அனில் அம்பானி குற்றவாளி: பணத்தை கொடுங்கள், இல்லையென்றால் சிறைக்கு போங்க…. உச்சநீதிமன்றம்

Read Time:4 Minute, 7 Second

எரிக்சன் நிறுவனம் ரிலையன்ஸ் (ஆர்.காம்) நிறுவன அதிபர் அனில் அம்பானிக்கு எதிராக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவர் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.

ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பராமரிப்பு பணிகளை 7 ஆண்டுகள் கவனிப்பதற்கான ஒப்பந்தம், எரிக்சன் இந்தியா நிறுவனத்திடம் கடந்த 2014-ம் ஆண்டில் வழங்கப்பட்டது. இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் கடன் பிரச்னையில் சிக்கியது. இதனால், எரிக்சன் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய பராமரிப்பு கட்டணத்தை ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்தவில்லை.

இதையடுத்து, தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தில் எரிக்சன் நிறுவனம் முறையிட்டது. அந்தத் தீர்ப்பாயம் உத்தரவிட்டதன்படி, எரிக்சன் நிறுவனத்துக்கான ரூ.550 கோடியை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள்ளாக ரிலையன்ஸ் நிறுவனம் திருப்பிச் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை. இதனால், ரிலையன்ஸ் நிறுவனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், எரிக்சன் நிறுவனம் சார்பில் அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இதில் நீதிமன்றம் உத்தரவுப்படி ஏற்கனவே ரூ.118 கோடி கொடுக்கப்பட்டதை தொடர்ந்து மீதமுள்ள தொகைக்கு வட்டியுடன் ரூ.453 கோடி பாக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனால், எரிக்சன் நிறுவனம் சார்பில் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இதில் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைவர் சதீஷ் சேத், ரிலையன்ஸ் இன்பிராடெல் நிறுவனத்தின் தலைவர் சாயா விரானி ஆகிய மூவரும் குற்றவாளி என தீர்ப்பளித்தது.

எரிக்சன் நிறுவனத்துக்கான நிலுவைத் தொகையான ரூ.453 கோடியை 4 வாரங்களுக்குள் திருப்பிச் செலுத்தாவிட்டால், மூவரும் தலா 3 மாதங்கள் சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

உச்சநீதிமன்ற பதிவாளரிடம், 3 பேரும் தலா ஒரு கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் கூடுதலாக தலா ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது. நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்துவதற்காக நீதிமன்றம் வழங்கிய 120 நாள்கள் மற்றும் 60 நாள் கூடுதல் கால அவகாசத்தை ரிலையன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும், நீதிமன்றத்துக்கு பொய்யான வாக்குறுதியை அவர்கள் அளித்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியது. இந்த தீர்ப்பு வழங்கப்பட்டபோது ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானி உள்ளிட்ட மூவரும் விசாரணை அறையில் இருந்தனர்.

நீதிமன்ற தீர்ப்பை மதித்து நிலுவைத் தொகையை ரிலையன்ஸ் நிறுவனம் திருப்பிச் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ரிலையன்ஸ் நிறுவன பங்குகளை, முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்திடம் விற்பனை செய்யும் நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது என்றும், இதனால், திவால் நடவடிக்கைகளை தொடங்கியிருப்பதாகவும், அம்பானியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.