சிவனை சிவனே வழிப்பட்ட தலம்…!

Read Time:18 Minute, 49 Second
Page Visited: 608
சிவனை சிவனே வழிப்பட்ட தலம்…!

பிரபஞ்சத்தின் வடிவமாகவும், அணுவுக்குள் இயக்கமாகவும் இருப்பவரான பரம்பொருளான சிவபெருமான் உலக ஜீவராசிகளை மட்டுமல்லாமல், தேவர்களையும் மற்ற தெய்வங்களையும் காத்து அருள்புரிகிறார். ஒவ்வொரு கோவில்களுக்கு பின்னாலும் பெரும் வரலாறு இருக்கும். சில கோவில்களில் உள்ள இறைவனை பிற தெய்வங்கள் வழிபாடு செய்யும் புராணங்களை கேட்டுள்ளோம். விநாயகர், பெருமாள், அம்பிகை, முருகன், பிரம்மன் தங்களுக்கு சோதனை நேரிட்ட போது மூலப் பொருளான சிவனையே வழிப்பட்டு விமோசனம் பெற்றுள்ளனர். அப்படி, தெய்வங்கள் வழிபட்ட சிவத்தலங்களை சிலவற்றை பார்ப்போம்.

கணபதி வழிபட்ட தலம் – கணபதீஸ்வரர், திருச்செங்காட்டங்குடி

மகத நாட்டை ஆண்ட மன்னனுக்கு விபுதை என்ற அசுர குலப் பெண் மனைவியாக இருந்தாள். அவளுக்கு யானைத் தலையும், அசுர உடலும் உடைய மகன் பிறந்தான். அதனால் அவன் கஜமுகாசுரன் என்று அழைக்கப்பட்டான். சிவனை நோக்கித் தவமிருந்து சிறப்பான வரம் பெற்றதால், அவனை யாராலும் வெல்ல முடியாத நிலை இருந்து வந்தது. அகந்தை கொண்ட கஜமுகன், கொடுங்கோலாட்சி புரிந்து வந்தான். இதனால் தேவர்களும், முனிவர்களும் சிவனிடம் முறையிட்டனர். வரம் கொடுத்த தன்னால் அவனை அழிக்க இயலாது என்பதால், என் மூலமாக யானை முகத்துடன் ஒரு மகன் தோன்றுவான்; அவன் மூலம் உங்கள் குறை நீங்கும்’ என்றார் பெருமான்.

திருச்செங்காட்டங்குடி கோவில்.

அதன்படியே விநாயகப் பெருமான் தோன்றி, கஜமுகாசுரனை ஆயுதங்களால் கொல்லாமல், தனது வலக் கொம்பை ஒடித்து, அதனை ஏவி அவனைக் கொன்றார். ஆனால், வரத்தின் பலனால் கஜமுகன் பெருச்சாளியாக மாறி சண்டையிட்டான். கணபதி தன் ஆற்றலால் பெருச்சாளியின் ஆற்றலை அடக்கி, அவரையே தனது வாகனமாக ஏற்றுக் கொண்டார். அசுரனைக் கொன்றபோது, இவ்வூரில் செங்குருதி ஆறாக ஓடியது. அதனால் இத்தலம் செங்காடு எனப் பெயர் பெற்றது.

போரை சித்தரிக்கும் காட்சி.

சிவபக்தனான கஜமுகனை கொன்றதால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொண்ட தலம்தான் கணபதீச்சுரம் என்னும் பெயருடைய திருச்செங்காட்டங்குடி. கணபதிக்கு அருள்புரிந்த சிவபெருமான், `கணபதீஸ்வரர்’ என்னும் திருப்பெயருடன் அருள்கிறார். இவரை வழிபடும் பக்தர்களின் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். இந்த ஐதீகம், மார்கழி தோறும் வளர்பிறையில் சஷ்டியன்று விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருவாரூரில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் சன்னாநல்லூர் உள்ளது. இங்கிருந்து 11 கி.மீ., சென்றால் திருப்புகலூரை அடையலாம். அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம்.

பெருமாள் வழிபட்ட தலம் – வீழிநாதேஸ்வரர், திருவீழிமிழலை

சிவனாரின் நெற்றியிலிருந்து வழிந்த வியர்வை துளியிலிருந்து ஜலந்தரன் என்னும் அசுரன் தோன்றினான். தேவர்களையும், பிரம்மா, விஷ்ணு போன்ற தெய்வங்களையும் வெற்றி கொண்ட ஜலந்தரன், சிவபெருமானையும் எதிர்த்துப் போரிடச் சென்றான். சிவனார், தரையில் ஒரு சக்கரத்தை வரைந்து `அதைப் பெயர்த்து எடுத்த பிறகு தன்னுடன் போருக்கு வரலாம்’ என்று கூறினார்.

ஜலந்தரன் அந்தச் சக்கரத்தைப் பெயர்த்தெடுத்ததுடன், அதைத் தன் தலையிலும் வைத்துக் கொண்டான். அதன் விளைவாக அவன் தன் அழிவை தானே தேடிக்கொண்டான். அனைத்து உலகங்களையும் அழிக்கவல்ல அந்த சுதர்சன சக்கரத்தைப் பெற விரும்பிய திருமால், சிவபெருமானைக் குறித்துத் தவமியற்றினார்.

வீழிநாதேஸ்வரர் கோவில்.

ஆயிரத்தெட்டு தாமரை மலர்களைப் பறித்து வந்த திருமால் ஆதிசிவனாரை பூஜித்தார். அவரை சோதிக்கத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், ஒரு தாமரை மலரை மறைத்துவிட்டார். மனம் தளராத திருமால், தன் கண்களில் ஒரு கண்ணையே பிடுங்கி சிவபெருமானுக்கு அர்ச்சிக்கத் துணிந்தார். அவருடைய உறுதியான பக்திக்கு இரங்கிய சிவபெருமான், திருமாலுக்கு தரிசனம் தந்ததுடன், சுதர்சன சக்கரத்தையும் வழங்கி அருள்புரிந்தார். திருமால் 1008 மலர்கள் மூலம் சிவபெருமானை வணங்கி சக்கராயுதத்தைப் பெற்ற தலம் திருவீழிமிழலை(கல்யாணசுந்தரேஸ்வரர்). திருமாலுக்குச் சக்கரத்தை வழங்கிய சிவபெருமான் வீழிநாதேஸ்வரராக அருள்புரிகிறார்.

பெருமாள் வழிபட்ட தலம்.

இவரை வணங்கினால் கல்யாண வரம் அருள்வார் என்பது நம்பிக்கை. இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் 28 கிலோ மீட்டர் தொலைவில் பூந்தோட்டம் உள்ளது, அங்கிருந்து கோவில் உள்ள தென்கரைக்கு கார், ஆட்டோவில் செல்லலாம். திருவாரூரில் இருந்தும் பூந்தோட்டம் செல்லலாம்.

அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர்

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களுள் மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயில் மிகவும் முக்கியமானது.

கபாலீஸ்வரர் கோவில்.

சிவபெருமானிடம் உமையவள் பார்வதி தேவி ஐந்தெழுத்தின் பெருமையையும், திருநீற்றின் மகிமையையும் விளக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி, சிவபெருமானும் விளக்கமளித்தபோது, மயில் ஒன்று தோகை விரித்து அழகாக நடனம் ஆடிக்கொண்டிருக்க அதன்பால் உமையவள் கவனம் திரும்பியது. இதனால் கோபமடைந்த சிவபெருமான் பார்வதி தேவியைப் பார்த்து, பூலோகத்தில் நீ மயிலாக பிறப்பாய் என்று சாபம் கொடுத்தார்.

அம்பிகை மயில் உருவத்தில் சிவனை வழிபட்ட தலம்.

இதற்கு விமோசனம் என்ன என்று உமையவள் கேட்டபோது, தொண்டைநாட்டிற்குச் சென்று தவம் இயற்றுவாய் என்று சிவபெருமான் கூறினார். அதன்படி, இந்த திருத்தலத்தில் அமைந்துள்ள புன்னை மரத்தின் கீழ் சிவலிங்கத்தை உமையவள் பார்வதி தேவி பக்தி சிரத்தையுடன் மயில் உருவில் சிவபெருமானை வழிபட, அவர் முன் தோன்றிய சிவபெருமான் சாபவிமோசனம் கிடைக்கப்பெற்றாள் அதன் காரணமாக கற்பகவல்லி என்று பெயர் சூட்டினார். அப்போது உமையவள், பார்வதி மயில் உருவில் பரமனை நோக்கி மயில் உருவில் தவம் செய்து உயர்ந்ததால் இப்பகுதிக்கு மயிலை என்னும் பெயர் விளங்க வேண்டும் என்றும் என்னுடன் தாங்கள் பிரியாது இங்கிருந்து பக்தர்களுக்கு அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தத் தலத்தில் வழிபடுவோருக்கு மன நிம்மதி, தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம். கோவில் சென்னையில் உள்ளது.

முருகன் வழிபட்ட தலம் – குமரக்கோட்டம், சேனாதிபதீஸ்வரர்

ஓம் எனும் பிரணவப் பொருள் தெரியாததால், பிரம்மாவை சிறை வைத்தார் முருகக் கடவுள் என்பது தெரியும்தானே. அப்போது பிரம்மாவைப் போன்று, ருத்திராட்ச மாலை, கையில் கமண்டலம் கொண்டு பிரம்மசாஸ்தாவாக திருக்கோலம் பூண்டு, இங்கே காட்சி தருகிறார் கந்தவேலன்.

`படைப்புக் கடவுள் நான். அனைத்தையும் அறிந்தவன் நான் ஒருவன் மட்டுமே’ என்று கர்வம் ஏற்பட்டது பிரம்மதேவருக்கு. அவருடைய கர்வத்தைப் போக்கத் திருவுள்ளம் கொண்ட முருகப் பெருமான், அவரிடம் பிரணவப் பொருளை விளக்கும்படி கேட்டார். கர்வத்தின் காரணமாகப் பிரணவப் பொருள் தெரியாமல் விழித்த பிரம்மதேவரை சிறையில் அடைத்து, தானே படைக்கும் தொழிலை மேற்கொண்டார். நடந்த நிகழ்ச்சியை அறிந்துகொண்ட சிவபெருமான், முருகனிடம் பிரணவப் பொருளின் விளக்கம் கேட்டார்.

குமரக்கோட்டம் கோவில்.

சீடராக இருந்து கேட்டால் உபதேசிக்கப்படும் என்று முருகப்பெருமான் கூறவே, சிவபெருமானும் சீடனாக இருந்து உபதேசம் பெற்றார். பிரணவத்தின் பொருளை மண்டியிட்டு முருகப்பெருமானிடமிருந்து ஈசனும் கேட்டுக்கொண்டார். என்னதான் திருவிளையாடல் என்றாலும், குருவின் அம்சமான ஈசனையே சீடனாகக்கொண்டது தோஷம் என்று அன்னை சக்தியின் மூலம் அறிந்தார் முருகப்பெருமான். தனக்கேற்பட்ட தோஷம் நீங்குவதற்காக, நகரங்களில் சிறந்ததும் புண்ணியம் மிகுந்ததுமான காஞ்சி நகருக்கு வந்தார். அங்கே ஒரு மாமரத்தடியில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

சிவபெருமான் சீடனாக இருந்து உபதேசம் பெற்றார்.

முருகர் வழிபட்ட ஈசன் ‘சேனாபதீஸ்வரர்’ என்று போற்றப்பட்டார். அந்தத் தலமும் ‘சேனாபதீஸ்வரம்’ என்று உருவானது. மாமரத்தடியில் வழிபட்ட குமரக்கோட்டம் முருகன் ‘மாவடி கந்தன்’ எனப் பெயர் பெற்றார். இவரை வழிபட்டால், வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படுவதுடன், ஞானமும் ஸித்திக்கும். குமரக்கோட்டம் முருகன் கோவிலில் முருகப் பெருமானுக்கு ஐந்து தலை நாகமும், வள்ளி, தெய்வானைக்கு மூன்று தலை நாகமும் குடைபிடித்தபடி உள்ளன. இந்த கோலத்தை ‘கல்யாண சுந்தரர்’ கோலம் என்கிறார்கள். இங்கு வைகாசி பிரம்மோற்சவத்தின் 11ம் நாள், முருகனுக்கும் வள்ளிக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். அந்த சமயம் அவர்களை வழிபட்டால் அனைத்து வகையான நாக தோஷங்களும் நிவர்த்தியாகும் என்கிறார்கள். காஞ்சிபுரம் மத்தியில் இக்கோவில் உள்ளது.

பிரம்மன் வழிபட்ட தலம் – பிடவூர், பிரம்மபுரீஸ்வரர்

‘சிவபெருமானுக்கு நிகரானவன் நான்; அவருக்கும் தலைகள் ஐந்து; எனக்கும் ஐந்து தலைகள்’ என்று ஆணவம் கொண்டிருக்க… பிரம்மாவின் தலையில் ஒன்றைக் கொய்தார் சிவபெருமான். படைப்புத் தொழிலையும் பறித்துவிட்டார். இழந்த ஆற்றலைப் பெறுவதற்காக சிவனாரையே பூஜித்து, வரம் பெற்றார்! பிரம்மா வணங்கியதால் சிவனாருக்கு பிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம் உண்டானது! தவறை உணர்ந்த நான்முகன், சிவபெருமானிடம் சாப விமோசனம் அருளும்படிக் கேட்டார்.

பிரம்மபுரீஸ்வரர் கோவில்.

பூலோகத்தில் ஆங்காங்கே சிவலிங்கத்தை நிறுவித் தொடர்ந்து வழிபட்டு வந்தால், உரிய நேரத்தில் விமோசனம் தருவதாக சிவபெருமான் தெரிவித்தார். அதன்படி பூமியில் பல இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட பிரம்மதேவர், பிடவூர் என்னும் தலத்தில் சிவபெருமானை வழிபட்டபோது, சிவபெருமான் அவருக்கு தரிசனம் தந்து பிரம்மதேவரின் சாபத்தை நீக்கியதுடன், படைப்புத் தொழில் மேற்கொள்வதற்கான ஆற்றலையும் வழங்கினார். பிடவூர் தலம்தான் பிரசித்தி பெற்ற திருப்பட்டூர் தலம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மதேவர் வழிபட்டதால் இந்தத் தலத்து இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்னும் திருப்பெயர் கொண்டு அருள்கிறார்.

இவரை வழிபட்டால் நம்முடைய தலைவிதியை மாற்றி நல்வாழ்க்கை அருள்புரிவார் என்பது ஐதீகம்.

பிரம்மபுரீஸ்வரர் கோவில்.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது சிறுகனூர். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், 5 கி.மீ/. தொலைவில் உள்ளது திருப்பட்டூர். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது.

சிவன் வழிபட்ட தலம் – திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் வரும் பக்தர்கள் தீபத்தன்று அதனை மிகுந்த விசேஷமாகக் கருதுகின்றனர். திருவண்ணாமலையில் மலையே தெய்வமாகக் கருதப்படுவதால் மலைவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காகும். அருணன் என்றால் சூரியன், நெருப்பின் நிறமான சிவப்பைக் குறிக்கும். அசலம் என்றால் கிரி என்றும் மலை என்றும் பொருள். எனவே அருணாசலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருள்.

திருவண்ணாமலை.

நம்முடைய துன்பம் தீருவதற்காக நாம் இறைவனை வழிபடுவது இயல்புதான். ஆனால், நம் பொருட்டு, நம் துன்பங்கள் எல்லாம் நீங்கி மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காக, இறைவன் தன்னைத் தானே வழிபடும் அற்புத அருளாடலும் இந்தப் புண்ணிய பூமியில் நடைபெறவே செய்கிறது. ஈசனின் அற்புத அருளாடல் நிகழும் அந்தத் தலம்தான் திருவண்ணாமலை திருத்தலம். திருவண்ணாமலையில் கிரிவலத்தின்போது சிவபெருமானே அருணாசலேஸ்வரரை வழிபடுவதாக ஐதீகம். கிரிவலம் வருவதன் மூலம் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபடலாம் என்பது ஐதீகம்.

சிவன்.

இந்த கிரிவலப் பாதையிலுள்ள அஷ்டலிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் எண்ணற்றவை என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் பக்தர்கள். இந்திர லிங்கத்தை வழிபடுவதால் நீண்ட ஆயுளுடன் புகழும் கிடைக்கும். அக்னி லிங்கம் நோய்கள் மற்றும் பயம் நீக்கும். யம லிங்கம் நீண்ட ஆயுள் தரும், நிருதி லிங்கம் உடல் நலம், செல்வம், மழலைச் செல்வம், புகழ் போன்றவற்றை அருளும். வருண லிங்கம் நீர் சம்பந்தப்பட்ட நோயைத் தீர்க்கும். வாயு லிங்கம் இதயம், மூச்சு தொடர்பான நோயைப் போக்கும். குபேர லிங்கம் செல்வமும் உன்னத வாழ்க்கையும் தரும். ஈசான்ய லிங்கம் மன அமைதி தரும்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %