எல்லையில் பதற்றம்… பாகிஸ்தான் ஐ.நா.விற்கு ஓட்டம்…!

Read Time:4 Minute, 8 Second

இந்தியாவுடனான பதற்றை தணிக்க உடனடியாக தலையீடுங்கள் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு சரியான பதிலடியை கொடுக்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் வலியுறுத்தப்படுகிறது. பிரதமர் மோடி, பதிலடியை கொடுக்க இந்திய பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இனி பேச்சுவார்த்தை என்பது கிடையாது, நடவடிக்கைதான் என எச்சரிக்கை விடுத்தார். பாதுகாப்பு படைகளும் கடும் கோபத்தில் உள்ளது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் பயங்கரவாதியால் கொல்லப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. அப்போது, வர்த்தகத்துக்கு உகந்த நாடு என பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் திரும்பப் பெறப்பட்டது. பாகிஸ்தானுக்கு வர்த்தக ரீதியான எந்த சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது. ராணுவ வீரர்களின் மீதான தாக்குதலில் நேரடித் தொடர்புகொண்ட பாகிஸ்தான் அதை மறுக்க முடியாது.

சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய வெளியுறவுத் துறை தொடங்கும். தாக்குதலுக்குக் காரணமாக இருந்தவர்களும், பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பவர்களும் அதற்காக மிகப்பெரிய விலையை அளிக்க வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. 25-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தூதர்களை அழைத்து இந்தியா விளக்கம் அளித்தது. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை மற்றும் கூடுதல் வரி உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இயங்கி வருகிற எப்.ஏ.டி.எப். நிதி நடவடிக்கை அதிரடிக் குழுவை இந்தியா நாடுகிறது. காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய கார் குண்டு வெடிப்பில், பாகிஸ்தான் அரசு அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கிறது என்பதை ஆவணத்துடன் தெரிவிக்கிறது. இந்தியாவின் ஆவணத்தில் திருப்தி கொள்கிற பட்சத்தில், சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்., மற்றும் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவை பாகிஸ்தானை தரம் இறக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி தரம் இறக்குகிறபோது, அந்த அமைப்புகளிடம் இருந்து பாகிஸ்தானுக்கு நிதி உதவி கிடைக்காது.

இதற்கிடையே ராஜஸ்தானின் பொக்ரான் பாலைவனப் பகுதியில் விமானப்படையின் போர் நடைப்பெற்றது. பாகிஸ்தானுக்கு தண்டனை வழங்க தயாராக உள்ளோம் என்று இந்திய விமானப்படைத் தளபதி எச்சரிக்கை விடுத்தார் இந்நிலையில் பதற்றத்தை தணிக்க உடனடியாக தலையிடுமாறு ஐ.நா. சபைக்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக இந்தியா – பாகிஸ்தான் இடையே எழுந்துள்ள பதற்றத்தில் தலையிடவேண்டும், இருநாடுகள் இடையே பிரச்சனையை சரிசெய்ய பேச்சுவார்த்தைக்கு உதவிசெய்ய ஐ.நா. நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.