“மீண்டும் பிரண்ட்ஸ்” மராட்டியத்தில் சிவசேனா – பா.ஜனதா கூட்டணி…!

Read Time:3 Minute, 25 Second

மராட்டியத்தில் சிவசேனா – பா.ஜனதா கூட்டணி உறுதியானது, விரைவில் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

மத்தியிலும், மராட்டியத்திலும் உள்ள பா.ஜனதா அரசுக்கு சிவசேனா ஆதரவு அளித்து வருகிறது. மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதா அரசில் சிவசேனாவிற்கு எதிர்பார்த்த முக்கியத்துவம் அமைச்சகத்தில் கிடைக்கவில்லை. பா.ஜனதா மற்றும் சிவசேனா இடையிலான மனக்கசப்பு பெரும் பிளவாக நீடித்தது. இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிளவு தற்காலிகமா? நிரந்தரமா? என்பதை தெளிவாக கூறமுடியாத நிலையே தொடர்ந்தது. இருகட்சிகளும் தனித்து போட்டி என்றெல்லாம் கூறின.  

48 தொகுதிகளை கொண்ட மேற்கு மாநிலமான மராட்டியம் நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்திற்கு அடுத்தப்படியாக அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி பா.ஜனதாவிற்கான வாய்ப்பை சுருக்கியுள்ளது.

 2014 தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி வைத்து 48 தொகுதிகளில் 41 தொகுதிகளில் வென்றது. மராட்டியத்தில் சிவசேனா 20 சதவித வாக்குகளை பெற்றது, 18 தொகுதிகளில் வென்றது. 2014 சட்டசபைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டது. பா.ஜனதா 122 தொகுதிகளிலும், சிவசேனா 63 தொகுதிகளிலும் வென்றது. பின்னர் ஆட்சியமைக்க கூட்டணி அமைத்தது. 2019 தேர்தலில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. இது பா.ஜனதாவிற்கு சவாலாக அமையும். சிவசேனாவிற்கும் பலம் அதிகரிக்காது என கூறப்பட்டது. 

இருப்பினும் பா.ஜனதாவை தொடர்ந்து சிவசேனா விமர்சனம் செய்தது. இந்நிலையில் மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கடந்த வாரம் சிவேசனா தலைவர் உத்தவ் தாக்கரேவை அவரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது இருவரும் கூட்டணி தொடர்பாக பேசியதாக தகவல் வெளியாகியது. சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பேசுகையில், தேர்தலில் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பை அமித்ஷா – உத்தவ் தாக்கரே வெளியிடுவார்கள் என கூறியுள்ளார். 
 
மராட்டியத்தில் சரிசமமான தொகுதிகளில் போட்டியிட இருகட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. பா.ஜனதா 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.  

மும்பையில் அமித்ஷா மற்றும் உத்தவ் தாக்கரே இடையிலான பேச்சுவார்த்தைய அடுத்து, சட்டசபைத் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் ஒன்றாக போட்டியிட உள்ளோம் என தேவேந்திர பட்னாவிஸ் அறித்தார்.