இந்திய விமானப்படையின் அணிவகுப்பை பார்த்து பின்வாங்கிய பாகிஸ்தான் விமானப்படை…!

Read Time:2 Minute, 5 Second

இந்திய விமானப்படையின் அணிவகுப்பை பார்த்து பாகிஸ்தான் விமானப்படை பின்வாங்கியது என தெரியவந்துள்ளது.

இந்திய விமானப்படை எல்லையை தாண்டி சென்று பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழித்தது. பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படையின் 12 விமானங்கள் சுமார் 1000 கிலோ வெடிகுண்டை வீசியது. 

இந்திய விமானப்படையின் எல்லைத் தாண்டிய தாக்குதல் குறித்து வெளியுறவு செயலர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக உளவுத்துறையின் மூலம் தகவல் கிடைத்தது. இதற்காக பயங்கரவாதிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இது தொடர்பாக பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பினோம். ஆனால் பயங்கரவாத முகாம்களை அழிக்க அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அவர்கள் தாக்குதல் நடத்துவதுக்கு முன் நாம் நம்மை தற்காத்துக்கொள்வது முக்கியம். எனவே, இந்திய விமானப்படை தாக்குதலை நடத்தியது” என்றார்.
 
இந்திய விமானப்படையின் மிரேஜ் 2000 ரக போர் விமானம் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பாகிஸ்தான் மற்றும் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் அதிரடி தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதல் சுமார் 19 நிமிடங்கள் நடந்தது. அப்போது பாகிஸ்தானின் F16 ரக போர் விமானங்கள் பதில் தாக்குதலுக்கு வந்தாகவும், இந்தியா போர் விமானத்தின் அணிவகுப்பை பார்த்து பின்வாங்கிவிட்டதாகவும் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்ததாக ஏ.என்.ஐ செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.