‘‘பாகிஸ்தானின் எந்தஒரு அத்துமீறலுக்கும் பதிலடி கொடுப்போம்’’ இந்திய முப்படைகள் முழக்கம்

Read Time:4 Minute, 52 Second

பாகிஸ்தானின் எந்தஒரு அத்துமீறலுக்கும் பதிலடியை கொடுக்க தயார் நிலையில் உள்ளோம் என இந்திய முப்படைகள் தெரிவித்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு இடையே சர்வதே நாடுகளின் வலியுறுத்தல் காரணமாக இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். விடுதலைக்கு பேச்சுவார்த்தை என்பதை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. அபிநந்தன் விடுதலை நல்லெண்ணத்தின் அடிப்படையில் என்று பாகிஸ்தான் கூறியதை, ஜெனீவா ஒப்பந்தத்தின்படி விடுதலை என கூறிவிட்டது.

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்க முடியாது என்பதில் ஸ்திரமாக இருக்கும் இந்தியா, பாகிஸ்தான் பயங்கரவாதம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் எடுப்போம் என்பதை உறுதிபடுத்திவிட்டது.

இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் சூழ்ந்த நிலையில் அபிநந்தன் விடுதலை அதனை தணிப்பதாக அமைந்தது. டெல்லியில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு வெளியே இந்திய முப்படை உயர் அதிகாரிகள் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்த முயற்சித்து பாகிஸ்தான் பதற்றமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் எந்தஒரு அத்துமீறலுக்கும் பதிலடியை கொடுக்க தயார் நிலையில் உள்ளோம்’ என்றும் தெரிவித்தனர்.

ஜெனீவா ஒப்பந்தம்

இந்திய விமானி அபிநந்தனை நல்லெண்ண நடவடிக்கையாக விடுதலை செய்கிறோம் என பாகிஸ்தான் கூறியது. இவ்விவகாரத்தை அப்படி கருதுகிறீர்களா? என்று முப்படை அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் கேள்வியை எழுப்பினர்.

அபிநந்தன் விடுதலை ஜெனீவா ஒப்பந்தப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே பார்க்கிறோம். அபிநந்தன் விடுதலையில் மகிழ்ச்சி அடைகிறோம். அவரை எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகுதான், மேற்கொண்டு கருத்து தெரிவிப்போம்,

என விமானப்படை துணை தளபதி ஆர்.ஜி.கே.கபூர் கூறினார்.

எப்-17 விமானங்கள்

இந்திய வான் பகுதிக்குள் அத்துமீறிய பாகிஸ்தான், அமெரிக்க தயாரிப்பு எப்-17 ரக விமானங்களை பயன்படுத்தவில்லை என்று மறுக்கிறது. பாகிஸ்தானின் எப். 17 விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் என இந்திய விமானப்படை தெரிவித்தது.

பாகிஸ்தான் அம்ராம் ஏவுகணையின் சிதைவு பாகம்.

இது தொடர்பாக முப்படை வீரர்கள் பதில் அளிக்கையில்,

பாகிஸ்தான் விமானப்படை ‘அம்ராம்’ ஏவுகணைகளை பயன்படுத்தவில்லை என்று பொய் சொன்னது. ஆனால், அந்த ஏவுகணையைத்தான் பயன்படுத்தியது. (வெடித்த ஏவுகணையின் ஒரு பகுதியை காட்டினார்). பாகிஸ்தான் வீசிய குண்டு, இந்திய ராணுவ நிலைய வளாகத்தின் எல்லையில் விழுந்தது. ஆனால் அது இலக்கை தாக்கவில்லை. ராணுவ நிலைகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை

என்றனர்.

எப் 17 விமானங்களை பயன்படுத்தவில்லை என பாகிஸ்தான் கூறுவதை பொய்யென நிரூபிக்க ஆதாரம் உள்ளது என்றனர். அம்ராம் ஏவுகணையின் பயன்பாடே எப்17 விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதற்கான ஆதாரமாகும்.

பதிலடி கொடுப்போம்

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாடுகோடு மற்றும் சர்வதேச எல்லையில் இந்திய ராணுவம் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ இந்திய ராணுவம் உறுதி பூண்டுள்ளது. ஏவுகணை தடுப்பு சாதனங்கள், எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.தீய சக்திகளுக்கு புகலிடம் தருபவர்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்.

பாகிஸ்தான் எத்தகைய அத்துமீறலில் ஈடுபட்டாலும் பதிலடி கொடுப்போம்

என்று இந்திய ராணுவ மேஜர் ஜெனரல் சுரிந்தர்சிங் மஹல் கூறினார்.