இந்திய விமானப்படை குறிவைத்த பயங்கரவாதி யூசுப் அசார் யார்?   

Read Time:4 Minute, 0 Second

இந்திய விமானப்படை குறிவைத்த பயங்கரவாதி யூசுப் அசார் கந்தகார் விமானக் கடத்தல் விவகாரத்தில் இந்தியாவால் தேடப்பட்டவன் ஆவான். 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை இன்று அதிகாலை 3.30 மணியளவில்  பாகிஸ்தானுக்குள் புகுந்து அதிரடி தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற இந்திய விமானப்படையின் 12 போர் விமானங்கள்  சுமார் 1000 கிலோ வெடிகுண்டை முகாம்கள் மீது வீசியது. இதில் பாலாகோட், சக்கோத்தி மற்றும் முசாபராபாத்தில் இயங்கிவந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 

பாலாகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதில் ஜெய்ஷ் பயங்கரவாத இயக்கத்தின் மிகப்பெரிய முகாம் அழிக்கப்பட்டது என இந்திய அரசு தெரிவித்துள்ளது. விமானப்படையின் தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் ஏராளமான பயங்கரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த தளபதிகள் மற்றும் தற்கொலைப் படையினர் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் மட்டும் 200-300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பாலாகோடில் அழிக்கப்பட்ட ஜெய்ஷ் முகாம், யூசுப் அசார் தலைமையில் இயங்கி வந்துள்ளது.

யூசுப் அசார் யார்?

இந்திய விமானப்படை அழித்த பாலாகோட் பயங்கரவாத முகாமின் தலைவன் யூசுப் அசார் என்று அழைக்கப்படும் உஸ்தாத் கவுரி,  ஜெய்ஷ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரின் மைத்துனர் ஆவான். இவனை ஏற்கனவே இந்திய அரசு தேடிவருகிறது. 1999-ம் ஆண்டு நேபாளத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் IC 814 கடத்தப்பட்டு ஆப்கானிஸ்தானின் கந்தகார் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அதிலிருந்த பயணிகளை விடுவிக்க பயங்கரவாதி மசூத் அசாரை விடுதலை செய்ய வேண்டும் என்று பயங்கரவாத இயக்கம் கூறியது. இதனையடுத்து பயணிகளை காப்பாற்ற இந்திய அரசு மசூத் அசாரை (இப்போது ஜெய்ஷ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவனாக உள்ளான்) விடுதலை செய்தது. 

இச்சம்பவத்தில் மூன்று பயங்கரவாதிகளை தப்பிக்கசெய்ய கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவன்தான் யூசுப் அசார். இவன் பெயர் உள்பட 20 பேரது பெயரை தேடப்படும் குற்றவாளிகள் என்று இந்திய அரசு பாகிஸ்தானிடம் வழங்கியது. இந்தியாவில் இவனை அரசு கடத்தல் மற்றும் கொலை வழக்கில் தேடிவருகிறது.இவனுக்கு எதிராக 2000-ம் ஆண்டு இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று இண்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸை விடுத்தது. அப்போது அவன் பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்தான் என தெரிவிக்கப்பட்டது. யூசுப் அசார் இந்தி மற்றும் உருது மொழியில் தேர்ந்தவன் எனவும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை எங்களது மண்ணிலோ, பிற தேசத்திலோ அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் கூறினாலும் இதுவரையில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதற்கிடையே இந்திய விமானப்படை தாக்குதலுக்கு முன்னதாகவே முக்கிய பயங்கரவாதிகள் பத்திரமாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு சென்றுவிட்டனர் என தகவல்கள் தெரிவிப்பதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.