விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் திட்டம்… மோடி பாஸ்…! ஆய்வில் தகவல்

Read Time:5 Minute, 56 Second

விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டம் மோடிக்கு வாக்குகளை பெற்றுதரும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் முழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பா.ஜனதா கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் தேர்தலில் கடுமையான போட்டியிருக்கும் என கருத்துக்கணிப்பு தகவல்கள் தெரிவிக்கிறது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்தாலும் 2014- பெற்ற அளவு ஆதரவை பெறாது என கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக ஸ்விட்சர்லாந்து சேர்ந்த யூபிஎஸ் நிறுவனம் கள ஆய்வு ஒன்றை நடத்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அறிக்கையில் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் மோடிக்கு வாக்குகளை பெற்றுதரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. “2014 தேர்தலில் மோடி அலை வீசியது, ஆனால் இப்போது அப்படி கிடையாது. மாநிலங்களில் அங்குள்ள தேவைகள் பிரதானமாக இருக்கும். பிரதமர் பதவிக்கு பொருத்தமான தலைவர் என்ற கேள்விக்கு மக்களுடைய கருத்து, தேர்தல் முடிவில் பா.ஜனதா வெற்றிப்பெறும் இடம் குறைவாக இருந்தாலும், மோடிக்கான ஆதரவு அதிகமாக இருக்கிறது என தெரியவந்துள்ளது.

எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு மோடியை காட்டிலும் செல்வாக்கு குறைவாகவே இருக்கிறது. தேர்தலில் பா.ஜனதா வெற்றிப்பெறும் இடங்களின் எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்ததைவிட குறைந்து வருகிறது. தொடக்கத்தில் பா.ஜனதா 220 இடங்களைப் பெறும் என கணிக்கப்பட்டது. பின்னர் அதுவே 200, 180 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் விவசாயிகளுக்கு வருடம் ரூ. 6000 வழங்கப்படும் திட்டம் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசுக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும் என்று தெரிகிறது. உ.பி.யில் ஆதரவற்ற கால்நடைகள் பிரசனையை சந்திக்கிறது, இது அரசுக்கு சிக்கலை உருவாக்கலாம்.

இப்போது நிலவும் வேலையில்லா திண்டாட்டம், கிராமப்புற பொருளாதாரம் பாதிப்பு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் அரசு நிறுவனங்களை அதிகாரமிழக்கச் செய்தல் உள்ளிட்டவற்றை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தால் அவர்களுக்கு சாதகமான நிலை காணப்படுகிறது. பா.ஜனதா தங்களுடைய நலத்திட்டங்களை பிரசாரத்தில் முன்வைத்தால் அவர்களுக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது தொடர்பான செயல்பாட்டு வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், “சாகுபடி செய்யத்தக்க 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கிறவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். கணவன், மனைவி, குழந்தைகள் என ஒரு குடும்பத்துக்கு கூட்டாக இந்த வரையறைக்குள் சொத்து இருக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

யாருக்கு கிடைக்காது?

இந்த உதவித்தொகை விவசாயிகளில் யாருக்கெல்லாம் கிடைக்காது என்பதுவும் வழிமுறையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அது வருமாறு:-

* அரசியல் அமைப்பு பதவி வகித்தவர்கள், வகிக்கிறவர்களுக்கு கிடையாது.

* மந்திரிகள், முன்னாள் மந்திரிகள், எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், முன்னாள் எம்.எல்.சி.க்கள், மாநகராட்சி மேயர்கள், முன்னாள் மேயர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், முன்னாள் தலைவர்கள் ஆகியோரை உறுப்பினராக கொண்ட விவசாய குடும்பங்களுக்கு இந்த நிதி உதவி கிடையாது.

* மத்திய, மாநில அரசு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவற்றின் அதிகாரிகள், ஊழியர்கள், முன்னாள் அதிகாரிகள், ஊழியர்கள் குடும்பங்களுக்கும் விவசாய குடும்பங்களுக்கான நிதி உதவி கிடையாது.

* மாதம் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமாக ஓய்வூதியம் பெறுகிற ஓய்வூதியதாரர்களின் குடும்பத்துக்கும் கிடையாது.

* கடந்த மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்களின் குடும்பங்களுக்கும் கிடையாது.

* பதிவு செய்துள்ள டாக்டர்கள், என்ஜினீயர்கள், வக்கீல்கள், ஆடிட்டர்கள், கட்டுமான வல்லுனர்கள் குடும்பங்களுக்கும் விவசாயிகளுக்கான நிதி உதவி கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், இரண்டாவது தவணையின்போது நிதி உதவி பெறுகிற விவசாயிகள் ஆதார் வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. இது விவசாயிகளுக்கு ஆசையைக் காட்டி ஏமாற்றும் திட்டம்தான் என விமர்சனங்களுக்கு உள்ளானாலும் மோடி பாஸ் ஆகிவிடுவார் என்றே தெரிவிக்கப்படுகிறது.