இதுவரை 5,000 படை வீரர்களை உருவாக்கிய தமிழகத்தின் ‘ராணுவ கிராமம்’

Read Time:5 Minute, 12 Second

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்திய வழியை ஏற்காத பலர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுபாஷ் சந்திர போஸோ தனியாக படையமைத்து பிரிட்டனுடன் போராடினார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூரில் முதலாவது இந்திய சுதந்திர அரசை நிறுவி, இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தபோது அவருக்குத் தோள்கொடுத்துத் துணை நின்றவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். நேதாஜியின் படைக்கு முதுகெலும்பாக இருந்தது தென் கிழக்கு ஆசியாவிலும், பர்மாவிலும் வாழ்ந்த தமிழர்கள்தான். இன்றளவும் தமிழர்கள் இந்திய பாதுகாப்பு படைகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தின் ராணுவ கிராமம்

வீட்டுக்கொருவர் தேசத்திற்கு பணியாற்ற வேண்டும் என்பதை இரண்டாம் உலகப்போர் காலத்திலிருந்தே நிறைவேற்றி வருகிறது தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமம். தூத்துக்குடியில் இருந்து 24 கி.மீ தூரத்தில், சுமார் 5000 குடும்பங்கள் வாழும் செக்காரக்குடி என்ற கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வீட்டுக்கு ஒருவர் என 2000-க்கும் மேற்பட்டோர் ராணுவம், கடற்படை, சிஆர்பிஎப், தமிழ்நாடு காவல்துறை உள்ளிட்டவற்றில் பணியாற்றி வருகின்றனர். இங்கிருப்பவர்களில் 3000-த்திற்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் படை வீரர்கள் ஆவர்.

கிராமத்தில் காலை நேரத்தில் இளைஞர்கள் பயிற்சியில் ஈடுபடுவதை காண முடியும். அனைவருடைய நோக்கமும் இந்திய ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். அவர்களுடைய கனவு இந்தியப் பாதுகாப்பு படையில் பணியாற்றுவது மட்டும்தான்.

சண்முகம்.

ராணுவ வீரர் ஒருவருடைய தந்தை சண்முகம் பிபிசியிடம் பேசுகையில் எங்கள் கிராமத்தில் இருந்து இளைஞர்கள் மூன்று, நான்கு தலைமுறையாக ராணுவம், கடற்படை, சிஆர்பிஎப் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளில் பணியாற்றி வருகிறோம். இப்போது எங்களுடைய ஊரை பொறுத்தமட்டில் 2000 பேர் வரையில் பல்வேறு படைப்பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர். இதுபோன்று ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள் இங்கு 2000த்திற்கும் அதிகமானோர் உள்ளனர் என கூறியுள்ளார்.

கிராமத்தை சேர்ந்த வெள்ளையம்மா பேசுகையில், எங்கள் வீட்டில் இரண்டு பேர் சிஆர்பிஎப்பிலும், இரண்டு பேர் ராணுவத்தில் பணியாற்றுகிறார்கள். ஒருவர் தமிழ்நாட்டு போலீசில் பணியாற்றுகிறார். இந்த ஊரில் அதிகமானோர் ராணுவத்தில்தான் பணியாற்றுகிறார்கள் என்கிறார்.

பயிற்சி செய்யும் இளைஞர்கள்…

ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் உடற்பயிற்சியுடன் எழுத்துத்தேர்வுக்காகவும் கடினமாக உழைத்து வருகிறார்கள். சுடலை என்ற இளைஞர் பேசுகையில், சிறுவயதில் இருந்தே ராணுவத்தில் சேரவேண்டும் என்ற இலக்குடன் பயிற்சி செய்து வருகிறோம். காலையில் உடலுக்கு என்ன தேவையென்பதை சரியாக செய்கிறோம். உணவுகளை சரியாக எடுத்து உடற்பயிற்சியை மேற்கொள்கிறோம். பாதுகாப்பு படையில் பணியாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படும் எங்களுக்கு மத்திய அரசும் உதவி செய்ய வேண்டும் என்கிறார். அடுத்த வருடம் நான் நிச்சயம் ராணுவத்தில் பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார்.

சுடலை.

உடற்தகுதியை நிரூபித்தாலும் தமிழ் மொழியில் நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படாதது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது என்கின்றனர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள். “உடற்தகுதியில் நாங்கள் வெற்றி பெற்றுவிடுகிறோம். ஆனால் எழுத்துத் தேர்வு தாய்மொழியில் இல்லாததால் சிரமமாக உள்ளது, இதற்கு தேவையான நடவடிக்கையை தமிழக அரசு ஏற்படுத்தினால் பயனாக இருக்கும்” என்று கூறியுள்ளார் கிராமத்தை சேர்ந்த இளைஞர் சுப்பிரமணி. கிராம இளைஞர்களுக்கு பலரும் பாராட்டி வருகிறார்கள். இதுபோன்ற கிராமங்கள் தமிழகத்தில் அதிகமாகவே உள்ளது.