மகா சிவராத்திரியில் விரதம் இருக்கும் முறை…!

Read Time:6 Minute, 50 Second

எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் சிவபெருமான். நாம் அறிந்தோ, அறியாமலோ பிற உயிர்களுக்கு தீங்கு விளைவித்தாலும் அது இறைவனுக்கு இழைக்கும் தீங்காகவே பார்க்கப்படுகிறது.

நாம் செய்யும் பாவங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, புண்ணியங்களை மட்டுமே சேர்த்துக் கொள்ளும் ஒரு நாள்தான் சிவராத்திரி. அப்படியென்றால் பிற உயிர்களை துன்புறுத்திவிட்டு, புனித நீராடினால் பாவம் போய்விடுமா? என்பது பொருள் கிடையாது. இனி செய்யக்கூடாது என்பதுதான் நோக்கம்.

மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தியில் வரும் சிவராத்திரியே, ‘மகா சிவராத்திரி’ என்று கொண்டாடப்படுகிறது. உலகிற்கு ஆதாரமான சிவபெருமான், உலக உயிர்களை படைத்ததும், தனக்குள் ஐக்கியப்படுத்தியதும் இந்த நாளில் தான் என்கிறது புராணங்கள்.

சிவசக்தி.

விரத முறை

மகாசிவராத்திரி விரதம் இருப்பவர்கள் சிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். மறு நாள் சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும்போது காலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை (பூஜைகள் போன்றவற்றை) செய்தபின், வீட்டில் உள்ள சிவன் படத்திற்கு சிவபூஜை செய்து அருகில் உள்ள சிவன்கோவில்களுக்கு சென்று சிவனை தரிசனம் செய்ய வேண்டும்.

அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும்.

மகாசிவராத்திரி பூஜையை வீட்டில் செய்ய விரும்புபவர்கள் அதிகாலையில் நீராடி, தூய ஆடைகளை அணிந்து பகல் முழுவதும் ஜெபம், தியானம், பாராயணம் போன்றவைகளில் ஈடுபட வேண்டும். மாலையில் வீட்டில் ஒரு தூய்மையான இடத்தில் அல்லது பூஜை அறையில் சிவன் படத்தையோ அல்லது சிவலிங்கத்தையோ அலங்காரம் செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

இரவு 4 காலமும் பூஜை செய்ய வேண்டும். இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் குறைந்த பட்சம் லிங்கோற்பவ காலத்திலாவது கண்டிப்பாக கண்விழித்து பூஜை செய்ய வேண்டும். அதிகாலை 3 மணிக்கு வில்வ இலை மற்றும் மலர்களால் தீபாராதனை காட்ட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து “சிவாய நம”, “நமச்சிவாய” என அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லி தியானிக்கலாம்.

முதல் ஜாமத்தில் (மாலை 6 முதல் 9 மணி வரை): ஸ்வாமிக்குப் பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். பசும் பால், பசுந் தயிர், பசு நெய், பசுவின் சிறுநீர், பசுஞ்சாணம்- இந்த ஐந்தும் கலந்தது, பஞ்சகவ்யம் (அளவு-1:2:3:1:1). அகில் குழம்பும், வில்வமும் சாற்ற வேண்டும். தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பயத்தம் பருப்பு கலந்த பொங்கலை நைவேத்தியம் செய்து, ரிக் வேதம் சொல்ல வேண்டும்.

இரண்டாம் ஜாமத்தில் (இரவு 9 முதல் 12 மணி வரை): பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும். தேன், சர்க்கரை, தயிர், பால், நெய் ஆகிய ஐந்தும் கலந்தது பஞ்சாமிர்தம். இதில் தயிரை நீக்கி வாழைப்பழத்தைச் சேர்ப்பதும் உண்டு. சந்தனமும், தாமரைப் பூவும் சாற்ற வேண்டும். துளசியால் அர்ச்சனை செய்து பாயசம் நைவேத்தியம் செய்து, யஜுர் வேதம் சொல்ல வேண்டும்.

மூன்றாம் ஜாமத்தில் (இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை): தேன் அபிஷேகம் செய்ய வேண்டும். அரைத்த பச்சைக் கற்பூரம், ஜாதி முல்லை மலர் சாற்ற வேண்டும். மூன்று இலைகள் கொண்ட வில்வத்தால் அர்ச்சனை செய்து, எள் சாதம் நைவேத்தியம் செய்து, சாம வேதம் சொல்ல வேண்டும்.

நான்காம் ஜாமத்தில் (அதிகாலை 3 முதல் 6 மணி வரை): கரும்புச் சாறினால் அபிஷேகம் செய்து, அரைத்த குங்குமப் பூவுடன் நந்தியாவட்டை மலர் சாற்ற வேண்டும். நீலோத்பல மலரால் அர்ச்சனை செய்து சுத்தமான அன்னத்தை நைவேத்தியம் செய்து, அதர்வண வேதம் சொல்ல வேண்டும்.

வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள் சிவலாயங்களுக்கு சென்று நான்கு காலங்களிலும் நடைபெறும் விசே‌ஷ பூஜை அபிஷேகங்களில் கலந்து கொள்ளலாம். பால், தயிர், நெய், தேன், பூஜை பொருட்களை கொடுக்கலாம்.

விடிந்ததும் நீராடி, நித்ய கடன்களை முடித்து விட்டு சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து பிரார்த்தனை செய்து ஒரு சில ஏழைகளுக்காவது உணவளித்து, அதன் பின் நாம் உண்ண வேண்டும். இவ்வளவையும் சூரியன் உதித்து இரண்டரை மணி நேரத்துக்குள் செய்ய வேண்டும்.

சிவராத்திரி நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் தண்ணீர், பால், பழங்களை சாப்பிடலாம்.

செய்யக்கூடாதவை!

பகலில் தூங்கக் கூடாது. சிவராத்திரி அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, கைபேசிகளில் விளையாடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு.

சிவராத்திரி உபவாசம் என்பது நியதி. உபவாசம் என்ற சொல்லுக்கு சமீபமாக இருத்தல் என்பது பொருள். ஆகவே உடலாலும் மனதாலும் சிவ சிந்தனையிடன் இருக்க வேண்டுமே தவிர, தொலைக்காட்சியில் பக்தி படம், பாடல்கள் போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் என்றாலும் அதனையும் பார்த்தல் கூடாது.


தொடர்பு செய்தி: