போருக்கு தயாரானது இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பு இலகுரக தேஜஸ் விமானம்…!

Read Time:3 Minute, 15 Second

இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பு விமானமான இலகுரக தேஜஸ் விமானப்படையில் இணைக்கப்பட்டது.

முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர்விமானமான LCA தேஜஸ் விமானம் இறுதியாக இந்திய விமானப்படையின் போர் நடவடிக்கைக்கு பயன்படுத்த தயாராகியுள்ளது. முழுஆயுதம் ஏந்திய போர் ஜெட் விமானம் விமானப்படையில் பயன்பாட்டுக்கு இறுதியாக அனுமதி கிடைத்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க நாளாகும்.  இந்திய ராணுவத்துறை சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டுக்கான கண்காட்சி பெங்களூருவில் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தேஜஸ் விமானங்கள் செயல்பாட்டுக்கான இறுதி அனுமதி சான்றிதழை விமானப்படைத் தளபதி தானோவிடம் வழங்கியது.

விமானப்படைத் தளபதி தானோவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேஜஸ் விமானங்கள் செயல்பாட்டுக்கு இறுதி சான்றிதழ் பெற்றது மிகவும் முக்கியமான மைல்கல்லாகும். பிப்-16 அன்று பொக்ரானில் நடைபெற்ற “வாயு சக்தி” போர் பயிற்சியின் போது இலக்கை துல்லியமாக தாக்குதல் மற்றும் வானிலே எரிவாயு நிரப்புதல் போன்ற சோதனைகளில் சிறப்பாக செயல்பட்டது,”என்றார்.

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தேஜஸ், ஏற்கெனவே நீண்ட காலமாக விமானப் படையில் உள்ள ரஷ்யத் தயாரிப்பான மிக்-21 விமானங்களுக்குப் பதிலாக, விமானப்படைக்கு வலுச்சேர்க்க உள்ளது.

வானிலிருந்து வானுக்கும், வானிலிருந்து தரைப்பகுதிக்கும் ஆயுதங்களைக் கொண்டு சேர்க்கும் திறன் படைத்த தேஜஸ், தொழில்நுட்பத் தடைகள் காரணமாக பல ஆண்டுகள் தாமதத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. கடந்த 1998-ல் இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனைகளை அடுத்து, அமெரிக்கா விதித்த தடைகள் காரணமாக, இந்த விமானத்தை உருவாக்குவதில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தியது. விமானப்படையில் உள்ள ரஷிய தயாரிப்பான மிக் விமானங்களுக்குப் பதிலாக முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் விமானங்கள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.