மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்தது; செல்போன் தடை காரணமா?

Read Time:6 Minute, 50 Second

உலக பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் புராதனமான ஆன்மிகத் தலம் மட்டுமல்ல, தமிழர்களின் தொன்மையான வரலாற்றுச் சிறப்பைக் கூறும் கேந்திரமாகவும் திகழ்கிறது. முக்கிய வழிப்பாட்டு ஸ்தலமாகவும், கட்டிட கலையின் பொக்கிஷமாகவும் திகழ்கிறது. மதுரை என்றாலே மக்களும், கோவிலும் நெருங்கிய தொடர்புடன் வாழ்ந்ததற்கான சான்றுகளும் உள்ளன. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகம் மற்றும் வட மாநில பக்தர்களும் அதிக அளவில் வருகின்றனர்.

ஆண்டில் 240 நாட்கள் உற்சவ விழாக்கள் நடத்தப்படும் கோவிலில் பக்தர்கள் வருகை எப்போதும் கணிசமான அளவு உயர்ந்து வருவது வழக்கமாக இருந்தது. சுற்றுலா செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் மீனாட்சியின் தரிசனம் பெற கோவிலுக்கு செல்வார்கள். மீனாட்சிம்மன் கோவிலில் நடை திறந்ததும் தினமும் காலையில் பக்தர்கள் கூட்டம், மீனாட்சியம்மனையும், சுந்தரேஸ்வரரையும் காண நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள்.

கோவிலுக்கு பயங்கரவாத எச்சரிக்கை இருப்பதால் இப்போது 24 மணி நேரமும் பாதுகாப்பு வரம்பிற்குள் வருகிறது. கோவிலில் ஆயுதம் ஏந்திய போலீஸார் ‘சிப்ட்’ முறையில் கோயிலின் ஐந்து கோபுர வாசல்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கு அனுமதி கிடையாது. இதற்காக ஒவ்வொரு கோபுர வாசலின் அருகேயும் தனியாக பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீனாட்சியம்மன் கோவிலில் இலவச தரிசனம் மற்றும் ரூ.20, ரூ.50, ரூ.100 சிறப்பு கட்டண தரிசனத்தில் பக்தர்கள் கோவிலுக்கு செல்கின்றனர். சில வருடங்களுக்கு முன்னர் கோவில் நிர்வாகம் சன்னிதானம் பகுதியில் மொபைல் போன்களின் சேவையை தடுக்கும் வகையில் நடவடிக்கையை ஏடுத்தது, செல்போன் ஜாமர் கருவியை பொருத்தியது.

கடந்த ஆண்டு கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் வீரசந்திராயா் மண்டபம் சேதம் அடைந்தது. இதனையடுத்து கோவில் பகுதியில் செல்போன்கள் பயன்பாட்டுக்கு தடை விதிப்பு ஸ்திரமாக கண்காணிக்கப்பட்டது.

பக்தர்கள் வருகை குறைந்தது

இப்போது பக்தர்கள் வருகையில் சரிவு ஏற்பட்டுள்ளது என்ற புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. கோவிலுக்கு விழாக்காலம் இல்லாத நாட்களில் நாளொன்றுக்கு 10000 பேர் வருவார்கள். ஆண்டுக்கு சராசரியாக 50 லட்சத்திற்கு மேலான பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருவார்கள். ஆனால், கடந்த ஆண்டு பக்தர்கள் குறைந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2013-14ம் ஆண்டில் 57 லட்சத்து 31 ஆயிரத்து 650 பேரும், 2014-15ம் ஆண்டில் 59 லட்சத்து 26 ஆயிரத்து 72 பேரும், 2015-16ம் ஆண்டு 62 லட்சத்து 99 ஆயிரத்து 30 பேரும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்துள்ளனர்.

ஆனால், 2016-17ம் ஆண்டில் 45 லட்சத்து 4 ஆயிரத்து 824 பேராகவும், 2017-18ம் ஆண்டில் 41 லட்சத்து 15 ஆயிரத்து 758 பேராகவும் பக்தர்கள் வருகை குறைந்தது. மீனாட்சியம்மன் கோயிலை மையமாக கொண்டே மதுரையின் வளர்ச்சி அமைந்துள்ளது. பக்தர்கள் வருகை குறைவால் ஒட்டுமொத்த மதுரையின் வளர்ச்சியும் குறைய வாய்ப்புள்ளது என்று பார்க்கப்படுகிறது.

கோவில் இணை ஆணையர் நடராஜன் பேசுகையில், “ இவ்வாண்டு ஜனவரி வரை, 21 லட்சத்து 34 ஆயிரத்து 218 பேர் வந்துள்ளனர். குறைந்ததாக சொல்ல முடியாது. பக்தர்கள் வருகை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. சபரிமலை சீசன் நேரத்தில் மீனாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். சபரிமலையில் ஏற்பட்ட இயல்புநிலை பாதித்தால் கடந்த ஆண்டு மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருவார் கொஞ்சம் குறைந்தது.

செல்போன் தடையால் பக்தர்கள் வருகை குறைந்ததாக சொல்ல முடியாது. செல்போன் தடையால் பக்தர்கள் தற்போது கோயிலுக்குள் எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக சாமிதரிசனம் செய்து செல்கின்றனர், ’’ என்று கூறியுள்ளார்.

கோவில் சித்திரை திருவிழாவின் போது பக்தர்களின் வருகை அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே செல்போன் தடையும் காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

பக்தர்கள் சொல்வது என்ன?

செல்போன் தடைதான் கோவிலுக்கு பக்தர்கள் வருகை எண்ணிக்கை குறைந்துள்ளது என்றால் அதனைப்பற்றி கவலையடைய வேண்டியது எதுவும் கிடையாது என்கின்றனர். பக்தர் ஒருவர் பேசுகையில் “கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளோம் என்பதை மறந்து செல்போனில் பேசுபவர்கள் மற்றவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்துகிறார்கள். சாமி கும்பிட வந்தால், நிம்மதியாகவும், அமைதியாகவும் சாமியை தரிசனம் செய்துவிட்டு செல்லாம். போனை பாதுகாப்பாக வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும்.” என்கிறார்.

இப்போதைய காலத்திற்கு ஏற்ப மக்கள் தங்களுடைய ஆவணங்கள், வங்கி பணபரிமாற்றங்கள், தனிப்பட்ட ரகசியங்களை செல்போனில் கொண்டுள்ளனர். அவர்களுக்கு கோவிலுக்கு வெளியே செல்போனை கொடுத்துவிட்டு செல்ல மனமில்லை என்றும் உள்ளூர் பக்தர்கள் கோவிலுக்கு வருவது குறைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.