இந்திய விமானப்படை ஹீரோ அபிநந்தன் தாயகம் திரும்பினார், மக்கள் உற்சாக வரவேற்பு

Read Time:5 Minute, 19 Second

இந்திய விமானப்படை ஹீரோ அபிநந்தன் தாயகம் திரும்பினார், இந்தியா முழுவதும் மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு இடையே பாகிஸ்தானில் சிக்கிய இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்கிறோம் என இம்ரான் கான் அறிவித்தார். சமதானத்தை விரும்பும் நாங்கள் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுதலை செய்கிறோம் என பாகிஸ்தான் தெரிவித்தது. செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழு மூலம் இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெமூத் குரேஷி பேசுகையில், வாகா எல்லை வழியாக இந்திய விமானி அபிநந்தன் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

மக்கள் மகிழ்ச்சி

இதனைத் தொடர்ந்து வாகா எல்லையில் இந்திய விமானி அபிநந்தனை வரவேற்க பொதுமக்கள் குவியத் தொடங்கினர். கையில் இந்திய கொடியுடன் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என பலரும் அபிநந்தனை வரவேற்க காத்திருக்கின்றனர். இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.இந்தியா முழுவதும் மக்கள் தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்தனர். இதற்கிடையே அடாரி-வாகா எல்லையில் வழக்கமாக மாலை நேரத்தில் எல்லைப் பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும், கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடக்கும். அபிநந்தன் அழைத்துவரப்படுவதையடுத்து அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

வாகா எல்லையில்.

பாகிஸ்தானில் அபிநந்தன் பிடிபட்டதில் தொடங்கி, விடுவிக்கப்பட்டது வரை டுவிட்டர் தளத்தில் அவருடைய பெயர் #Abhinandan ட்ரெண்ட்டாகி கொண்டே இருந்தது. அபிநந்தன் இந்திய வசம் ஒப்படைக்கப்படுவதை கொண்டாடும் வகையில் #WelcomeHomeAbhinandan என்ற ஹேஷ்டேக் உலகளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட்டாகியது. இந்திய திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், முதல்வர்கள், ஆளுநர்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவருமே #WelcomeHomeAbhinandan என்ற ஹேஷ்டேக்கில் தங்களுடைய வாழ்த்தை பகிர்ந்த வண்ணமுள்ளனர்.

இந்தியாவிடம் ஒப்படைப்பு

மாலை 4 மணியளவில் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கால தாமதம் ஆனது. மக்கள் காத்திருந்த நிலையில் இருதரப்பிலும் எந்தஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. பின்னர் 9 மணியளவில் இந்தியா வருகிறார் என தகவல் வெளியாகியது. ராவல் பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தில் இருந்த அபிநந்தன் லாகூர் வரை விமானத்தில் அழைத்து வரப்பட்டார். பின்னர் லாகூரில் இருந்து கார் மூலம் அட்டாரி எல்லைக்கு அழைத்து வரப்பட்டார். அபிநந்தன் வெள்ளிக்கிழமை இரவு 9.20 மணியளவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அவருடன் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு வீரர் ஆகியோர் வந்தனர். அவரை வாகா எல்லைக்கு அழைத்து வந்த பிறகு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு கையெழுத்திடப்பட்டன. செய்தியாளர்களிடம் மிகச் சுருக்கமாக அவர் “திரும்பியதில் மகிழ்ச்சி” என்றார். அவர் தற்போது மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வார். இந்திய விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் அபிநந்தனை வரவேற்றார். அவர் முறையான வழக்கப்படி அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். நீண்ட நேர காத்திருப்புக்குப்பின் அபிநந்தன் தாய் மண்ணில் காலடி எடுத்து வைத்தார். மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியாவின் ஹீரோவான அவரை பாராட்டும் விதமாக பலரும் டுவிட்டரில் தகவலை பகிர்ந்து வருகிறார்கள்.

இதற்கிடையே பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், “பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானன் இந்தியாவுக்கு இன்று திரும்பினார். பாகிஸ்தான் வான்வெளி விதிமுறைகளை மீறியதற்காக கைது செய்யப்பட்ட அவர் பன்னாட்டுச் சட்ட விதிமுறைகளுக்கு இணங்க மரியாதையாக நடத்தப்பட்டார். அவர் இந்தியா திரும்புவதை நல்லெண்ணச் செய்கையாகவும் இந்தியாவுடனனா பதற்றத் தணிப்புச் செயலாகவும் பிரதமர் இம்ரான் அறிவித்தார்” என்று கூறப்பட்டுள்ளது.