இந்திய காடுகளில் வெளியேற்றப்படும் 11 லட்சம் ஆதிவாசி மக்கள்…!

Read Time:10 Minute, 32 Second

இந்தியா முழுவதும் 16 மாவட்டங்களில் காடுகளில் வசிக்கும் பட்டா இல்லாத 11,27,446 ஆதிவாசி பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள், வளர்ச்சித் திட்டங்கள் என்ற அனைத்து தரப்பு பிடியின்கிழ் சிக்குவது வனப்பகுதிகள்தான். இதுபோன்ற ஆக்கிரமிப்புகளால் அதிகமாக பாதிக்கப்படுவது வனங்களை மட்டுமே சார்ந்த வாழ்க்கைமுறை கொண்ட பழங்குடியின மக்கள்மட்டும். பெரும் நிறுவனங்கள் வேட்டையில் அவர்களுக்கும், வனங்களுக்கும் இடையிலான பெரும் வலைப்பின்னல் அறுக்கப்பட்டு, அவர்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டது. 

வனப்பகுதியில் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசின் மவுனம் மட்டுமே சம்மதமாக இருந்த நிலையில் பெரும் நிறுவனங்கள் பழங்குடியின மக்களை அவர்களுடைய இடத்தைவிட்டு விரட்டும் நிலை நேரிட்டது. இப்படி 2001 முதல் 2006-ம் ஆண்டுகளுக்குள் மட்டுமே 5 லட்சம் ஹெக்டேர்கள் வனப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றில் வாழ்ந்த பழங்குடியின மக்கள் அனைவரும் விரட்டப்பட்டனர். 

வன உரிமைகள் சட்டம் 

இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சியின்போது கடந்த 2006-ம் ஆண்டு பழங்குடி மக்களின் நலனுக்காகவும், அவர்களது உரிமைக்காகவும் வன உரிமைகள் சட்டம் கொண்டுவரப்பட்டது. மத்திய அரசு சம்மதம் தெரிவித்தால் மட்டும் போதும் என்ற நிலை மாறி, தேர்வு செய்யப்பட்டுள்ள நிலத்தில் வாழும் மக்களின் முடிவையும் அவர்களின் சம்மதத்தையும் பெற்றால் மட்டுமே அனுமதி வழங்கவேண்டும் என்பது முக்கியமானதாக இடம்பெற்றது. இதனால் அனுமதிகள் கிடைக்காமல் பல ஆக்கிரமிப்புகள் தவிர்க்கப்பட்டன. வாழும் வனத்தின் பாதுகாக்கும் பொறுப்பையும் அவர்களுக்கு சட்டம் வழங்குகிறது. 

பழங்குடியின மக்கள்.

இதுவரையில் அந்த கடமையை செய்தவர்களுக்கு சட்டமும் காடுகளை பாதுகாப்பதற்கான அங்கீகாரத்தை வழங்கியது.  

பாரம்பரியமாக வனப்பகுதிகளில் வாழ்ந்துவரும் பழங்குடியினர் யார் என்பதை சட்டப்பூர்வமாக விண்ணப்பித்து அவர்கள் தங்களை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று இந்தச் சட்டம் கூறுகிறது. வனப்பகுதியில் மூன்று தலைமுறைக்கும் அதிகமாக வாழும் பழங்குடிகள் அல்லாதவர்களுக்கு அந்த நிலத்தின் மீதான உரிமையை உறுதிசெய்தது

எதிர்ப்பு

இந்தச் சட்டத்தை எதிர்த்து 2008-ம் ஆண்டு பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்படும் ‘வைல்ட்லைஃப் ஃபஸ்ட்’ என்ற வனவிலங்கு நல தன்னார்வ அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இச்சட்டம் காடுகளை அழிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் இந்த சட்டம் தொடர வேண்டுமெனில் அதில் கூறியதுபோல பட்டா இல்லாத பழங்குடி மக்கள் வனங்களிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் தெரிவித்தது.
 
இந்த வழக்கை விசாரித்த  உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு 13-ம் தேதி முக்கிய தீர்ப்பை வழங்கியது. 17 மாநிலங்களில் பட்டா நிராகரிக்கப்பட்ட 11,72,931 பழங்குடியினர் மற்றும் ஆதிவாசி மக்களை ஜூலை 12-ம் தேதிக்குள் காடுகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நடவடிக்கை குறித்து 4 மாதங்களுக்குள் மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம்.

வெளியேற்றப்படுவதற்கு முன்பும் வெளியேற்றப்பட்டதற்கு பிறகும் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி இந்திய வனத்துறை ஆய்வு மையத்திற்கு ஆணையிட்டது.

நீதிபதிகள் அளித்த உத்தரவின்படி, பழங்குடிகளில் தமிழகத்திலிருந்து 11,742 பேர் வெளியேற்றப்படவுள்ளனர். இதில் அதிகப்பட்சமாக இந்தியாவின் அடர் வனப்பகுதிகளை கொண்ட மாநிலங்களான சத்தீஸ்கரில் 4,62,403 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 3,62,024 பேரும், மராட்டியத்தில் 2,28,221 பேரும், தென்னிந்தியாவில் அதிகப்பட்சமாக கர்நாடக மாநிலத்திலிருந்து 1,80, 956 பேரும் வெளியேற்றப்படவுள்ளனர்.

யார் பாதுகாப்பது 

இதுவரை சுமார்  18 லட்சம் மக்களுக்கு வன உரிமைகள் வழங்கப்பட்டு அவர்களுக்காக 72,000 சதுர கிலோமீட்டர் அளவுக்கு நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், மேலும் பல லட்சக்கணக்கான மக்களுக்கு அந்த உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலான மக்கள் இப்படியாக உரிமைகளைக் கேட்டுப் பெறவேண்டுமென்று தெரியாமலே வாழ்பவர்கள். இந்த உத்தரவு அத்தனை பேரையும் காடுகளை விட்டு வெளியேற்றுமாறு கூறுகிறது. 

சில மாநிலங்களில் தங்கள் நிலத்தின் மீதான உரிமைகளைக் கோரிய பழங்குடிகளுக்கு அது மறுக்கப்பட்டுள்ளது. அந்தக் கோரிக்கைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.  

வனங்களை அழிக்கத்துடிப்பவர்களிடம் இருந்து அதனை காப்பாற்றுவது யார்?

இந்திய வனங்கள் எவ்வளவோ ஆக்கிரமிப்பு சதிவேலைகளை எதிர்க்கொண்டுள்ளது, இவற்றை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றும் பழங்குடிகளை அப்புறப்படுத்தும் இந்த உத்தரவு மிகவும் ஆபத்தானது. இவ்வழக்கில் எதிர்வாதம் வைக்க வேண்டிய மத்திய அரசின் வழக்கறிஞர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. வனங்களை அழிக்கத்துடிப்பவர்களிடம் இருந்து யார்? அதனை காப்பாற்றுவது என்ற கேள்வி வலுப்பெறுகிறது. 

 சில சூழலியல் போராளிகளும் பழங்குடிகள் காடுகளை அழிப்பதாக பழங்குடிகள் மீது வழக்கு தொடுத்துள்ளார்கள். இயற்கையை அழிக்கத்துடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து இயற்கையை காப்பாற்ற முடிந்தவரையில் போராடுபவர்கள் இவர்கள்தான் என்பதை மறந்துவிட்டார்கள். ஒடிசாவின் நியமகிரி மலைத்தொடரில் வேதாந்தா அமைக்கவிருந்த சுரங்கம் பழங்குடிகளின் மறுப்பால் தடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

23 லட்சம் பழங்குடியினர்

வெளியேற்றப்படும்  பழங்குடி மக்கள் 11 லட்சம் என்று எளிதாக கூறிவிட முடியாது. இது 23 லட்சமாக உயரக்கூடும். உச்சநீதிமன்றம் உத்தரவிற்கு அனைத்து மாநிலங்களும் தலை வணங்கும் போது எண்ணிக்கை உச்சம் தொடும். மத்திய பழங்குடியின அமைச்சகத்தின் டிசம்பர் 2018 தரவின்படி, வன உரிமைகள் சட்டத்தின்படி தங்களுடைய உரிமைக்காக 42.19 லட்சம் பழங்குடி மக்கள் விண்ணப்பம் செய்துள்ளனர், அவர்களில் 18.89 லட்சம் பேரது கோரிகை மட்டும் ஏற்கப்பட்டுள்ளது. எனவே, மீதம் உள்ள 23 லட்சத்திற்கும் அதிகமான பழங்குயினர் வெளியேற்றத்தை எதிர்க்கொண்டுள்ளனர். உச்சநீதிமன்றம் உத்தரவின்படி குடும்பங்கள் வெளியேற்றப்படும் போது எண்ணிக்கை அதிகமாகும். 
 

பழங்குடியின மக்கள்.

எந்தப் பழங்குடியும் காடுகளை அழித்ததாக வரலாறே கிடையாது; அவர்களை பூர்வீக நிலத்திலிருந்து வெளியேற்றுவது என்பதே மிகவும் தவறானது. பழங்குடிகளை வெளியேற்றுவது காடுகளை அழிப்பதை இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும். எக்காரணைத்தைக் கொண்டும் பல நூற்றாண்டுகளாக காடுகளில் வசித்து வரும் மக்களை வெளியேற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மலை வாழ் மக்களை வனத்திலிருந்து வெளியேற்றக் கூடாது என்ற அவசர ஆணையை  மத்திய அரசு விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம் என பழங்குடி மக்கள் நல ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மத்திய அரசு மீது குற்றச்சாட்டு 

இவ்வழக்கில் அரசு தரப்பில் வெறும் அறிக்கை மட்டும் தாக்கல் செய்துவிட்டு அமைதி காத்துவிட்டனர் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்த போது மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.  2019 தேர்தலுக்கு முன்னதாக இதுபோன்ற உத்தரவு வெளியாகியுள்ளது பா.ஜனதாவிற்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. பழங்குடி மக்களின் உரிமையை உறுதிசெய்யும் சட்டத்தை ஆதரிக்கும் வகையில் மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடாததை பா.ஜனதாவிற்கு எதிரான அஸ்திரமாக எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும். 

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை விமர்சனம் செய்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சத்தீஷ்கார் மாநில காங்கிரஸ் அரசை உச்சநீதிமன்றத்தில் மேல்மூறையீடு செய்ய உத்தரவிட்டுள்ளார்.