எரிமலை வெடிப்பால் உண்டான புதுத்தீவு… தாவரங்கள் முளைக்கும் இயற்கை ஆச்சர்யம்!

Read Time:6 Minute, 6 Second

எரிமலை வெடிப்பதால் பூமியில் புதிய நிலப்பகுதியே உருவாக வாய்ப்புண்டு என்பதை பள்ளி பாட புத்தகத்தில் படித்து இருப்போம். இதுபோன்ற நிகழ்வுக்கு பலநூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்பார்கள். இப்போது நம் வாழ்நாளில் அதுபோன்றதொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. கடலுக்கு நடுவே 2015-ம் ஆண்டு எரிமலை வெடிப்பு நேரிட்டதில் புதிய தீவு உருவாகியுள்ளது. பிசிபிக் பெருங்கடலின் டோங்கா தீவில் உருவாகியுள்ள தீவிற்கு ஹுங்கா டோங்கா ஹுங்கா ஹாபாய் (Hunga Tonga Hunga Ha’apai) என பெயரிடப்பட்டுள்ளது.

டோங்கா ஹுங்கா என்ற தீவுகளை இணைக்கும் விதமாக இது உருவாகியிருப்பதால் தற்காலிகமாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2018-ல் இந்தத் தீவைக் கண்டுபிடித்தபோது விரைவில் கடல் நீரில் கரைந்து காணாமல் போய்விடுமென்று நாசா விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர். ஆனால், அதைத் தாண்டி இன்னமும் நிற்கிறது. கடந்த 150 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புதான் மாதக்கணக்கில் நீண்டது. அதன் விளைவாகவே இந்தப் புதிய தீவும் உருவாகிக் கொண்டிருக்கிறது என கூறுகின்றனர்.

கடல் மட்டத்திலிருந்து 500 அடி உயரத்துக்கு உருவாகியுள்ள இதன் மொத்த பரப்பு 1.1 மைல்கள் ஆகும். செயற்கைக்கோள் உதவியுடன் இதன் நிலப்பரப்பை ஆய்வுசெய்த நாசா, தன் விஞ்ஞானிகளை நேரடி ஆராய்ச்சிக்காக அங்கு அனுப்பியது. கடந்த அக்டோபர் தொடக்கத்தில் படகு மூலம் தீவுக்கு டான் ஸ்லேபேக் தலைமையிலான விஞ்ஞானிகள் மற்றும் கடல் கல்வி சங்க ஆய்வு மாணவர்கள் சென்றனர். விஞ்ஞானிகள் அங்கு சென்றதும் கறுப்பு நிறத்திலான சரளைக் கற்கள் மற்றும் எதிர்பாராத விதமான சேறு, தாவரங்கள், நூற்றுக்கணக்கான பறவைகள் பார்த்துள்ளனர்.

விஞ்ஞானி டான் ஸ்லேபேக் பேசுகையில், “நாங்கள் அனைவரும் தீவுக்கு சென்றதும் பள்ளிக் குழந்தைகளைப் போல் காட்சியளித்தோம். இப்படியொரு சந்தர்ப்பத்தில் யாராயினும் அப்படிதான் உணர்வார்கள். தீவு முழுவதும் கறுப்பு சரளைக் கற்களால் ஆனது. அவற்றை மணல் என்று சொல்லமுடியவில்லை. இரு சரளைக் கற்குவியலாக காட்சியளித்தது. காலணிக்குள் சரளைக் கற்கள் சென்றதால் பாதங்கள் வலிக்கத் தொடங்கிவிட்டன. தீவை செயற்கைக் கோளில் பார்த்ததுபோல் சமவெளியாக இல்லை. ஓரளவுக்கு சமமான நிலத்தைக் கொண்டிருந்தாலும், அலையால் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டு மேடு பள்ளங்களாகவும் மாறியுள்ளது,” என்று கூறுகிறார்.

தீவுக்கு சென்ற ஆய்வுக்குழுவிற்கு மற்றொரு அதிசயம் அங்கு காணக்கிடைத்தது. அதுயென்னவென்றால் சரளைக் கல் தீவு முழுவதும் தற்போது தாவரங்கள் முளைக்க தொடங்கி உள்ளது என்பதுதான். புதிய நிலப்பகுதியில் வேர்விடத் தொடங்கியிருக்கும் தாவரங்கள், தீவில் உருவாகத் தொடங்கியிருக்கும் பிசுபிசுப்பான சேற்று மண் பரப்பில் வளர்ந்து வருகிறது. அங்குள்ள மணல் பகுதியை செயற்கைக் கோள் ஒளிப்படங்களில், மெல்லிய நிறங்களில் பார்க்கமுடியும். களிமண் நிறத்திலிருக்கும் சேற்றுமண்ணில்தான் தாவரங்கள் வளரத் தொடங்கியது. அவை சாம்பலல்ல. அதேசமயம் அவை எங்கிருந்து வந்தன, எப்படி அந்தத் தீவில் உருவாகின என்ற கேள்விகளுக்கும் இன்னும் விடை கிடைக்கவில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நீண்டநாட்கள் நீடிக்குமா?

33 மாதங்களாக செயற்கைக்கோள் உதவியுடன் கவனித்ததில் கடல் அரிப்பால் தீவு சுருங்கிக்கொண்டுதான் வருகிறது. தீவு அழிவதற்கு கடல் அரிப்பைவிடவும் மழை முக்கிய காரணமாக அமைகிறது. எதிர்பாராத விதமாக மழையினால் அரிப்பு அதிகமாகவே உள்ளது. கடல் அலைகள் கரைகளை நொறுக்கிக்கொண்டிருக்கிறது. மொத்த தீவுமே மீண்டும் கடலுக்குள் சென்று கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். மூன்று ஆண்டுகளுக்கு முன் அந்த இடத்தில் வெறும் கடல்தான் காட்சியளித்தது. தற்போது 2 மீட்டர் ஆழமுள்ள கடற்கரையோடு ஒரு தீவு காட்சியளிக்கிறது.

இதுவே அதிசயம்தான். அந்தத் தீவு மீண்டும் மூழ்குவதற்குள் சில ஆய்வுகளை மேற்கொண்டாக வேண்டும் என்று ஆர்வமாக கூறுகிறார்கள். தீவு பகுதியில் இருந்து பாறைகளை ஆய்வுக்காக விஞ்ஞானிகள் சேகரித்து வந்துள்ளனர். பூமியில் உருவாகியுள்ள கன்னி நிலத்தை ஆய்வு செய்வதென்பது நாசா விஞ்ஞானிகளுக்குப் புதிய அனுபவமாக உள்ளது. தீவில் இன்னும் என்னென்ன மாற்றங்கள் நடக்கப் போகின்றனவோ! என மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன் என்கிறார் டான் ஸ்லேபேக். விரைவில் தீவுக்கு மீண்டும் பயணம் என்கிறார். புதியதாக உருவாகியுள்ள தீவு இதுவரையில் எந்த வரைப்படத்திலும் இடம்பெறவில்லை…