ஒன்-ப்ளஸ், ஷியோமி மொபைல்கள் ஆபத்தானவையா? அதிர்ச்சியளிக்கும் கதிர்வீச்சு அளவு

Read Time:7 Minute, 55 Second

ஒன்-ப்ளஸ், ஷியோமி மொபைல்கள் அதிகமான அளவு கதிர்வீச்சை வெளியிடும் ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

எஸ்.ஏ.ஆர். மதிப்பு

ஸ்மார்ட்போனை வாங்கும் பொழுது பெரும்பாலானோர் கவனிக்க மறக்கும் ஒரு விஷயம் எஸ்.ஏ.ஆர். ( SAR )மதிப்பாகும். ஒரு மொபைலை எடுத்துக்கொண்டால் அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மனித உடலால் எவ்வளவு கிரகிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே எஸ்.ஏ.ஆர். (Specific Absorption Rate) மதிப்பு என்பது கணக்கிடப்படுகிறது. தலை மற்றும் உடல் பகுதிகளை கணக்கில் கொண்டு இது அளவிடப்படும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் 1 கிராம் அளவு மனித திசுவுக்கு எஸ்.ஏ.ஆர். மதிப்பு அதிகபட்சமாக 1.6 W/kg இருக்க வேண்டும் எனத் தொலைத்தொடர்பு ஆணையம் நிர்ணயம் செய்திருக்கிறது. ஒவ்வொரு நாடுகளிலும் இது மாறுபடுகிறது.

எப்படி தெரிந்துக் கொள்வது?

மொபைல் நிறுவனங்கள் அனைத்தும் ஒவ்வொரு மொபைலுக்குமான எஸ்ஏஆர் மதிப்பை தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்பது அரசின் வழிகாட்டுதலாக இருக்கிறது. அதன்படி மொபைல் பேக் செய்யப்பட்டிருக்கும் அட்டைப் பெட்டியின் வெளிப்புறத்தில் இந்த விவரங்கள் தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும். மேலும் உள்ளே இருக்கும் கையேட்டிலும் இந்த விவரங்கள் இருக்கும். இது தவிர்த்து மொபைல் நிறுவனங்களின் இணையதளத்திலும் இதைத் தெரிந்துகொள்ள முடியும். மேலும் மொபைலில் *#07# என்று டயல் செய்து எஸ்.ஏ.ஆர். மதிப்பைத் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்மார்ட்போன்களில் வெளியாகும் கதிர்வீச்சுக்களால் புற்றுநோய் ஏற்படுகிறதா? இல்லையா? மற்றும் செல்லுலார் அளவில் உடலை சேதப்படுத்துகிறதா என்பதற்கான உறுதியான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ஸ்மார்ட்போன்கள் உள்ளே இருக்கும் ஆண்டெனாக்களாலும், கேஜெட்களாலும் கதிர்வீச்சை வெளிடுகிறது.
ஒரு ஸ்மார்ட் போனை எடுத்துக்கொண்டால் அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மனித உடலால் எவ்வளவு கிரகிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே எஸ்.ஏ.ஆர். மதிப்பு என்பது கணக்கிடப்படுகிறது.

அதிர்ச்சியளிக்கும் கதிர்வீச்சு அளவு

இப்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவில் ஒன்-ப்ளஸ், ஷியோமி மொபைல்கள் அதிகமான அளவு கதிர்வீச்சை வெளியிடுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. சாம்சங் மொபைல்கள் இந்த பட்டியலில் கடைசியில் இடம்பிடிக்கிறது. ஐபோன்கள் மத்தியில் வருகிறது. உலகில் பல்வேறு பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்களில் இருந்து எவ்வளவு கதிர்வீச்சு வெளியாகிறது என்ற தகவல்களை ஆய்வு செய்து அது தொடர்பான தகவல்களை Bundesamt für Strahlenschutz என்ற அமைப்பு வெளியிட்டிருந்தது.

ஜெர்மனி அரசின் ஒரு பகுதியாகும், கதிர்வீச்சு பாதுகாப்பு தொடர்பான அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட எஸ்.ஏ.ஆர். மதிப்பு தொடர்பான தகவல்களை Statista என்ற தரவுத்தளம் தொகுத்து வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான தகவல்கள் இப்போது எஸ்.ஏ.ஆர். மதிப்பு தொடர்பான விவாதத்தை எழுப்பியுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அந்தப் பட்டியல் பட்ஜெட் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களை மட்டுமன்றி ஆப்பிள், ஒன்பிளஸ் போன்று விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அதற்குக் காரணம் அதிக கதிர்வீச்சு கொண்ட ஸ்மார்ட்போன்கள் வரிசையில் அதிக இடங்களைப் பிடித்திருப்பது ஷியோமி மற்றும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்தாம். மூன்று ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.

இது தவிர முன்னணி நிறுவனமான ஆப்பிள், சோனி, ஹெச்டிசி மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்பது மற்றொரு அதிர்ச்சி சம்பவமாகும். அதிகமான கதிர்வீச்சை வெளியிடும் ஸ்மார்ட்போன்கள் வரிசையில் ஷியோமி நிறுவனத்தின் Mi A1 (1.75W/kg) ஸ்மார்ட்போன் முதலிடம் பிடித்துள்ளது. ஷியோமியின் Mi Max 3 (1.58W/kg) ஸ்மார்ட்போன் மூன்றாவது இடத்தையும், Mi Mix 3 (1.45W/kg)ஆறாவது இடத்தையும் மற்றும் Redmi Note 5 (1.29W/kg)பதினைந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

மேலும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய வரவான ஒன்பிளஸ் 6T (1.55W/kg ) ஸ்மார்ட்போன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஷியோமி மற்றும் ஒன்பிளஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களாக இருந்தாலும் கூட இந்தியா அவற்றின் முக்கியச் சந்தையாக இருந்து வருகிறது.

ஆபத்தானவையா?

ஜெர்மனிக்கான எஸ்.ஏ.ஆர். மதிப்பும், இந்தியாவுக்கான எஸ்.ஏ.ஆர். மதிப்பும் வெவ்வேறானவை. இந்தியாவில் 1.6 W/kg என்ற அளவுக்குக் குறைவாகவே இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜெர்மனியில் அதிகபட்சமாக 2 W/kg என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளிலும் மொபைல் நிறுவனங்கள் விற்பனை செய்யும் ஸ்மார்ட்போன் மாடல்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அதன் எஸ்.ஏ.ஆர். மதிப்புகள் வேறுபட்டுத்தான் இருக்கும். Mi A1 ஸ்மார்ட்போனின் எஸ்.ஏ.ஆர். மதிப்பை இந்தியாவுக்கான எஸ்.ஏ.ஆர் மதிப்புடன் 1.6 W/kg ஒப்பிட்டு பார்த்தால் குறைவானது.

ஷியோமி, ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவிற்கு ஏற்ற வகையில்தான் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கிறது. எனவே அவற்றின் SAR மதிப்பும் பட்டியலில் உள்ளதை விடவும் மிகக்குறைவாகவே இருக்கும் என்பதால் இந்த விஷயத்தில் பயப்படத் தேவையில்லை என கூறப்படுகிறது. இந்தியாவிற்கு ஏற்றவகையில்தான் தயாரிக்கப்படுகிறது என மொபைல் போன் நிறுவனங்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைவான அளவு கதிர்வீச்சைக் கொண்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தமுள்ள பதினாறு இடங்களில் எட்டு இடங்களை சாம்சங் ஸ்மார்ட்போன்களே பிடித்துள்ளன. கேலக்ஸி நோட் 8 ( 0.17W/kg)ஸ்மார்ட்போன் முதலிடம் பிடித்துள்ளது. மற்ற இடங்களை மோட்டோரோலா, எல்ஜி, ஹெச்டிசி மற்றும் ZTC நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் பிடித்துள்ளன.