இந்திய விமானி அபிநந்தன் நாளை விடுதலை: பாகிஸ்தான் அறிவிப்பு!

Read Time:3 Minute, 19 Second

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு இடையே, பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் புதன் கிழமை காலை இந்தியாவிற்குள் நுழைந்து இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சித்தது. இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததில் ஒரு பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அப்போது இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மிக் 21 விபத்துக்குள் சிக்கியது. இதிலிருந்த விமானி அபிநந்தன் பாராசூட்டில் தப்பிக்க எடுத்த முயற்சி பலனளிக்காமல் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார், அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.

முந்தைய சம்பவங்களால் பாகிஸ்தானில் சிக்கிய அபிநந்தன் நிலை என்னவாக இருக்கும் என்று மக்கள் மத்தியில் பதட்டம் நிலவியது. இதனையடுத்து அபிநந்தன் நல்ல முறையில் நடத்தப்படுகிறார் என பாகிஸ்தான் தரப்பில் வீடியோ வெளியிடப்பட்டது.

அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா, பாகிஸ்தான் மட்டுமின்றி உலகம் முழுவதும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கிடையே போர் நடக்காத நிலையில் அவரை விடுவிக்க பாகிஸ்தான் சாதகமான பதிலை தெரிவித்துள்ளது.

இம்ரான் கான் அறிவிப்பு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசுகையில், “பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேச நேற்று முயற்சி செய்தேன், பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என கூற நினைத்தேன். பதற்றத்தை தணிக்க வேண்டும் என்ற நிலை பயந்துவிட்டோம் என பொருள் கிடையாது. பாகிஸ்தானிடம் இந்திய விமானி ஒருவர் உள்ளார். அமைதியை விரும்பும் நடவடிக்கையாக, அவரை நாம் நாளை விடுதலை செய்கிறோம்,” என கூறியுள்ளார்.

இந்தியாவிடம் எப்படி ஒப்படைக்கப்படுவார்? 

இந்திய விமானி அபிநந்தன் நாளை இந்தியாவிடம் வாகா எல்லையில் ஒப்படைக்கப்படுவார்.

* இவ்விவராத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்யும் போது அந்நாட்டு வழிநடத்தலில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார்.

* இந்தியாவுடன் பேச்சுவார்த்தை செய்து, நேரடியாகவே ஒப்படைக்கப்படுவார்.

*  செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழு மூலம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார்.

அபிநந்தன் விடுதலை செய்யப்படுவார் என்ற செய்தி இருநாடுகள் இடையிலான பதற்றத்தை குறைக்கும் என பார்க்கப்படுகிறது. அவர் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்யும் 137 கோடி இந்திய மக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.