இந்தியாவில் இருக்கும் உலகின் 7-வது பெரிய வைரம்…!

Read Time:5 Minute, 46 Second

இந்தியா சிறு, குறு என பல மன்னர்களால் ஆளப்பட்ட தேசமாகும். இங்கிருந்து ஆங்கிலேயர்களால் கொள்ளையடிக்கப்பட்டப் பொருட்கள் கணிக்கிட முடியாதவை. இப்படி கொள்ளைபோன பொருட்களில் விலைமதிப்புமிக்க சிலைகள், ஆபரணங்கள் மிகவும் முக்கியமானவை. இவற்றில் முதலில் நினைவுக்கு வருவது கோஹினூர் வைரம்தான். உலகப் புகழ் பெற்ற இந்த கோஹினூர் வைரம் 14–ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்டது. 105 காரட் எடை கொண்ட கோஹினூர் வைரத்தின் மதிப்பு 20 கோடி டாலர் (ரூ.1,480 கோடி) என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

பஞ்சாப்பை ஆண்ட மன்னரின் வாரிசுகள், கோஹினூர் வைரத்தை இங்கிலாந்து ராணிக்கு பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது. இப்போது இங்கிலாந்தில் உள்ள ஒரு அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இதனை இங்கிலாந்திடம் இருந்து திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக வைக்கப்பட்டு வருகிறது.

ஜேக்கப் வைரம்

சரி இப்போது இந்தியாவிடம் உள்ள பெரிய வைரம் பற்றிப் பார்ப்போம். 1884-ம் ஆண்டில் ஐதராபாத் நிஜாம் மெகபூப் அலிகான் வைர வியாபாரி அலெக்சாண்டர் மால்கம் ஜேக்கப்பிடம் இருந்து 185 காரட் எடை கொண்ட வைரத்தை வாங்கியுள்ளார். அவருடைய பெயருக்கு பின்னால் இவ்வைரம் அழைக்கப்படுகிறது. மிகவும் பிரம்பிக்கத்தக்க வைரத்தை வாங்க ஆசைப்பட்ட அவருக்கு ஜேக்கப் வைரம் கிடைத்தது.

மேற்கத்திய ஆடைகள் மீது அதிக நாட்டம் கொண்ட அவர் கலைநயமிக்க நகைகள் மற்றும் ஆபரணங்களை அணிந்து கொள்வதிலும் ஆர்வம் கொண்டு இருந்தார்.

மெகபூப் அலிகான்…

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் 1951-1952ம் ஆண்டில் கடைசி அரசரான நிஜாம் மீர் ஓஸ்மான் ஆல் கான் தலைமையில், மூதாதையர்களின் செல்வத்தை பாதுகாப்பதற்காக “Nizam Supplemental Jewellery Trust” உருவாக்கப்பட்டது. சீனாவின் ஹாங்காங் வங்கியில் இந்த பெரும் வரலாற்று மதிப்புமிக்க பொக்கிஷத்தை அறங்காவலர்கள் மூலம் பாதுகாப்பாக வைத்தனர். இதனையடுத்து நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின்னர் வைரம் உள்ளிட்ட தொகுப்பை இந்திய அரசு ரூ. 218 கோடிக்கு 1995-ம் ஆண்டு வாங்கி ரிசர்வ் வங்கியில் சேர்த்தனர்.

உலகின் 7-வது பெரிய வைரம்

பிற வைரங்களை போன்று ஜேக்கப் வைரமும் மிகவும் புகழ்பெற்றது. கோஹினூர் வைரத்தை விட இரு மடங்கிற்கும் அதிகமான அளவைக் கொண்டுள்ளது. 185 காரட் எடை கொண்ட இது உலகின் 7-வது பெரிய வைரம் என கூறப்படுகிறது. இப்போது ஜேக்கப் வைரம் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஆபரணங்கள்: நிஜாம் நகைக் கூடம் சேகரிப்பு கண்காட்சி

பிப்ரவரி 19 முதல் மே 5 வரை “இந்தியாவின் ஆபரணங்கள்: நிஜாம் நகைக் கூடம் சேகரிப்பு” எனப் பெயரிடப்பட்டுள்ள கண்காட்சி நடைபெறுகிறது.

நிஜாம் மெகபூப் அலிகான் ஆபரணங்கள்

இந்த கண்காட்சி திங்கள்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும். கண்காட்சியில் ஐதராபாத் நிஜாம்களின் சேகரிப்புகளிலிருந்து ஜேக்கப் வைரம் உள்பட 173 விலையுயர்ந்த நகைகள் மற்றும் ஆபரணப் பொருட்கள் இதில் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2001 மற்றும் 2007-ம் ஆண்டு இந்த கண்காட்சி நடத்தப்பட்டது.

இது 18-ம் நூற்றாண்டு முதல் 20-ம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதிக்குரிய அரிய மற்றும் விலையுயர்ந்த இரத்தினங்கள் மற்றும் நகைகளுக்கு என அமைக்கப்பட்டுள்ள மூன்றாவது கண்காட்சியாகும்.

நிஜாம் ஆபரணம்.

நிஜாம் நகைகள் சேகரிப்பு குறித்த ஒரு தொகுப்பு மற்றும் அது தொடர்பாக ஒரு புத்தகம் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
பேப்பர் வெயிட்டாக
வைரத்திற்காக பேசப்பட்ட தொகை வழங்கப்படவில்லை என்று ஜேக்கப் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நிஜாமை விசாரணைக்கு ஆஜராகும்படி ஐகோர்ட்டு கேட்டுக்கொண்டது. இதனையடுத்து கமிஷன் முன்னதாக ஆஜராகிய நிஜாம் இதனை அவமானமாக கருதினார். அதனால் வைரத்தை பேப்பர் வெயிட்டாக பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது.

நிஜாம் பொருட்களை ஐதராபாத்தில் காட்சியகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நிஜாம் வாரிசுகள் தரப்பில் முன்வைக்கப்பட்டு வருகிறது.