இந்திய ஆவணங்கள் பாகிஸ்தானிடம் சிக்காதவாறு அழிக்க முயன்ற அபிநந்தன்…!

Read Time:6 Minute, 5 Second

பாகிஸ்தானிடம் பிடிபட்டுள்ள இந்திய விமானி அபிநந்தன் கீழே விழுந்ததும் தன்னிடம் இருந்த இந்திய ஆவணங்களை அழிக்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் புதன் கிழமை காலை இந்தியாவிற்குள் நுழைந்து இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சித்தது. இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததில் ஒரு பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அப்போது இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மிக் 21 விபத்துக்குள் சிக்கியது. இதிலிருந்த விமானி அபிநந்தன் பாராசூட்டில் தப்பிக்க எடுத்த முயற்சி பலனளிக்காமல் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார்.

தமிழகத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானில் பத்திரமாக உள்ளார், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அபிநந்தனை பத்திரமாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய ஆவணங்கள்…

பாகிஸ்தானிடம் பிடிபட்டுள்ள இந்திய விமானி அபிநந்தன் கீழே விழுந்ததும் தன்னிடம் இருந்த ஆவணங்கள் பாகிஸ்தானிடம் சிக்கிவிடக்கூடாது என்று சாமர்த்தியமாக செயல்பட்டார் என்பது தெரியவந்துள்ளது.


தொடர்பு செய்தி: 1999-ல் இந்திய விமானப்படை விமானி பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட போது நடந்தது என்ன?


பாகிஸ்தானிடம் ஆவணங்கள் சிக்கிவிடக்கூடாது என்று அழிக்க முயன்ற அபிநந்தன், வானில் சுட்டுக்கொண்டே ஓடினார் என உள்ளூர்வாசி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இந்திய விமானம் விழுந்ததை அடுத்து நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த முகமது ராசக் சவுத்ரி என்பவர் பகிர்ந்துக்கொண்ட தகவலை பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் டான் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. முகமது ராசக் பேசுகையில், இரண்டு விமானங்கள் சுடப்படுவதை பார்த்தேன். ஒன்று எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து இந்திய எல்லைக்குள் விழுந்தது. மற்றொரு விமானம் வெடித்து, அதிலிருந்து புகை வர ஆரம்பித்தது. அதிலிருந்த விமானி அபிநந்தன் பாராசூட் மூலம் பத்திரமாகத் தரையிறங்கினார். கைதுப்பாக்கியுடன் இருந்த அவர், அங்கிருந்த இளைஞர்களிடம் இது இந்தியாவா, பாகிஸ்தானா என்று கேட்டுள்ளார். அவர்கள் வேண்டுமென்றே இது இந்தியா என்று கூறியுள்ளனர்.

ஆவணங்கள்

உடனே இந்தியாவை ஆதரித்து கோஷமிட்டார் அபிநந்தன். இளைஞர்களிடம், தன்னுடைய முதுகுப்புறத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அப்போது இந்தியாவை ஆதரித்து அவர் பேசியது பாகிஸ்தான் இளைஞர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. உடனே கீழே கிடந்த கற்களை எடுத்து, அபிநந்தனை தாக்க ஆரம்பித்தனர். உடனே வானில் சுட்டவாறே ஓட ஆரம்பித்தார் அபிநந்தன். அவர்கள் அருகே வருவதைத் தடுக்கும் பொருட்டு தொடர்ந்து சுட்டுக்கொண்டே ஓடினார். இளைஞர்களால் துரத்தப்படுவதை உணர்ந்த அவர், சிறிய குளத்துக்குள் குதித்தார். தன்னிடமிருந்த இந்திய ஆவணங்களையும் வரைபடங்களையும் நீருக்குள் மூழ்கடித்தும் சிலவற்றை வாயால் சிதைக்கவும் முயற்சித்தார்.

அப்போது துரத்திய இளைஞர்களில் ஒருவர் அபிநந்தனின் காலில் சுட்டார். இதனிடையே அங்கு வந்த பாகிஸ்தான் ராணுவம் அவர்களிடம் இருந்து அபிநந்தனை மீட்டனர். நல்ல வேளை கோபமாக இருந்த இளைஞர்களால் அவருடைய உயிருக்கு எந்த பாதிப்பும் நேரிடவில்லை, கடவுளுக்கு நன்றி என கூறியுள்ளார்.

அபிநந்தன் கீழே விழுந்த பின்னர் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் பாகிஸ்தானால் வெளியிடப்பட்டது. அவரை சிலர் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றது. அவரை ராணுவம் தாக்கவில்லை, உள்ளூர் இளைஞர்கள் தாக்கினர் என பாகிஸ்தான் செய்தியாளர்கள் தகவலை டுவிட்டரில் வெளியிட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவ மையத்தில் அபிநந்தன் பேசிய வீடியோ வெளியாகியது. அப்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். இதுவரையில் தனது பெயர், பதவி, ஊர், மதம் தவிர வேறெதையும் அபிநந்தன் பாகிஸ்தானிடம் பகிரவில்லை என்றே தெரிகிறது.

அபிநந்தனின் வீரத்தையும், சாமர்த்தியாமான நடவடிக்கையையும், மன உறுதியையும் இந்திய மக்கள் பாராட்டி வருகிறார்கள். அவரை உடனடியாக பாகிஸ்தான் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையே அனைத்து தரப்பிலும் வைக்கப்படுகிறது.


தொடர்பு செய்தி: நமக்கு மற்றுமொரு போர் தேவையில்லை… மலாலா வேண்டுகோள்


தொடர்பு செய்தி: மசூத் அசார் விவகாரம் சீனாவிற்கு எதிராக களமிறங்கும் வல்லரசு நாடுகள்…!