவ்வளவு அதிகமான வீரர்களை ஒரே நேரத்தில் வாகனங்களில் அனுப்புவது பயங்கரவாதிகளுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். இது சரியான முடிவு கிடையாது எனவும் கூறியுள்ளார் விபிஎஸ் பன்வார்.

இதற்கிடையே அதிகளவு வெடிப்பொருட்களுடன் பயணிகள் வாகனம் ஒன்று எப்படி ராணுவ வாகனங்களை அடைந்தது? சொந்த ஊர் சென்றுவிட்டு திரும்பிய பாதுகாப்பு படையினருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லையா? என்ற கேள்விகள் எழுகிறது. அதற்கான சிஆர்பிஎப் அதிகாரிகளின் பதில்கள்:-

* ராணுவ வாகனங்கள் செல்லும் போதும் பொதுமக்களுக்கான வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்படும். அவைகள் தடுக்கப்பட மாட்டாது. ராணுவ வாகனங்கள் இடையே செல்லவும், முந்திச் செல்லவும் அனுமதிக்கப்படும்.

* தாக்குதலுக்கு உள்ளாகும் இடத்தில் குண்டு துளைக்காத வாகனங்கள் பிற எதிர்தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருக்க முக்கிய பங்காற்றும். ராணுவ வீரர்கள் அழைத்துச் செல்லப்படும் வாகனங்கள் மெல்லிய உலோக தகடுகளால் தயாரிக்கப்பட்டவை. இவற்றால் துப்பாக்கி குண்டு மற்றும் IED வெடிகுண்டுகளில் இருந்து பாதுகாப்பு வழங்க வழங்க முடியாது.

* வாகனங்களுக்கு முன்பாக செல்லும் ROP (Road Opening Party) பாதுகாப்பை உறுதி செய்யும். அங்கு கண்ணி வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதா என்பதை சோதிக்கும். பரிசோதனை முடிந்த பின்னர் அப்பகுதியில் வாகனம் செல்ல தொடங்கும்.

* புல்வாமா தாக்குதல் விவகாரத்தை பொறுத்தவரையில் பயங்கரவாதி லிங்-ரோடு வழியாக இடதுபுறமாக சென்றுள்ளான். சிஆர்பிஎப் வாகனங்கள் வலதுபுறமாக பயணித்துள்ளது. பயங்கரவாதி 5 மற்றும் 6 வது எண் வாகனங்களில் மோதச் செய்துள்ளான். பாதுகாப்பு படை வீரர்களை வான் மார்க்கமாக அழைத்துச் செல்வதால் பாதுகாப்பு பிரச்சனையை தீர்க்க முடியாது என குறிப்பிடுகிறார்கள்.