பாகிஸ்தான் ராடாரில் சிக்காமல் சாகசம்… 48 ஆண்டுகளுக்கு பிறகு விமானப்படை அதிரடி…!

Read Time:3 Minute, 39 Second

48 ஆண்டுகளுக்கு பின்னர் எல்லையை தாண்டி சென்று பாகிஸ்தானுக்குள் அதிரடியான தாக்குதலை நடத்தி இந்திய விமானப்படை சாதனைப் படைத்துள்ளது.

பாகிஸ்தான் பகுதிக்குள் புகுந்து ஜெய்ஷ் -இ-முகமது முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் மிராஜ் 2000 போர் விமானங்கள் பெரும் சாதனை புரிந்துள்ளன. மிரேஜ் 2000 விமானம் ராடாருக்கு சிக்காத தொழில்நுட்பம், உணர்வுக் கருவிகள், கணினி அமைப்புகள், மிகத் துல்லிமான இலக்கை குறிவைக்கும் திறன், தேவையான ஆயுதங்களை தாங்கிச் செல்லும் சக்தி ஆகியவற்றை கொண்டது. மிராஜ் 2000 அதிகபட்சம் 2,336 கிலோ மீட்டர் வேகத்திலும், 17,060 மீட்டர் உயரத்தில் பறக்கக் கூடியது.

விமானத்தால் ஒரே நேரத்தில் 13,800 கிலோ வெடிபொருட்களை எடுத்துச் சென்று தாக்குதல் நடத்த முடியும். இன்றைய தாக்குதலில் 1000 கிலோ எடை கொண்ட வெடி பொருட்களை மட்டும் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரு மணிநேரத்தில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு வேகமாக பறந்து சென்று தாக்கும் திறன் கொண்டது மிரேஜ் பாகிஸ்தான் ராடாரில் சிக்காமல் உள்ளே சென்றுள்ளது. சென்ற வேகத்தில் துல்லியமான தாக்குதலை நடத்தி பத்திரமாக திரும்பியுள்ளது. அப்போதுதான் பாகிஸ்தான் விமானப்படை இடைமறிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்திய விமானப்படைகளின் அணிவகுப்பை பார்த்து அவை திரும்பிவிட்டது என விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

48 ஆண்டுகளுக்கு பிறகு

இந்திய விமானப்படையின் விமானம் ஒன்று எல்லையை தாண்டி சென்று தாக்குதல் நடத்துவது என்பது 1971-க்கு பின்னர் இப்போதுதான் நடக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே சுதந்திரத்திற்கு பின்னர் போர்கள் நடைபெற்றுள்ளது. இதில் பல போர்களில் இந்தியாவிற்கு பொதுவாகவே தரைப்படையின் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கார்கில் போர் வரையில் பெரிய அளவில் தரைப்படைக்கே பெரும் பங்கு இருந்தது.

மிரேஜ் 2000

1999-ம் ஆண்டு கார்கில் போர் நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றிப்பெற்றது. ஆனால் இந்திய விமானப்படையின் விமானங்கள் எல்லையைத் தாண்டக்கூடாது என வாஜ்பாய் உத்தரவிட்டுவிட்டார். இதனால் எல்லைத் தாண்டவில்லை. 1971-ம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் விடுதலை பெறுவதில் இந்தியா முக்கிய பங்காற்றியது. வங்கதேச போரில் இந்திய விமானப்படை அதிரடியான சேவையை மேற்கொண்டது. இப்போது 48 ஆண்டுகளுக்கு பிறகு எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டிச் சென்று பாகிஸ்தானின் உட்பகுதிக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்களை அழித்து அசத்தியுள்ளது.