இந்தியா, பாகிஸ்தான் போருக்கு தயாரா? இருதரப்பு படை வலிமையும், ஆயுதங்களும்…!

Read Time:7 Minute, 5 Second

1947-ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு முறை காஷ்மீர் விவகாரத்தால் போர் புரிந்துள்ளது.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ முகமது புல்வாமாவில் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன.  பிரதமர் நரேந்திர மோடி இந்த தாக்குதலுக்கு வலுவான பதிலடியை கொடுக்கப்போவதாக கூறியுள்ளார். தாக்குதல் நடத்தப்பட்டால் பாக்கிஸ்தான் பதிலடி கொடுக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

1947 ல் சுதந்திரம் பெற்றதில் இருநாடுகளும் இருமுறை காஷ்மீர் விவகாரத்தால் போருக்கு போயிருக்கிறார்கள். இப்போது இருநாடுகளின் படை பலம் என்ன என்பதை பார்ப்போம்…

ராணுவ பட்ஜெட்

2018-ம் ஆண்டில் இந்தியா 1.4 மில்லியன் வீரர்களை கொண்ட படைக்கு 55 பில்லியன் டாலர்களை (ரூ.  4 லட்சம் கோடி) அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 சதவிதம் ஒதுக்கியுள்ளது என ஐஐஎஸ்எஸ் (இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்ட்ரேடஜிக் ஸ்டடீஸ்)  தெரிவித்துள்ளது.

இதுவே, பாகிஸ்தான் 653,800 வீரர்களை கொண்ட படைக்கு 11 பில்லியன் டாலரை (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.6 சதவிதம், 80 ஆயிரம் கோடி) செலவிட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து ராணுவ உதவியாக 100 மில்லியன் டாலரை பாகிஸ்தான் பெற்றுள்ளது. 1993 மற்றும் 2006-க்கு இடையில் பாகிஸ்தான் அரசாங்கம் மொத்த வருடாந்திர செலவில் 20 சதவிதத்தை ராணுவத்திற்காக செலவு செய்துள்ளது என ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) தெரிவித்துள்ளது. 2017-ல் மொத்த அரசு செலவில் 16.7 சதவிதம் ராணுவத்திற்கானது.

ஒப்பீட்டளவில், இதே ஆண்டில் இந்தியாவின் ராணுவச் செலவினம், மொத்த அரசாங்க செலவினத்தில் 12 சதவிதத்திற்கும் குறைவானது,  இது 2017-ல் 9.1 சதவிகிதம் ஆகும்.

அபாயகரமான மற்றும் அணு ஆயுதங்கள்

இரு நாடுகளும் அணுவாயுதங்களை ஏவும்திறன் கொண்ட ஏவுகணைகளை கொண்டுள்ளன. வாஷிங்டனில் செயல்பட்டுவரும்  மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையம் (CSIS) தகவலின்படி, இந்தியாவிடம் 3,000 கிமீ (1,864 மைல்கள்) முதல் 5,000 கிமீ (3,106 மைல்கள்) வரையிலான சுற்றுவட்டத்தில் எதிரிகளின் நிலையை அழிக்கும் வகையில் 9 வகையான ஏவுகணைகள் உள்ளது.

சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட பாகிஸ்தான் ஏவுகணைத் திட்டம், இந்தியாவின் எந்தப் பகுதியையும் அடையக்கூடிய குறுகிய மற்றும் நடுத்தர அளவிலான ஆயுதங்களைக் கொண்டுள்ளது. 2,000 கிமீ (1,242 மைல்கள்) வரை சென்று தாக்கக்கூடிய ஷீஹீன் 2 மிக நீண்ட தூரம் செல்லக்கூடியது. பாகிஸ்தான் 140 முதல் 150 அணு ஆயுதங்களை கொண்டுள்ளது. இந்தியாவிடம்  130-140 அணு ஆயுதங்கள் உள்ளது.

ராணுவம்

ஐஐஎஸ்எஸ் தகவலின்படி 1.2 மில்லியன் வீரர்களை கொண்ட இந்திய படையிடம் 3,565 போர் டாங்கிகள், 3,100 காலாட்படை போர் வாகனங்கள், 336 ஆயுதம் தாங்கிய டாங்கிகள், 9,719 ஆர்ட்டிலெரி பீரங்கிகள் உள்ளன.

இதுவே 5 லட்சத்து 60 ஆயிரம் வீரர்களை கொண்ட பாகிஸ்தானிடம் 2,496 டாங்கிகள், 1, 605 காலாட்படை போர் வாகனங்கள்,  4,472 ஆர்ட்டிலெரி ஆயுதங்கள் (375 தானியங்கி ஹெவிட்ஜிஸர்கள்) உள்ளது.

இந்தியாவிடம் பெரிய ராணுவம் இருந்த போதிலும் போதியளவு தளவாடங்கள், பராமரிப்பு குறைவு மற்றும் வெடிமருந்துகள், உதிரி பாகங்கள் பற்றாக்குறையால் சக்தி குறைந்த அளவிலே உள்ளது என IISS அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

விமானப்படை

127,200 வீரர்கள் மற்றும் 814 போர் விமானங்களை கொண்ட இந்தியாவின் விமானப்படை கணிசமாக பெரியதுதான், ஆனால் விமானப்படையின் விமானங்கள் பற்றி கவலை உள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து இருபுறமும் தாக்குதல் என்றால் இந்தியாவின் பாதுகாப்புத் திட்டங்களுக்கு சுமார் 750 விமானங்கள், 42 விமானப்படைகள் தேவைப்படுகின்றன. 1960 களில் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டன ரஷிய தயாரிப்பான மிக் -21 போன்ற பழைய விமானங்கள் விரைவில் ஓய்வு பெறும், 2032-க்குள் இந்தியாவுக்கு 22 விமானப்படைகள் இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

பாகிஸ்தான் 425 போர் விமானங்களை கொண்டுள்ளது, இதில் சீனாவின் எஃப்-7பிஜி மற்றும் அமெரிக்கன் F-16 போர் விமானங்களும் அடங்கும்.  வான்வழி தாக்குதலை முன்கூட்டியே எச்சரிக்கும் மட்டும் கட்டுப்படுத்தும் விமானங்களின் எண்ணிக்கை 7 ஆகும், இது இந்தியாவை விட மூன்று அதிமாகும் என IISS தெரிவிக்கிறது.

பாகிஸ்தான் விமானப்படை துல்லிய தாக்குதல், உளவுத்துறை, கண்காணிப்பு திறன்களை மேம்படுத்துகிறது எனவும் தெரிவிக்கிறது.

கடற்படை

இந்தியாவின் கடற்படை  ஒரு விமானம் தாங்கிய போர்க்கப்பல், 16 நீர்மூழ்கிக் கப்பல்கள், 14 துல்லியமாக இலக்கை அழிக்கும் கப்பல்கள், 13 ஆயுதம் தாங்கிய போர்க்கப்பல்கள், 106 ரோந்து மற்றும் கடலோர போர் கப்பல்கள் மற்றும் 75 போர் திறன் கொண்ட விமானத்தை கொண்டுள்ளது. இதில் கடற்படை மற்றும் கடற்படை விமான பணியாளர்கள் உள்பட 67,700 வீரர்கள் உள்ளனர். பாகிஸ்தான் குறிப்பிடத்தக்க வகையில் சிறிய கடற்படையை கொண்டது. பாகிஸ்தானிடம் 9 போர் கப்பல்கள், 8 நீர்மூழ்கிக் கப்பல்கள், 17 ரோந்து மற்றும் கடலோரக் கப்பல்கள் மற்றும் 8 போர் திறன் கொண்ட விமானங்களை கொண்டுள்ளது.