22 இடங்களில் வெற்றி… எடியூரப்பா பேச்சைவைத்து இந்தியாவை அவமதிக்கும் இம்ரான் கட்சி

Read Time:5 Minute, 52 Second

இந்திய விமானப்படையின் அதிரடி பா.ஜனதா 22 இடங்களில் வெற்றிப்பெற உதவியாக இருக்கும் என்ற எடியூரப்பாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானங்கள் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தி அழித்தன.  இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிற்குள் நுழைந்து ராணுவ நிலைகளை குறிவைத்தது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் ஏற்பட்டது. இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் சிக்கிக்கொண்டார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நடக்க கூடாது, இந்திய விமானி அபிநந்தனை திருப்பி இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்லாது உலக மக்களும் வலியுறுத்தி வருகிறார்கள். 

இந்நிலையில் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பேசுகையில், “சூழ்நிலை ஒவ்வொரு நாளும் பா.ஜனதாவிற்கு ஆதரவாகி வருகிறது. பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாத முகாம்களை அழித்த நடவடிக்கையானது இந்தியாவில் மோடியின் அலையை மீண்டும் கொண்டுவந்துள்ளது. இதனுடைய தாக்கம் வருகிற பாராளுமன்றத் தேர்தலில் தெரியும். கர்நாடகாவில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றிப்பெற உதவியாக இருக்கும்,” என்று கூறினார்.

இந்நிலையில் எடியூரப்பாவின் பேச்சு பா.ஜனதா கட்சிக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.  எடியூரப்பாவின் பேச்சை வைத்து இந்தியாவை அவமதிக்கும் பணியில் இம்ரான் கான் கட்சி ஈடுபட்டுள்ளது.


எடியூரப்பாவின் பேச்சு தொடர்பான செய்தியை விமர்சனத்துடன் டுவிட் செய்துள்ள இம்ரான் கான் கட்சி, “விமானப்படையின் பயணங்கள், போரை கிளப்பிவிடுதல், ராணுவ வீரர்கள் சிறைப்பிடிப்பு மற்றும் ஆபத்தில் உள்ள பலர் உயிர்கள் அனைத்தும் இந்தியாவின் ஆளும் கட்சியின் பிரதிநிதிகளின் பார்வையில் 22 இடங்களுக்கு சமனாக தெரிகிறது. தேர்தலுக்கு போர்தான் தேர்வா? #SayNoToWar,” என பதிவு செய்துள்ளது. தொடர்ச்சியான விமர்சனங்களை இம்ரான் கான் கட்சி முன்வைத்துள்ளது.  

22 இடங்களில் வெற்றிப்பெற உதவும் என எடியூரப்பா பேசியது அபிநந்தன் மற்றும் புல்வாமாவில் உயிரிந்த 40 வீரர்களை அவமதிக்கும் செயலாகும் என விமர்சனங்கள் டுவிட்டரில் வைக்கப்பட்டு வருகிறது. பா.ஜனதாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 

எடியூரப்பாவிடம் இருந்து ஒரு அபாயகரமான வெளிப்பாடு வந்துள்ளது. பாகிஸ்தான் வான்பகுதியில் இந்திய விமானப்படை அபாயகரமான பணியை மேற்கொள்வதற்கு பின்னால் அரசியல் திட்டம் இருந்ததா? அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியாவின் துணிச்சல்மிக்க வீரர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்களா?  விமானிகளுக்கு பாதிப்பு நேரிட்டால் என்ன செய்வது?  என செய்தியாளர் Sagarika Ghose கேள்வி எழுப்பியுள்ளார். 

எடியூரப்பா ‘பல்டி’

புல்வாமா தாக்குதலை பா.ஜனதா அரசியலாக்குகிறது என்ற விமர்சனங்கள் இருந்த நிலையில் எடியூரப்பாவின் பேச்சு எரியும் தீயில் எண்ணையை ஊற்றியது போன்றதாகியுள்ளது. பலதரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் தன்னுடைய பேச்சு தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார் எடியூரப்பா. 


இதுதொடர்பாக டுவிட்டரில் எடியூரப்பா வெளியிட்டுள்ள செய்தியில், “என்னுடைய பேச்சு தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது. மோடிஜியின் தலைமையில் கர்நாடகாவில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என்று நான் கூறுவது இது முதல்முறையல்ல, பா.ஜனதாவிற்கு சாதகமான சூழ்நிலை உள்ளது என்று கடந்த சில மாதங்களாக நான் பேசுகிறேன்”.  என எடியூரப்பா கூறியுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகிறது என்று அருண் ஜெட்லி நேற்று குற்றம் சாட்டியிருந்தார். இப்போது பா.ஜனதாவை சேர்ந்த எடியூரப்பாவே அரசியல் ஆதாய கருத்தை பதிவு செய்துள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.