பெங்களூரு விமான கண்காட்சியில் தீ விபத்து.. ஒரு சிகரெட் துண்டால் பற்றி எரிந்த 300 கார்கள்…

Read Time:3 Minute, 8 Second

‘ஏரோ இந்தியா 2019’ கண்காட்சியின் பார்க்கிங் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதில் 300 கார்கள் எரிந்து நாசமாகின.

பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப் படை தளத்தில் பாதுகாப்புத் துறை மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல் நிறுவனத்தின் சார்பில் ‘ஏரோ இந்தியா – 2019’ சர்வதேச விமானக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 22 நாடுகளின் 61 அதிவேக போர் விமானங்களும், 365 நிறுவனங்களின் மையங்களும் இடம் பெற்றுள்ளன. ருத்ரா, சாரங்நேத்ரா, சகோய், ஹெச்டிடி -40, யூஎஸ்எப் – 17 உள்ளிட்ட விமானங்களின் அதிவேக வான் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர். சாகச நிகழ்ச்சிகள் தொடங்க்கி நடைபெற்ற நிலையில் மதியம் பார்க்கிங் கேட் எண் 5-ல் இருந்ந்து புகை வெளியேறியது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சுமார் 400 ஏக்கரில் காய்ந்த புற்கள், இலைகளில் தீ பற்றியதால் தீ மள, மளவென மற்றப்பகுதிகளுக்கும் பரவி கார்கள், இருசக்கர வாகனங்கள் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.

கார்கள் எரியும் காட்சி…

விபத்தை அடுத்து, கண்காட்சிக்கு வந்த பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று அதிகாரிகள் தொடர்ந்து ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்துக்கொண்டே இருந்தனர். கார்கள் பெருமளவு எரிந்து நாசமான நிலையில் போராடி தீயை வீரர்கள் அணைத்தனர். தீ விபத்தில் 300 கார்கள் எரிந்து நாசமாகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிகரெட் துண்டால் ஏற்பட்ட தீ பலமான காற்று வீசியதால் புற்கள், இலைகளின் வழியாக கார்களுக்கு பரவியுள்ளது என போலீஸ் தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

தீயை அணைக்க போராடும் வீரர்கள்…

பாதுகாப்பு படையினர் தரப்பில் இதுதொடர்பாக முழு தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஏரோ இந்தியா கண்காட்சி தொடங்குவதற்கு முந்தைய நாள், விமானங்கள் ஒன்றோடொன்று மோதியதில் விமானி ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.