இபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலைச் சின்னம்… 10 குறிப்புக்கள்

Read Time:4 Minute, 47 Second

இரட்டை இலை சின்னம் மற்றும் அஇஅதிமுக என்ற பெயர் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்), துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அணிக்கே சொந்தம் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் நடந்தவையை பார்க்கலாம்…


1) முதல்வராகவும் அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016, டிசம்பர் 5-இல் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அதிமுக இரு அணிகளாகப் பிரிந்தது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது இரட்டை இலைச் சின்னத்துக்கு இரு தரப்பும் உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கிவைத்து உத்தரவிட்டது.


2) எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்ததை அடுத்து இபிஎஸ்- ஓபிஎஸ் அணியும், டிடிவி தினகரன் தரப்பும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை நாடினர். தேர்தல் ஆணையத்தில் ஏராளமான பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன.


3) தேர்தல் ஆணையம் கடந்த 2017, நவம்பர் 23-ல் இரட்டை இலைச் சின்னத்தை இபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கி உத்தரவிட்டது. அவர்கள்தான் உண்மையான அஇஅதிமுக என்றும், கட்சி அவர்களது கட்டுப்பாட்டில்தான் இயங்கும் என்றும் அறிவித்தது.ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி.

4) அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) என்ற புதிய கட்சியை ஆரம்பித்த டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


5) இரட்டை இலைச் சின்னம் இபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிந்து கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.


6) இவ்வழக்கில் தீர்ப்பை வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம், இரட்டை இலை சின்னம் மற்றும் அஇஅதிமுக என்ற பெயர் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்), துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அணிக்கே சொந்தம் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்தது.


7) இரு தரப்பினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களில் 325 பிரமாணப் பத்திரங்கள் போலியானவை என்று குற்றம்சாட்டப்பட்டாலும், எதிர்தரப்பினருக்குத்தான் (இபிஎஸ் – ஓபிஎஸ்) கட்சியின் அதிக பெரும்பான்மை ஆதரவு உள்ளது.


8) ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிக்கு தமிழகம், புதுச்சேரி சேர்த்து மொத்தம் 157 எம்.பி., எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. ஆனால் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள சசிகலா, டிடிவி தினகரன் அணிக்கு மொத்தம் 26 எம்.பி., எம்எல்ஏக்களின் ஆதரவே உள்ளது. அதில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் சரியான உத்தரவைத்தான் பிறப்பித்துள்ளது. எனவே, அதில் தலையிட அவசியம் இல்லை என்பதால், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டது.


9) இதையடுத்து, குக்கர் சின்னம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதால், 15 நாட்களுக்கு அந்த சின்னத்தை வேறு யாருக்கும் ஒதுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு சசிகலா தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கோரிக்கை விடுத்தார். இதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.


10) உண்மையான அதிமுக நாங்கள்தான் என்பது நீதிமன்றம் மூலமாக மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.