டெல்லி: கல்வித்துறையில் அசத்தும் கெஜ்ரிவால் அரசு

Read Time:9 Minute, 45 Second

பிப்ரவரி 2015-ல் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தபோது கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்ற உறுதிமொழியை அளித்தது. இப்போது டெல்லியில் அரசு நடத்தும் 1000 பள்ளிகளில் பாராட்டத்தக்க சிறப்பான மாற்றங்களை நாம் நேரடியாகவே பார்க்கமுடியும்.

பள்ளி வகுப்பறைகள் வண்ணமயமான சுவர்கள் மற்றும் வசதியான பெஞ்சுகளுடன் தூய்மையாக காட்சியளிக்கிறது. அரசு பள்ளியில் மேல்நிலை மாணவர்கள் படிக்கும் வகையில் ப்ரொஜெக்டர், ஸ்மார்ட் போர்டுகள் மற்றும் ஏர் கண்டிஷனிங் ஆய்வகங்கள் மற்றும் விளையாட்டு வசதிகள் என ஆச்சர்யமாக பார்க்கும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. சில பள்ளிகளில் லிஃப்ட் மற்றும் நீச்சல் குளங்கள் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

உயிரியல் ஆய்வகம் டெல்லி அரசு பள்ளி

இதுபோன்ற ஒரு ஆடம்பர வசதிகள் பல தனியார் பள்ளிகளில் இல்லையென்றே சொல்லும் வகையில் ஆம் ஆத்மி அரசு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

டெல்லியில் அரசாங்கத்தால் இயங்கும் அரசுப் பள்ளிகள் எப்போதும் இதுபோன்று காட்சியளித்தது கிடையாது. பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்தும், சரியான தண்ணீர், கழிப்பறை மற்றும் விளையாட்டு மைதான வசதிகள் இல்லாமலே இருந்தது. 2015-ம் ஆண்டில் ஆம் ஆத்மி பதவிக்கு வந்த பின்னர் 53 பள்ளிகளுடன் சேர்ந்த ஒரு பைலட் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இப்போது அரசு பள்ளிகள் பல தனியார் பள்ளிகள்விட நன்றாக உள்ளது.

சர்வோதயா வித்யாலயா, நியூ டெல்லி

பெயரை வெளிப்படுத்த விரும்பாத ஆசிரியர் ஒருவர் பேசுகையில், “நான் 2007-ம் ஆண்டு முதல் இந்த பள்ளியில் ஆசிரியராக இருக்கிறேன். குறிப்பிட்ட ஆண்டுகளில் நான் இந்த மாற்றத்தை பார்த்திருக்கிறேன். முன்னதாக பள்ளியில் சுமார் 20 அறைகள் இருந்தன, ஆனால் இப்பொழுது 78 ஆனது, அதில் ஆய்வகங்கள் மற்றும் பல்நோக்கு மையமும் அடங்கும். குளிர்சாதன வசதிகொண்ட ஆய்வகம் உள்பட பள்ளியில் இப்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மாணவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது”என்று கூறுகிறார்.

ஆசிரியருடன் முன்னாள் கல்வி ஆலோசகர் அதிஷி

டெல்லி கல்வித்துறை அமைச்சர் மணீஷ் சிசோடியாவின் முன்னாள் ஆலோசகரான அதிஷி, இப்போது கிழக்கு டெல்லியிலிருந்து மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளராக இருக்கிறார். அதிஷி ஆம் ஆத்மி அரசாங்கம் உள்கட்டமைப்பு சீர்திருத்தங்களை எவ்வாறு ஆரம்பித்தது என்பதை விளக்கினார். பள்ளிகளில் முந்தைய காலங்களில் இருந்ததை விரிவாக பேசுகையில், “பல வகுப்புகள் ஒரு அறையில் நடத்தப்பட்டன. மாணவர்கள் பெஞ்கள் இல்லாத காரணத்தினால் தரையில் உட்கார வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சுவர்கள் மோசமான நிலையில் இருந்தன. சரியான கழிப்பறைகள் மற்றும் நீர் கிடைப்பதில் குறைபாடு இருந்தது.

அப்போது 4 வருடங்களுக்குள் 21000 புதிய வகுப்பறைகளை கட்ட வேண்டும் அரசு முதலில் கூறியது. ஆளுநர் உடனான மோதலால் இதனை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. 8000 வகுப்பறைகள் கட்டப்பட்டது, 13,000 கட்டப்பட்டு வருகிறது.  புதியதாக மொத்தம் 25 பள்ளிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது, 31 பள்ளிகளுக்கு கட்டுமானப் பணிகள் நடக்கிறது. இதில் மொத்த பாராட்டும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் சிசோடியாவையே சேரும். அவர்கள் பள்ளிகளில் அடிப்படை மாற்றங்கள் மட்டுமின்றி கல்வி தரத்தை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளனர்,” என்று கூறினார்.

கல்வித்துறையில் அரசு மேற்கொண்ட முயற்சிக்குரிய பலன் கிடைத்துள்ளது. ஆம் 2018-ம் ஆண்டு டெல்லி அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களின் தேர்சி விகிதம் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்தது.  அரசு பள்ளிகளில் 90.68 தேர்ச்சி சதவீதமாக இருந்தது. இதுவே, தனியார் பள்ளிகளில் வெற்றி சதவீதம் 88.35 சதவீதம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் டெல்லியில் அரசு பள்ளிகள் பெற்ற உயர்ந்த தேர்ச்சி சதவீதம் இதுவாகும்.

பள்ளி மாணவர்களுடன் கல்வி அமைச்சர் மனிஷ்

“நாங்கள் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்துகிறோம், மேலும் பள்ளியின் தலைவர்கள், ஆசிரியர்களுக்கு இப்போதைய கற்பிக்கும் முறையில் மாற்றம் கொண்டுவர தேவையான நடவடிக்கையை மேற்கொள்கிறோம். முன்பு எப்போதும் இல்லாத வகையில் பள்ளி ஆசிரியர்கள் பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்,” என்கிறார் அதிஷி.  கடந்த ஆண்டு, டெல்லி அரசு ‘மிஷன் புனியாத்திட்’ பிரச்சாரத்தை கோடை விடுமுறை நாட்களில் நடத்தியது. இதில் 3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் Mission Buniyaad என்ற திட்டத்தை அரசு முன்னெடுத்தது.

மாணவர்களை ஊழல், வன்முறை, வெறுப்பு, பயங்கரவாதம் ஆகியவற்றிற்கு எதிராக மாணவர்களை மாற்றியமைக்கும் ஒரு மகிழ்ச்சியான பாடத்திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பள்ளிகளில் தியானம், மனபயிற்சியில் மீது கவனம் செலுத்தும் வகையில் பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. எட்டு லட்சம் மாணவர்கள் உள்ளடங்கிய நெறிகள் நடைமுறை, நன்றியறிதல், அறநெறி மற்றும் மதிப்பு அடிப்படையிலான கதைகள் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கி பாடதிட்டம் கொண்டுவரப்பட்டது. மாணவர்களிடையே தூய்மை பழக்கங்களை கற்பிப்பதற்கு அதுதொடர்பான நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்ட பாடத்திட்டத்தை உருவாக்குவோம் என்கிறது ஆம் ஆத்மி அரசு.

வரும் கல்வியாண்டு முதல் ‘தொழில் முனைவோர் பாடத்திட்டம்’ ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. பள்ளிகளில் 9-ம் வகுப்பு மற்றும் அதற்கும் மேலான மாணவர்களுக்கு தொழில்முனைவிற்காக பயிற்றுவிக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கை அரசாங்க பள்ளிகளில் இது முதல்முறையாகும், ஆம் ஆத்மி அரசாங்கம் ஒரு பெரிய வழியில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகளை ஒழுங்கமைக்கத் தொடங்கியது. இதுவும் பயனாக உள்ளது என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் ஒருவர் பேசுகையில், “இது உண்மையில் உதவுகிறது, பொருளாதார ரீதியில் பலவீனமாக இருக்கும் குழந்தைகளுக்கு அதிக கவனமும் கவனிப்பும் தேவைப்படுகிறது” என கூறியுள்ளார்.

கடந்த 2018-19ம் ஆண்டு பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 26 சதவீதம் ஒதுக்கியது. தொடர்ந்து மூன்று வருடங்களாக கல்வித்துறைக்கு 25 சதவீதம் நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் ஆம் ஆத்மி அரசு கல்வித் துறைக்கு இதுவரையில் 13 ஆயிரத்து 997 கோடி ஒதுக்கியுள்ளது.

கிழக்கு டெல்லியின் லக்ஷ்மிநாகரில் சிறிய கடை உரிமையாளரான ராஜா யாதவ் பேசுகையில், “என்னுடைய மகள் நல்ல வசதிகளை கொண்ட பள்ளியில் படிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்…” என கூறியுள்ளார்.

“என்னுடைய மனைவியும், நானும் படிக்கவில்லை. என்னுடைய மகள் 3-ம் வகுப்பு படிக்கிறாள். பள்ளியில் ஏராளமான வியத்தகு மாற்றங்கள், ஏசி, விளையாட்டு மைதானம் எல்லாவற்றையும் நான் பார்க்கிறேன்,” என்கிறார். அப்பகுதியில் ஆட்டோ ஓட்டும் ரோஷன் லால் பேசுகையில், “என்னுடைய மகன் இப்போது பள்ளிக்கூடம் செல்வதை மிகவும் விரும்புகிறான். அது மட்டுமல்ல, அவன் பள்ளியில் படித்ததை வீட்டிற்கு வந்ததும், எனக்கும் கற்றுக்கொடுக்கிறார்,” என்கிறார். மனமிருந்தால் மாற்றம் சாத்தியமே என்று கெஜ்ரிவால் தன்னுடைய சகாக்களுடன் செய்துகாட்டியுள்ளார். அவருடைய நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.