மசூத் அசார் விவகாரம் சீனாவிற்கு எதிராக களமிறங்கும் வல்லரசு நாடுகள்…!

Read Time:4 Minute, 32 Second

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் புதிய தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன.

பாகிஸ்தானை தலைமையகமாக கொண்டு செயல்படும் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ முகமது இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கும் இவ்வியக்கமே பொறுப்பு ஏற்றது. இவ்வியக்கம் ஏற்கனவே 2001 தடை செய்யப்பட்டது. ஆனால் பாகிஸ்தானில் செயல்பட்டு வருகிறது. மசூத் அசாரை ஐ.நா.வின் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கும் வகையில் தீர்மானம் கொண்டுவர இந்தியா பல்வேறு முறை முயற்சித்தது. ஆனால் பாகிஸ்தானுடன் அனைத்து வகையிலும் நட்பு பாராட்டும் சீனா அதனை தடுக்கிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை எல்லாம் சீனா வீட்டோ அதிகாரம் கொண்டு தடுக்கிறது.

15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 10 நாடுகள் சுழற்சி முறையில் இடம்பிடிக்கிறது. வீட்டோ அதிகாரம் (மறுப்பு உரிமை) கொண்ட ஐநா அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷியா, சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்த உறுப்பு நாடுகளாக உள்ளது. 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஒவ்வொரு உறுப்பு நாடும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் வகிக்கின்றன. தற்போது இதன் தலைமைப் பொறுப்பை கினியா வகிக்கிறது.

மசூத் அசார்.

மார்ச் 1-ம் தேதி இந்தப் பொறுப்பை பிரான்ஸ் ஏற்கிறது. பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் நிரந்தர உறுப்பு நாடு என்பதால் அதற்கு ரத்து செய்யும் அதிகாரமும் உள்ளது.

இபோது புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து, உலக அளவில் எந்த நாட்டுக்கும் செல்ல தடைவிதித்து, சொத்துக்களை முடக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் புதிய தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானத்தை நேற்று தாக்கல் செய்துள்ளன. இந்த 3 நாடுகளின் கோரிக்கையை அடுத்த 10 நாட்களுக்குள் பாதுகாப்பு கவுன்சிலின் தடைவிதிக்கும் குழு முடிவெடுக்கும். பல்வேறு முறை தடையை ஏற்படுத்திய சீனாவிற்கு எதிராக வல்லரசு நாடுகள் இப்போது தீர்மானம் கொண்டு வருகிறது.

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க, ஐ.நா.வில் கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் 4-வது முயற்சியாக இந்த தீர்மானம் இருக்கும். இதற்கு முன் கடந்த 2009, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் 5 நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான சீனா, தனது ரத்து அதிகாரம் மூலம் இதற்கு தடை ஏற்படுத்திவிட்டது. ரஷியா ஏற்கனவே இந்தியாவின் நகர்வுக்கு ஆதரவு கொடுத்தது. இந்த முறை சீனாவின் நிலை என்னவாக இருக்கும் என்பதே உலக நாடுகளின் பார்வையாக உள்ளது. சீனா எவ்வாறு வாக்களிக்கப் போகிறது என்பது புதிராக இருந்து வருகிறது. ஏற்கனவே தடை நேரிட்ட போது அமெரிக்காவும், ஐ.நா.வும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை சொல்லில் மட்டும் இருக்க கூடாது, நடவடிக்கையிலும் இருக்க வேண்டும் என்று சீனாவை மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.