எங்கள் கூட்டணியில்தான் அதிமுக, நாங்கள்தான் தலைமை… ஓபிஎஸ்ஸிடம் அமித் ஷா கரார்…!

Read Time:4 Minute, 41 Second

தமிழகத்தில் மிகப்பெரிய பலம் எதுவுமில்லாது 5 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா, தமிழகத்தில் அமைந்துள்ள கூட்டணி பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிதான் தவிர அதிமுக கூட்டணி கிடையாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறியுள்ளார்.

தமிழகத்தில், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலைகள் மற்றும் அதிமுகவிற்கு அதிகளவு கிடைக்கும் இஸ்லாமியர்கள் வாக்கு இழப்பு அச்சம் காரணமாக பா.ஜனதாவுடன் கூட்டணி என்பதில் அதிமுக விலகியே இருந்தது. தேர்தல் முடிந்ததும் தேவைப்பட்டால் ஆதரவு தருவோம் என அதிமுக தலைமை கூறியதாக செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் பா.ஜனதாவுடன் தேர்தலுக்கு முன்னதாகவே கூட்டணி அமைந்துள்ளது.

தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும்படி பலம் எதுவும் இல்லாத பா.ஜனதா முதலில் 10 தொகுதிகளை கேட்டதாகவும், பின்னர் 5 தொகுதிகள் வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியது. தமிழகத்தை பொறுத்தவரையில் இக்கூட்டணியில் மிகப்பெரிய கட்சியென்றால் அதிமுகதான். கடந்த 2014 தேர்தலில் யாருடனும் கூட்டணியில்லாது ஜெயலலிதா 37 தொகுதிகளில் வென்று வரலாறு படைத்தார். இன்று அந்த நிலை கிடையாது. ஆனால் இப்போது, பா.ஜனதாதான் கூட்டணிக்கு தலைமை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுக, பா.ஜனதா கூட்டணி அறிவிப்பு

பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா மதுரை வந்தபோது, தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு மிகக்குறைவாக 5 தொகுதிகள் கொடுக்கப்பட்டு இருந்தாலும், தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு தலைமை வகித்தாலும், அதிமுக தலைமையிலான கூட்டணி என்று அழைக்க முடியாது தமிழகத்தில் அமைந்துள்ள கூட்டணி பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறியுள்ளார்.

மேலும் “இப்போதிருந்து தமிழகத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிகழ்ச்சியாகவே இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

சந்திப்பின் போது உடன் இருந்த தமிழிசை சவுந்தரராஜன், இதை தமிழில் அனைத்து தலைவர்களுக்கும் தெரிவித்தார். இது தொடர்பான தலைவர்களுக்கு இடையிலான உரையாடல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதுபோக மார்ச் 1-ம் தேதி காஞ்சிபுரத்தில் நடக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பேரணியில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று முதல்வரிடமும், துணை முதல்வரிடமும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி…

கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், விஷயம் ரொம்ப சாதாரணமானதுதான். தேசிய அளவில் பாஜக தலைமையில் பிரதமர் மோடியின் கீழ் தேசிய ஜனநாயகக் கூட்டணி இருக்கிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தலைமை வகிக்கிறது என தி இந்துக்கு தெரிவித்தார். இதுவே அதிமுக தரப்பில், பா.ஜனதா அதிமுக இடையே தேர்தல் கூட்டணி கடந்த செவ்வாய்க்கிழமை முடிவானது. தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி உருவாகியுள்ளது என தெளிவாகத் தெரிவிக்கிறோம். இதில் எந்தவிதமான குழப்பத்துக்கும் இடமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில், பா.ஜனதா, மற்றவர்களுக்கு உத்தரவிடுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.