காவிரியில் காபி எஸ்டேட் கழிவுநீர்…!

Read Time:3 Minute, 37 Second

கர்நாடகாவில் காவிரி ஆற்றில் காபி எஸ்டேட்களில் இருந்து வரும் கழிவுகள் கலக்கிறது.

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் காவிரி ஆற்றில் காபி எஸ்டேட்களின் கழிவுநீர் கலக்கப்படுகிறது, அப்பகுதியில் மழைநீர் ஆற்றுக்குள் செல்வதற்காக கட்டப்பட்ட வாய்க்காலில் கழிவுநீர் அனுப்பப்படுகிறது என சித்தபுரா குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தி நியூஸ் மினியூட் இணையதளத்திடம் உள்ளூர் போலீஸ் அதிகாரி பேசுகையில், “சட்டப்படி காபி எஸ்டேட் உரிமையாளர்கள் கழிவுகளை சேமித்து வைக்கவேண்டும், ஆற்றில் விடக்கூடாது. இங்குள்ள பல எஸ்டேட்கள் இதுபோன்ற தவறை செய்கிறது, அதனை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம்,” என கூறியுள்ளார்.

காபி கழிவுநீர் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது. கழிவுப்பொருளை ஆற்றுக்குள் அனுப்புவது என்பது எஸ்டேட் உரிமையாளர்களின் பொறுப்பற்ற செயலாகும், இது கடல்சார் சூழலுக்கு மிகவும் அபாயகரமானது. இந்த விஷயத்தில் அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சுற்றுசூழல் ஆர்வலர்கள். கழிவை ஆற்றுக்குள் அனுப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு எஸ்டேட் உரிமையாளருக்கு பஞ்சாயத்து தரப்பில் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து தரப்பிலும், போலீஸ் தரப்பிலும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படாத நிலையில் உரிமையாளர் பெயர் தெரிவிக்கப்படவில்லை. மாவட்ட அதிகாரிகள் இது ஒரு பொதுவான நிகழ்வு கிடையாது, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வழக்கமாக இப்பகுதியில் காபி தோட்டங்களை ஆய்வு செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க அம்மாநில அமைச்சர் பிரியங்க் கார்க்கே உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகத்தில் காவிரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது.  ஆண்டுக்கு சுமார் 5 லட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் கழிவுகள் கர்நாடகத்தில் இருந்து காவிரி மூலம் தமிழகத்துக்கு வருகிறது. அபாயகரமான கழிவுகளோடு தமிழகத்துக்கு வரும் காவிரி நீரில் விளையும் பயிர்களில் துத்தநாகம், ஈயம், காட்மியம், செம்பு போன்ற வேதிப்பொருள்களின் தன்மை அதிகம் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

கர்நாடகத்தில் காவிரி கரையில் அமைந்துள்ள நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் பல்வேறு வகையான கழிவுகளை நேரடியாக ஆற்றில் கலக்கவிடாமல் கழிவுகள் கலந்த தண்ணீரை சுத்திகரித்த பிறகு மீண்டும் ஆற்றில் கலக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டது என்பது குறிப்பிட்டத்தக்கது.