உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் புதிய உலக சாதனையுடன் தங்கம்… இந்திய வீரர் அசத்தல்!

Read Time:3 Minute, 5 Second

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் 61 நாடுகளை சேர்ந்த 500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பாகிஸ்தான் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்ட விவகாரத்தால் இப்போட்டி சர்ச்சையில் சிக்கியது. இதனால் 16 ஒலிம்பிக் கோட்டா இடங்கள் 14 ஆக குறைக்கப்பட்டன.

நேற்றையை ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய இளம் வீரர் சவுரப் சவுத்ரி அசத்தினார். இறுதி சுற்றில் இலக்கை மிக துல்லியமாக சுடுவதில் சிறப்பாக செயல்பட்ட சவுரப் சவுத்ரி மொத்தம் 245 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். 24 ரவுண்ட் சுட்ட சவுரப் சவுத்ரி சராசரியாக ஒவ்வொரு ரவுண்டிலும் 10.2 புள்ளி வீதம் எடுத்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்தாக உக்ரைன் வீரர் ஒமெல்சக் ஓலே 243.6 புள்ளி எடுத்ததே உலக சாதனையாக இருந்தது.

தங்கம் வென்றதன் மூலம் இந்த பிரிவில் இந்தியாவுக்கான ஒலிம்பிக் கோட்டாவையும் அவர் உறுதி செய்தார். 239.3 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்த செர்பியா வீரர் டாமிர் மிகெக்கும் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றார். முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான சீன வீரர் வெய் பாங் 215.2 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பெற்று வெண்கலம் வென்றார்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த 16 வயதான சவுரப் சவுத்ரி கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு மற்றும் இளையோர் ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றவர். மேலும் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பிலும் உலக சாதனை அவரது வசமே உள்ளது. நடப்பு தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். ஏற்கனவே அபுர்வி சண்டிலா 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் தங்கம் வென்று இருந்தார்.

வெற்றியை அடுத்து சவுரப் சவுத்ரி பேசுகையில், ஒலிம்பிக் தகுதி இடம் பற்றியோ அல்லது உலக சாதனை படைக்க வேண்டும் என்பது பற்றியோ நான் ஒரு போதும் சிந்திக்கவில்லை. முடிந்த அளவுக்கு எனது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பினேன் என குறிப்பிட்டுள்ளார்.