ஆதாரங்களை கொடுத்தால் மட்டும் என்ன செய்வீங்க…?

Read Time:4 Minute, 23 Second

40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது. பாகிஸ்தான் உளவு அமைப்பின் உதவியுடன் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, இந்தியன் முஜாகிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தாக்குதலை நடத்தி வருகிறது. ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் சமீப காலங்களில் இந்தியாவில் கொடூரமான தாக்குதல்களை வரிசையாக முன்னெடுக்கிறது. இந்தியாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் போது எல்லாம் எங்களுக்கு சம்பந்தம் கிடையாது என மறுப்பது பாகிஸ்தான் வழக்கமாகும். புல்வாமா தாக்குதலிலும் தன்மீதான குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுக்கிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசுகையில், “நீங்கள் (இந்தியா) எந்த ஆதாரமும் இல்லாமல் பாக்கிஸ்தான் அரசாங்கத்தை குற்றம் சாட்டுகிறீர்கள். உங்களிடம் ஏதேனும் ஆதாரம் இருந்தால், நாங்கள் நடவடிக்கையை மேற்கொள்வோம். எங்களுடைய மண்ணை வன்முறையை பரப்ப யாரும் பயன்படுத்தக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பாகிஸ்தானில் உள்ள யாரேனும் ஒருவருக்கு எதிராக இந்தியா தரப்பில் ஆதாரம் அல்லது உளவுத்துறை தகவல் அளிக்கப்பட்டால் நடவடிக்கையை எடுப்போம் என உறுதியளிக்கிறோம்.

புல்வாமா தாக்குதலில் இருந்து பாகிஸ்தானுக்கு என்ன கிடைக்கும்? ஸ்திரமான நிலையை நோக்கி நகர வேண்டும் என்ற நிலையை பாகிஸ்தான் கொண்டுள்ளது. புதிய பாகிஸ்தான் புதிய சிந்தனையை கொண்டுள்ளது. நீங்கள் (இந்தியா) எங்களை தாக்க வேண்டும் என்று நினைத்தால், நாங்கள் பதிலடி கொடுப்பது குறித்து நினைப்போம்… நாங்கள் பதிலடி கொடுப்போம். ஒரு போர் தொடங்குவது என்பது மனிதர்களின் கையில்தான் உள்ளது. இது எங்கு சென்று முடியும் என்பது கடவுளுக்குதான் தெரியும். இந்த பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

என்ன செய்வீங்க?

பயங்கரவாதம் விவகாரத்தில் நல்ல பயங்கரவாதம், கெட்ட பயங்கரவாதம் என இருநிலைப்பாட்டை பாகிஸ்தான் கொண்டுள்ளது. இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதம் நல்ல பயங்கரவாதம் என பாகிஸ்தான் கொள்கையை கொண்டுள்ளது. மும்பை தாக்குதல் விவகாரத்தில் ஆவணங்கள் வழங்கப்பட்டும் இதுவரையில் நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்கவில்லை. பதன்கோட் விமானப்படை தளம் தாக்குதலில் பாகிஸ்தான் உளவு அமைப்பையே விசாரணைக்கு இந்தியா அனுமதித்தது. ஆனால் அதிலும் பாகிஸ்தான் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. காஷ்மீரில் கொல்லப்படும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தகவலை இந்திய ராணுவம் வெளியிடுகிறது. இதனையும் பாகிஸ்தான் மறுக்கிறது. இந்த உண்மை உலகத்திற்கே தெரியும்.

2008 மும்பைத் தாக்குதல்

தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் உள்ளான், இவனையும் பாகிஸ்தான் உளவு அமைப்பு பாதுகாக்கிறது. பயங்கரவாதிகளை பாதுகாக்கும் பாகிஸ்தான் ஆவணங்களை வழங்குவதால் மட்டும் என்ன செய்யும்? எப்போது போல நாங்களே பாதிக்கப்பட்டு உள்ளோம் என முதலைக்கண்ணீரைத்தான் வடிக்கும். இதனால் ஒரு பயனும் கிடையாது. பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு அதனால்தான் அழிவு என்பது பல்வேறு சம்பவங்களில் நிஜமாகியுள்ளது. இனியும் அதுதான் நடக்கும்…