அதிமுக, திமுக கடும் போட்டி, இறங்காத தேமுதிக…!

Read Time:8 Minute, 2 Second

தமிழகத்தில், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சியான தி.மு.க.வும் தயாராகி வருகின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி, பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், என்.ஆர். காங்கிரசுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும், தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதேபோல், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணிகள் ஓரளவு உறுதியான போதிலும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

தேமுதிகவுக்கு முக்கியத்துவம்

பிப்ரவரி 9-ம் தேதி அதிமுக மற்றும் பா.ஜனதா இடையிலான கூட்டணி உறுதியானதும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். அப்போது உடல்நலம் குறித்து விசாரித்ததாக பியூஸ் கோயல் கூறினார். ஆனால் கூட்டணிக்கான முதல்கட்ட பேச்சுவார்த்தையென்று தகவல் வெளியாகியது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் திருநாவுகரசர், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் விஜயகாந்தை சந்தித்து பேசினர்.

தேமுதிகவை கூட்டணியில் இணைக்க அதிமுகவும் ரகசிய பேச்சுவார்த்தையை மேற்கொண்டது. விஜயகாந்தை சந்தித்து பேசிய ஸ்டாலினிடம், உங்கள் கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் வரவேற்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும் “உங்கள் நல்ல எண்ணத்துக்கு எனது பாராட்டுகள். நன்றி.” என்றார். இதன்மூலம் திமுகவும் தேமுதிகவை தன்வசம் இழுக்க முயற்சிப்பது வெளிப்படையாகவே தெரியவந்தது. தேமுதிகவிற்கு தமிழக அரசியலில் மீண்டும் முக்கியத்துவம் கிடைத்தது.

அதிமுக, திமுக போட்டி

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்போடு சேர்ந்து, 21 சட்டப்பேரவை தேர்தலுக்கும் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியாக உள்ளது. இந்த 21 தொகுதிகளில் வெற்றி பெறுவது அதிமுக ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்கு அவசியமாகவும், முக்கியமானதாகவும் இருக்கிறது. கூட்டணி உடன்படிக்கையின் போதே இடைத்தேர்தலில் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தான் அதிமுக கூட்டணியை அறிவிக்கிறது.

பா.ம.க. தன்னுடைய கூட்டணியில் இடம்பெறும் என திமுக எதிர்பார்த்த நிலையில் அது அதிமுக வசம் சென்றது. 2016 சட்டசபைத் தேர்தலிலும் தேமுதிகவை கூட்டணியில் இணைப்பதில் திமுக தோல்வியை தழுவியது. இதனால் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தது. இப்போது தேமுதிகவுடன் வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என திமுகவும் முயற்சிக்கிறது. ஆகமொத்தம், தேமுதிகவை கூட்டணியில் இணைக்க திமுக, அதிமுக இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு களத்தில் குதித்துள்ளன.

தேமுதிக கேட்பது என்ன?

பாமகவை விரைவில் தன்னுடைய வசம் இழுத்த அதிமுகவால் தேமுதிகவை திட்டமிட்டப்படி இழுக்க முடியவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது தே.மு.தி.க. வுக்கு பிடிக்கவில்லை.

வட மாவட்டங்களில் மட்டும் செல்வாக்கு உள்ள பா.ம.க. வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்படும் போது, தமிழகம் முழுவதும் பரவலாக வாக்கு வங்கி வைத்திருக்கும் தங்களுக்கு அதைவிட கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. வலியுறுத்தி வருகிறது. மேலும், பா.ம.க. வலுவாக உள்ள வட மாவட்டங்களில் தங்களுக்கு தொகுதிகள் வேண்டாம் என்ற கோரிக்கையையும் தே.மு.தி.க. முன்வைக்கிறது.

21 சட்டமன்ற இடைத்தேர்தலில் எங்களை ஆதரிக்கவேண்டும் எதிர்த்து போட்டியிடக்கூடாது, ஆதரித்து பிரச்சாரம் செய்யவேண்டும் என்பதே அதிமுகவின் கண்டிஷன். ஆனால் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 1. ஓசூர் 2. ஆண்டிப்பட்டி 3. பாப்பிரெட்டிப்பட்டி 4. சோளிங்கர் 5. ஒட்டபிடாரம் 6. தஞ்சாவூர் 7. நிலக்கோட்டை 8. ஆம்பூர் ஆகிய 8 தொகுதிகளில் தேமுதிக சென்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளது. இந்தத்தொகுதிகளில் தனது நிலைப்பாட்டை விட்டுத்தர தேமுதிக தயாராக இல்லை என முதல்கட்டமாக கூறப்பட்டது.

ஒரு வேளை திமுக கூட்டணிக்கு சென்றால், சில தொகுதிகளிலாவது கேட்டு நிற்க முடியும் என நம்புகிறது.

4 தொகுதிகள்தான்…

இதனால், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. அதிமுக தரப்பில் 4 தொகுதிகளை தேமுதிகவிற்கு கொடுக்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இப்போது, பா.ம.கவை போன்று எங்களுக்கும் 7 தொகுதிகள் மற்றும் மாநிலங்களவை எம்.பி. பதவி வேண்டும் என்று தேமுதிக கேட்டுள்ளது. அதிமுகவைவிட தேமுதிகவை அதிகமாக இழுக்க முயற்சி செய்யும் திமுக தரப்பிலும் 4 தொகுதிகளை கொடுக்க தயாராக உள்ளது. இதற்காக அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும் 10 தொகுதிகளில் ஒன்றை விட்டுத்தரவும் ஒப்புக்கொண்டுள்ளது.

இருப்பினும் குறைந்தது 6 தொகுதிகள் வேண்டும், ஒருவேளை 5 தொகுதிகள் என்றால், ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்க வேண்டும் என தேமுதிக ஸ்திரமாக கூறிவிட்டது. இப்போது திமுகவும், அதிமுகவும் தேமுதிகவின் கிரீன் சிக்னலுக்காக காத்திருக்கின்றன. யாருக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்…