ஆறாக ஓடிய ரத்தம்!  இந்தியா தண்டிப்பது எப்போது?

Read Time:6 Minute, 55 Second

இந்தியாவில் நடந்த பல்வேறு தாக்குதல்களில்  மூளையாக செயல்பட்ட  பயங்கரவாதிகள் ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசார் பாகிஸ்தானில் இன்றளவும் சுதந்திரமாக சுற்றி வருகிறார்கள், அவர்களை இந்தியா தண்டிப்பது எப்போது என்ற கேள்வி விடையின்றி தொடர்கிறது.

மும்பை தாக்குதலும், ஹபீஸ் சயீத்தும்…

இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பைக்குள் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி கடல் வழியாக புகுந்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் 10 பேர் நகரின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியாலும் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை உலக நாடுகள் வன்மையாக கண்டித்தன. தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தியது.

2008 மும்பைத் தாக்குதல்

இதையடுத்து கண்துடைப்பு நாடகம் போல் பாகிஸ்தான் விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தது. ஆனால் லஷ்கர் இ-தொய்பா இயக்கத்தின் தலைவனும், மும்பைத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவனுமான ஹபீஸ் சயீத் உள்ளிட்ட யார் மீதும் பாகிஸ்தான் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜமாத்-உத்-தவா அமைப்புகள் ஐ.நா.வால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டன. ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் தலைமறைவாக வாழும் இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஹபீஸ் சயீத் முதன்மையானவன். இவனுடைய தலைக்கு அமெரிக்காவும் 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.65 கோடி) விலையாக நிர்ணயம் செய்துள்ளது.

ஜெய்ஷ் இ முகமது

2001-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் கோவிலாக இருக்கும் நாடாளுமன்றத்தின் மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் தாக்குதல் நடத்தியது. 9 பேர் கொல்லப்பட்ட இந்த தாக்குதல் முதல் இப்போதைய புல்வாமா தாக்குதல் வரையில் பல்வேறு கொடூர்மான தாக்குதல்களை ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் நடத்தியுள்ளது. புல்வாமாவில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.

2002-ம் ஆண்டில் இருந்தே ஜெய்ஷ் இ முகமது பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டிருந்தாலும் அந்தக் குழுவின் தலைவன் மெளலான மசூத் அசார் பாகிஸ்தானில் அமைந்துள்ள பஞ்சாப் மாநிலம் பஹவல்பூரில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஜெய்ஷ்-இ-முகமது, ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் உள்ளது. ஐ.நா அமைப்பில் இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளும் கூட மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க தீர்மானம் கொண்டு வந்துள்ளன. அப்போதெல்லாம் சீனா தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்து விடுகிறது. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களால் இரத்தம் ஆறாக ஓடும் நிலையில், குற்றம் செய்தவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றுகிறார்கள்.

பயங்கரவாத பாகிஸ்தான்

ஹிஜ்புல் முஜாகித்தீன், லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது ஆகிய மூன்றும் பாகிஸ்தானில் இருந்து அந்நாட்டு நிதி மற்றும் ஆயுதங்கள் உதவியுடன் செயல்படும் பயங்கரவாத இயக்கங்கள். இவர்களில் எந்த அமைப்பு பெரியது என்பது இதுவரையிலும் அடையாளம் காண முடியாமல் உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கண்ட மூன்று பயங்கரவாத அமைப்புகளும் இந்தியாவில் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பயங்கரவாதிகள் அனைவருக்கும் பாகிஸ்தானிலே பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக பல்வேறு ஆவணங்களை இந்தியா சர்வதேச அரங்கில் சமர்பித்துள்ளது. ஆனால் இன்றளவும் பயன் என்ன? என்பது தென்படவில்லை.


எது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்?

கடந்த 2016 செப்டம்பரில் காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது ஜெய்ஷ் இ முகமது தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக செப்டம்பர் 28-ம் தேதி காஷ்மீரை ஒட்டிய பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவ வீரர்கள் நுழைந்து ஏராளமான பயங்கரவாத முகாம்களை அழித்தனர். இப்போது புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் இந்தியாவே கொந்தளித்துக் கிடக்கிறது. சமூகவலைதளங்களிலும் மக்களிடையே கடும் கோபத்தைக் காண முடிகிறது.

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தி என்ன பயன்? என்ற கேள்வியும் எழுகிறது. தொடர்ந்து ராணுவ வீரர்கள் பலியாகிக் கொண்டுதானே இருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இப்போது பயங்கரவாதிகளை வேட்டையாடுவதே தகுந்த பதிலடியாக இருக்கும். பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் பின்லேடனை அமெரிக்க படைகள் ரகசிய நடவடிக்கையின் மூலம் கொன்றது. இதுதான் பயங்கரவாதத்தை அழிக்கும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ஆகும். இதுபோன்ற நடவடிக்கையை இந்திய பிரதமர் மோடி எடுப்பாரா? என்ற கேள்வியே எழுகிறது.

பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசாருக்கு எதிராக இந்தியா நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது வலியுறுத்தாக உள்ளது.