மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புபெற்ற ராமேசுவரம் கோவில்…

Read Time:12 Minute, 17 Second

இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் காசிக்கு நிகரான பிரசித்தி பெற்ற கோவிலாகும். காசிக்குப் புனிதப் பயணம் சென்றவர்கள், ராமேசுவரம் தலத்துக்கு வந்து தீர்த்தத்தில் நீராடி ராமநாதரை வழிபட்டால்தான் காசி தலப் பயணம் முழுமை அடைந்ததாகும் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கையாகும். இறந்தவர்களுக்காக திதி, தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த திருத்தலங்களில் முக்கியமான தலம் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புபெற்றது.

ராமாயணம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையான ராமேசுவரம் கோவில் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

பர்வதவர்த்தினி அம்மன் -ராமநாதசுவாமி

அமைவிடம்:-

அருள்மிகு ராமநாதசாமி கோவில் ராமேசுவரம் தீவில் உள்ளது. சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து ரெயில் வசதி உண்டு. மதுரை, திருச்சியில் இருந்து பேருந்து வசதியும் இருக்கிறது.

இறைவன் பெயர் : ராமநாதசுவாமி
இறைவி பெயர் : பர்வதவர்த்தினி

ஜோதிர்லிங்கம்

இந்தியாவில் உள்ள நான்கு முக்கியத் திருத்தலங்கள் வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், மேற்கே துவாரகநாதம், தெற்கே ராமநாதம் ஆகும். இவற்றுள் முதல் மூன்று தலங்களும் வைணவத் தலங்களாகும். நான்காவதான ராமநாதம் ஒன்றே சிவஸ்தலம். ராமபிரான் (வைணவம்) ஈஸ்வரனை சிவலிங்க வடிவில் (சைவத்தை) பிரதிஷ்டை செய்தார் என்பதால் சைவ, வைணவ மதத்தினர் இருவரும் வந்து கூடி வழிபடும் இடமாகவும் இருப்பதால் இந்தியாவில் உள்ள இந்து கோவில்களில் ராமேசுவரம் மிகவும் சிறப்பை பெற்றுள்ளது.

ராமநாதசுவாமி.

பனிரெண்டு ஜோதிர்லிங்க திருத்தலங்களில் வடக்கே பதினொன்றும் தெற்கே ஒன்றும் அமைந்துள்ளது. இத்தலத்தில் ராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாகத் திகழ்கிறார். இந்த ஜோதிர்லிங்கம், சுவாமி சன்னதியின் முதல் கிழக்குப் பிராகாரத்தில் உள்ள சிறிய சன்னதியில் இருக்கிறது. ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலைப் பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், தாயுமான சுவாமிகள் ஆகியோர் பாடி போற்றியுள்ளனர்.

தல வரலாறு

இலங்கைப் போரில் வெற்றி பெற்ற பின்னர் சீதையை அழைத்துக்கொண்டு ராமபிரான் அயோத்தி திரும்பும் போது ராவணனை கொன்றதால் ஏற்பட்ட தோஷம் நீங்க ராமேசுவரத்தில் சிவனை வழிபடத் தீர்மானித்தார். பிரதிஷ்டை செய்ய சிவலிங்கம் ஒன்றை கொண்டுவர அனுமனை காசிக்கு அனுப்புகிறார். சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்துக்குள் அனுமன் திரும்பி வராததால், கடற்கரை மணலால் சீதை சிவலிங்கம் ஒன்றை உருவாக்கி, அந்த சிவலிங்கத்தை ராமபிரான் பிரதிஷ்டை செய்து, பூஜையை முடித்தார்.

சிவலிங்கத்தை ராமபிரான் பிரதிஷ்டை செய்யும் காட்சி.

பின்னர் காலம் கடந்துவந்த அனுமன் தான் வறுவதற்க்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கண்டு கோபம் அடைகிறார். அப்போது ராமபிரான் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை பெயர்த்து எடுக்க முயன்று தோல்வியுற்று நின்றார். அனுமனை ராமபிரான் சமாதானப்படுத்தி, அவர் கொண்டுவந்த சிவலிங்கத்தை முதலில் பிரதிஷ்டை செய்த லிங்கத்துக்கு அருகில் பிரதிஷ்டை செய்தார். அப்போது அனுமன் கொண்டுவந்த லிங்கத்துக்கே முதலில் பூஜை நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இப்போது அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம், ராமலிங்கத்துக்கு வடக்குப்புறம் காசி விஸ்வனாதராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. காசி விஸ்வனாதருக்கே முதலில் பூஜை செய்யப்பட்ட பின்னர்தான் ராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமலிங்கத்துக்கு பூஜை நடைபெறுகிறது.

கோவில் அமைப்பு

ராமேசுவரம் கோவில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். கடல் நோக்கிய ராமேசுவரம் கோவிலின் கிழக்கு கோபுரமே மிகவும் உயரமானது. இதன் உயரம் சுமார் 126 அடியாகும். கோவிலுக்குள் செல்லும் போது மேல் பகுதியில் மிகவும் நேர்த்தியான முறையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. ராமாயண கதாபாத்திரங்கள் சிவனை வழிபடுவதுபோன்ற சிற்பங்கள் அற்புதமாகக் காட்சியளிக்கின்றன. ஆலயத்தினுள் ராமலிங்கம், காசி விஸ்வனாதர், பர்வதவர்த்தினி, விசாலாட்சி, நடராஜர் ஆகியோருக்கு தனித்தனி விமானங்கள் அமைந்திருக்கின்றன.

சீதாதேவியால் உருவாக்கப்பட்டு ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமலிங்கர், சிவலிங்கத் திருமேனியுடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். இந்த சிவலிங்கத் திருமேனியில் அனுமனின் வால் பட்ட தழும்பை இன்றளவும் காணலாம். ராமலிங்கர் சாமி சன்னதிக்கு இடதுபுறம் காசி விஸ்வனாதர் சன்னதி அமைந்துள்ளது. ராமலிங்கர் கருவறையின் முன்மண்டபத்தில் ராமன், சீதை, லட்சுமணன் ஆகியோருடைய சன்னதி உள்ளது. எதிரே தெற்கு நோக்கியபடி தனியே ஒரு ஆஞ்சநேயரும் எழுந்தருளி உள்ளார். விசாலாட்சி சன்னதியும் உள்ளது.

தீர்த்தம்

திருக்கோவில் உள்ள 22 தீர்த்தங்கள் மிகவும் பிரசித்திப்பெற்றவையாகும்.

ராமேஸ்வரம் ராமநாதர் சுவாமி கோயிலில் சமுத்திரமே அக்னி தீர்த்தமாகக் கருதப்படுகிறது. ஆலயத்தின் வெளியே 22 தீர்த்தங்களும் ஆலயத்துக்கு உள்ளே 22 தீர்த்தங்களும் இருப்பதாக ஐதீகம். ஆலயத்தின் முதன்மை தீர்த்தமான அக்னி தீர்த்தத்தில் நீராடிய பிறகே உள்ளே இருக்கும் தீர்த்தங்களில் நீராட வேண்டும் எனும் நியதியை வைத்திருக்கின்றனர்.

கோடி தீர்த்தம், கங்கா, யமுனா, கயா, பிரம்மஹத்தி, மகாலட்சுமி, சாவித்திரி, சேதுமாதவ, சந்திர, சூரிய தீர்த்தங்கள் உட்பட 22 தீர்த்தங்கள் ஆலயத்தினுள் இருக்கின்றன.

அக்னி தீர்த்தம்.

அக்னி தீர்த்தமான ராமேசுவரம் கடலுக்குப் புராணரீதியிலான விளக்கமும் வழக்கத்தில் இருக்கிறது. சீதையின் கற்பின் சிறப்பை உலகுக்கு காட்ட ராமன் அவரை அக்னி பிரவேசம் செய்யச் சொல்கிறார். அக்னியில் பிரவேசித்த சீதையின் கற்பு அந்த அக்னியையே சுட்டதாகவும், தன்னுடைய வெப்பத்தைத் தணிக்க ராமேஸ்வரம் கடலில் அக்னி பகவான் மூழ்கியதாகவும் புராணக் கதை கூறுகிறது. அக்னி தீர்த்தம் தோஷ நிவர்த்தி செய்யும் மகிமை கொண்டதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே இருக்கும் 22 தீர்த்தங்களில் (கிணறுகள்) நீராடுவதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

ராமேஸ்வரம் கோவில் தீர்த்தங்களும்.. பலன்களும்…

சக்திபீடம்

ராமேசுவரம் கோவில் அம்பிகையின் சக்தி பீடங்களில் இது சேதுபீடம் ஆகும். அம்பிகை பர்வதவர்த்தினியின் சன்னதி, ராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்துக்குக் கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது. அம்பிகை சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர். அம்பிகை, கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

அம்பிகை பர்வதவர்த்தினி

தென்மேற்கு மூலையில் சந்தானகணபதியின் சன்னதி அமைந்திருக்கிறது. ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சன்னதி அமைந்துள்ளது. ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிராகாரங்களுக்கிடையே சேதுமாதவர் சன்னதி அமைந்துள்ளது. தினமும் காலை 5 மணிக்கு ராமநாதசுவாமி சன்னதியில், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் நடக்கிறது.

உலகப் புகழ்பெற்ற மூன்றாம் பிராகாரம்

ராமேசுவரம் கோவிலின் மற்றொரு சிறப்பு 1212 தூண்களைக் கொண்ட மூன்றாம் பிராகாரம் ஆகும். உலகிலேயே மிக நீளமான பிராகாரம் என்ற பெருமையைப் பெற்ற இப்பிராகாரம், உலகப் பிரசித்தி பெற்றதாகும். முத்துவிஜயரகுநாத சேதுபதி அவர்களால் (1735 – 1746) கி.பி. 1740-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரசித்தி பெற்ற மூன்றாம் பிராகாரம் அமைக்கும் பணி, முத்துராமலிங்க சேதுபதி அவர்களால் (1740 – 1770) கட்டி முடிக்கப்பட்டது.

மூன்றாம் பிராகாரம்.

பிராகாரத்தில், ராமபிரானுக்கு கடலில் பாலம் (சேது பாலம்) அமைக்க உதவி செய்ய வந்த நளன், நீலன், கவன் ஆகிய மூன்று வானரர்களின் பெயரால் லிங்க சன்னதிகளும், பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சன்னதியும் உள்ளன. இந்த நடராஜர், ருத்திராட்ச மண்டபத்தில் அழகுடன் எழுந்தருளியுள்ளார்.

விழாக்கள்

இங்கு மாசி மாதத்தில் மகா சிவராத்திரியும், ஆடி மாதத்தில் திருக்கல்யாணமும், தைப்பூசத்தில் லட்சுமண தீர்த்தத்தில் தெப்பத் திருவிழாவும் முக்கியமான திருவிழாக்கள் ஆகும். வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடக்கிறது.

ஆடி திருக்கல்யாணம்.

ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் சமுத்திரக் கரையில்தான் முன்னோர்களுக்குத் தர்ப்பணங்கள், பித்ரு கடன்கள் நிறைவேற்றப்படுகின்றன. தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மஹாளய அமாவாசை ஆகிய தினங்களில், பக்தர்கள் கூட்டத்தால் ராமேசுவரம் நிரம்பி இருக்கும். ராமாயணத் தொடர்புடைய ராமலிங்கத்தை வழிபட, இந்தியாவின் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகின்றனர்.

ஒருமுறை ராமேசுவரம் சென்று ராமநாதசுவாமி – பர்வதவர்த்தினி அம்பிகையை தரிசனம் செய்து வாருங்கள்…